Type Here to Get Search Results !

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளும், தீர்வுகளும்

பருவநிலை மாற்றம்
  • சூரிய குடும்பத்தில் பூமி ஒரு சிறப்பு கிரகம் என்றால் மிகையாகாது. பூமி சூரியனுக்கு அருகில் உள்ளதால் அதிகமான சக்தியை நேரடியாக சூரியனிலிருந்து பெறுகிறது. பூமியை சுற்றியுள்ள வெப்பம் உயிரினங்கள் தோன்றும் வகையில் உள்ளது. 
  • உயிரினங்கள் தழைத்தோங்குவதை உறுதி செய்யும் வகையில் பசுமைக்குடில் வாயுக்கள் பூமியை போர்வைபோல மூடி இருக்கின்றன. பசுமைக்குடில் வாயுக்களில் முக்கியமான வாயு கரியமிலவாயுவாகும். புவி வெப்பமயமாதலுக்கும் இதுவே முக்கிய காரணம்.
  • நிலக்கரி இயற்கை எரிவாயு போன்றவை மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக லட்சக் கணக்கான டன் கணக்கில் எரிக்கப்படுவதால் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவை அதிகரித்து வளி மண்டலத்தில் வெப்பமும் அதிகரிக்கிறது.
  • கரியமில வாயுவின் அடர்த்தி வளிமண்டலத்தில் அதிகரிக்கும்போது பூமி மேலும் வெப்பமடைகிறது. தொழிற்சாலைகள், வாகனங்கள் இயக்கத்தின் மூலம் வளி மண்டலத்தில் கரியமிலவாயு சேர்வது அதிகமாகிறது.
எப்படி பூமி வெப்பமாகிறது?

  • உலகத்தின் நாற்பது சதவிகித மின்தேவை நிலக்கரியை எரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. இத்தகைய செயற்கையான கரியமிலவாயு வெளியேற்றத்தில் 37 சதவிகிதம் எரிசக்தி துறையால் ஏற்படுகிறது.
  • இந்த அபரிமிதமான கரியமிலவாயு வெளியெற்றம் பூவியின் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. சூரியனிலிருந்து வரும் வெப்பசக்தி பூமியின் வளிமண்டலத்தில் புகுந்து பூமியின் மேற்பரப்பில் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. 
  • பூமியின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிக்கும்போது, பூமி அந்த வெப்பசக்தியை வளிமண்டலத்திற்குள் செலுத்துகிறது. இவ்வாறு வரும் வெப்பத்தை வளி மண்டலத்தில் உள்ள கரியமிலவாயு, நீராவி, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் கிரகித்துக்கொள்வதால், பூமி அதிக வெப்பமடைகிறது.
வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகள்

  • உலகம் முழுவதும் உயர்ந்த மலைப்பிரதேசங்களில் பனி சூழ்ந்து காணப்படுவதோடு, பூமியின் வட துருவம் மற்றும் தென்துருவத்தில் நீர் பனிக் கட்டியாக உறைந்து காணப்படுகிறது. புவி வெப்ப மயமாதல் காரணமாக இந்த பனி உருகி, கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
  • புவி வெப்பமயமாதலை தடுக்க உலகநாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், 2100ஆம் ஆண்டுக்குள் அனைத்து பனிப்பிரதேசங்களும் உருகிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கடல் நீர் மட்டம் அதிகரித்து, கடலோர பகுதிகளில் நீர் புகுந்து பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் எச்சாரித்துள்ளனர். 
  • மனித நடவடிக்கைகள் காரணமாக கடந்த நூறு ஆண்டுகளில் பத்து முதல் 25 சென்டிமீட்டர் உயரத்திற்கு கடல் நீர் மட்டம் உயர்ந்திருப்பதாகவும், பசுமைக்குடில் வாயுக்கள் வெளியெற்றத்தை கட்டுப்படுத்தாத பட்சத்தில், அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் மேலும் பதினைந்து முதல் 90 சென்டிமீட்டர் அளவுக்கு உயரும் என்றும், இதன்காரணமாக, தாழ்வான பகுதிகள் கடல் நீரில் மூழ்கும் சூழ்நிலை ஏற்படுவதோடு, சில தீவுகள் மூழ்கக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.
  • புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பொழிவு குறையக்கூடும் என்றும், மலைப்பிரதேசங்களில் கோடைகாலத்தில் மிக விரைவாக பனி உருகிவிடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால், மலைப்பிரதேசங்களில் தண்ணிர் பிரச்சனை உருவாகும். 
  • இரவு நேரங்களிலும் வெப்பம் நிலவுவதோடு, குளிர்காலத்தில் கூட வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பம் காரணமாக கடல் நீர் அதிக அளவு நீராவியாவதால், வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும். அதிக ஈரப்பதம் காரணமாக மழை அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 
  • புவி வெப்பம் காரணமாக அடிக்கடி சூறாவளி ஏற்படக்கூடும். நிலத்தில் உள்ள நீர் அதிகமாக ஆவியாகி, நிலம் வறண்டு காணப்படும். ஏற்கனவே, வறண்ட பிரதேசமாக உள்ள பகுதிகள் மேலும் வறண்ட நிலைக்குச்செல்லும். புவி வெப்பமயமாதல் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, சூறாவளி மிக வேகமாக வீசுவதோடு, காற்றின் வேகமும் மிகவும் அதிகரிக்கும். காற்றின் போக்கில்கூட மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
பருவநிலை மாற்றமும், சுற்றுச்சூழலும்

  • பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பில் பருவநிலை முக்கிய பங்காற்றுகிறது.  பருவநிலையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும், சுற்றுச்சூழலில் அது பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவிடும். பருவநிலை மாற்றங்கள் மக்களையும், இயற்கையையும் கணக்கில் அடங்காத வகையில் பாதித்துவிடும். 
  • இந்த பருவநிலை மாற்றங்கள் ஒரிரண்டு நாட்களில் நிகழவில்லை. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றம் தொடர்பான எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். பருவநிலை மாற்றத்தால், இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களுக்கும், நமது பொருளாதார அமைப்பிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.



காடுகளில் ஏற்படும் பாதிப்பு

  • உலகில் உள்ள காடுகள் நாம் சுவாசிக்கும் காற்றை தூய்மைப்படுத்துவதோடு, தண்ணிர் சுத்தமாக இருப்பதற்கும், மண் பிடிப்போடு இருப்பதற்கும் உதவுகின்றன. காடுகள் மூலம் உலகில் சுமார் ஒன்று புள்ளி ஆறு பில்லியன் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெற்று வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
  • காடுகள் உணவு பொருட்களை அளிக்கின்றன மர பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் காடுகளிலிருந்து மனிதர்களுக்கு கிடைப்பதோடு, அழிந்து வரும் அரியவகை மிருகங்களுக்கும் புகலிடம் அளித்து வருகிறது.
  • புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கரியமில வாயுக்களை காடுகளில் உள்ள மரங்களும், செடிகளும் கிரகித்துக்கொள்வதால், பருவநிலை மாற்றத்தை தடுக்கவும் காடுகள் உதவுகின்றன. ஆனால், விவசாயம் மேற்கொள்வதற்கும், மரப்பொருட்களுக்காகவும் வனங்கள் பெருமளவு அழிக்கப்படுவதால், இதன் மூலம் ஏராளமான அளவு கரியமில வாயு மற்றும் பிற வாயுக்கள் வளிமண்டலத்தில் கலந்து புவி வெப்பமயமாதலை ஊக்குவிக்கின்றன. 
  • உலகளவில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவில் 20 சதவிகிதம் காடுகளை அழிப்பதன் மூலம் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். உண்மையில் இப்போது உள்ள நிலையில், பருவநிலை மாற்றத்தை காடுகள் தடுப்பதற்கு பதிலாக மனித நடவடிக்கைகளின் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு, புவி வெப்பமயமாதல் பிரச்சனை மேலும் கடுமையாகியுள்ளது.
வேளாண்மை மற்றும் நீர்வளத்தில் பாதிப்பு

  • விவசாயம் பெரும்பாலும் அதிகம் மழை பெய்யும் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. பருவநிலை மாற்றத்தினால் மழை பெய்வதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அது விவசாயத்தை பாதித்துவிடும். 
  • புவி வெப்பமயமாதல் காரணமாக தண்ணிர் தட்டுப்பாடு ஏற்பட்டு, சமூக பிரச்சனைகள் உருவாகும். உலகில் சுமார் 70 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். உலக நாடுகள் மேற்கொள்ளும் ஏற்றுமதியில் சுமார் 40 சதவிகித பொருட்கள் வேளாண் பொருட்கள்.
  • உணவு தானிய உற்பத்தி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு மூலம், பெரும்பாலான வீடுகளில் வருமானம் ஈட்டப்படுகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டால், விவசாயத்தை நம்பியிருக்கும் இந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 
  • பருவநிலை மாற்றம் உணவு தானியங்கள் கிடைப்பது, உணவு கிடைப்பது, உணவு பயன்படுத்தப்படுவது உள்ளிட்டவற்றில் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், பருவநிலை மாற்றத்தால் வேளாண் விளைச்சல் குறைவதோடு, கால்நடைகள் வளர்ப்பிலும் பாதிப்பு ஏற்பட்டு, கிராமப்பகுதிகளில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். 
  • இதன் காரணமாக, மனிதனின் உடல்நலம், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, மனிதர்களின் வாங்கும் சக்தியும் பாதிக்கப்படும். ஆறுகள், குளங்கள், நீர் நிலைகள், மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் குடிநீரை அளித்து வருகின்றன. விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் இன்றியமையாதது. 
  • மகா சமுத்திரங்கள், கடல்கள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால், உலக நீர்நிலை அமைப்புக்களில் எதிர்பாராத வகையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான வறட்சி போன்ற பிரச்னைகள் உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான வறட்சியினால் மக்கள் ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படுவதோடு, சுத்தமான தண்ணீர் இல்லாத பட்சத்தில் வேளாண்மை, உணவு உற்பத்தி மற்றும் குடும்ப வருமானம் பாதிக்கப்படும்.



உலக அளவில் நடவடிக்கை

  • ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியில் புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் 1997ஆம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தம் புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் மேற்கொண்ட முதல் முக்கியமான நடவடிக்கையாகும். 
  • இந்த ஒப்பந்தப்படி, பல நாடுகள் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்க முன்வந்தன. ஐம்பத்தைந்து நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டன. அமெரிக்காவின் அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, இந்த ஒப்பந்தத்தை அந்த நாடு ஏற்றுகொண்டாலும், பின்னர் அதிபர் புஷ் காலத்தில் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.
  • ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்து 2004ல் கையொழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் 2008-2012ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை 1990ஆம் ஆண்டு இந்த நாடுகள் வெளியேற்றிய பசுமைக்குடில் வாயுக்களை விட ஐந்து சதவிகிதம் குறைவாக இருக்க வகை செய்கிறது. 
  • ஆனால், தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை குறைப்பதற்கு பதிலாக, தொழில் நடவடிக்கை மூலம் அதிகமாக வெளியிட்டு வருகின்றன. 
  • கியோட்டோ ஒப்பந்தப் படி, பிரிட்டன், பிரான்ஷ், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் மட்டுமே பசுமைக்குடில் வாயுக்களை கட்டுப்படுத்தி வருகிறது. கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்ஸைடு, குளோரோ, ஃப்ளோரோ கார்பன் உள்ளிட்ட ஆறு பசுமைக்குடில் வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கியோட்டோ ஒப்பந்தம் புவி வெப்பமயமாதலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கை என்றபோதும், இந்த விஷயத்தில் மேற்கொண்டும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. 
  • புவி வெப்பம் மோசமான அளவுக்கு அதிகரிக்கும் வகையில் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கியோட்டோ ஒப்பந்தத்திற்கு மாற்றாக புதிய ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் உலக நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது. இந்தியாவின் நிலைமை உலகின் வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவின் தனிநபர் சராசரி கரியமில வாயு வெளியேற்றம் மிகக்குறைவானதே.
  • நாட்டிலிருந்து ஏழ்மையை அகற்ற வேண்டும் என்ற இலக்கு இன்னும் எட்டப்படவில்லை என்பதால், கூடுதல் எரிசக்தி வளங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உள்ளது. இந்நிலையில், வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான சமநிலையை பாதுகாப்பது மிக சிக்கலான ஒன்று என்றபோதிலும், மத்திய அரசு சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகளை மிக கவனமாகவே கையாளுகிறது. 
  • குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய நவீன தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று உலக அரங்குகளில் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் விஷயத்தில் வளரும் நாடுகளின் குரலாக இந்தியா திகழ்கிறது.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை தடுக்க செய்ய வேண்டியவை

  • ஏற்கனவே, வளி மண்டலத்தில் குவிந்துள்ள கரியமில வாயுவை உடனடியாக அகற்றுவது என்பது இயலாது. அதற்கு மிக நீண்ட காலம் தேவைப்படும். அதனால் ஏற்படும் விளைவு களையும் தவிர்க்க முடியாது. 
  • ஆனால், இதற்கு மேலும் கரியமில வாயு சேர்வதை முடிந்தமட்டில் தவிர்க்க முயற்சி செய்யலாம். வனப்பரப்பை அதிகரிப்பதன் மூலம், குவிந்துள்ள கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின் ஒரு பகுதியையாகிலும் குறைக்கலாம். 
  • நிலக்கரி போன்ற பெட்ரோலிய சேர்மங்களை எரித்து மின்சாரம் தயாரிப்பதற்கு பதிலாக, அணுசக்தி, சூரிய மின்சக்தி, காற்று மூலம் மின்சாரம் போன்ற வளம்குன்றா எரிசக்தி உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தலாம். இத்தகைய நடவடிக்கைகள் மூலம், எதிர்கால சந்ததியினர் தங்கள் வாழ்வை பாதுகாப்பாக தொடரும் வகையில், வளமார்ந்த பூமியை அவர்களுக்கு விட்டுச் செல்லலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel