Type Here to Get Search Results !

தொடங்கிடு இந்தியா (Startup India)

தொடக்க இந்தியா திட்டம் - ஓர் கண்ணோட்டம்
  • நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைபெற்று நீடிக்கும் விதமாகவும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும் புத்தாக்க முயற்சிகளுக்கும் தொடக்க நிலைத் தொழில் முயற்சிகளுக்கும் உகந்த வலுவான சூழலைக் கட்டமைக்கும் நோக்கில் இந்திய அரசு அறிவித்துள்ள திட்டம்தான் ‘தொடங்கிடு இந்தியா” என்னும் திட்டமாகும்.
  • அரசின் இந்த முயற்சியின் இலக்குகளை எட்டும் விதமாக, ‘தொடங்கிடு இந்தியா’ திட்டத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பம் முதற்கொண்டு, வேளாண்மை, உற்பத்தி, சமூகவியல்துறை, சுகாதாரம், கல்வி போன்ற அனைத்துத் துறைகள் வரை புதிய தொழில் தொடக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். 
  • முதல்நிலை நகரங்கள் தொடங்கி, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் வரையிலும், கிராமப்புறங்களிலும் கூட தொடங்கிடு இந்தியா திட்டத்தின்கீழ் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
செயல் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
1. விதிகளைப் பின்பற்றுவதற்கு சுய சான்றளிப்பு:
  • தொழில் தொடங்குவதற்குப் பின்பற்றியாக வேண்டிய தொழிலாளர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றளிப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவோரே சுயமாக சான்றளிக்கும் வகையில் விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. 
  • இதற்கென செல்பேசி செயலி (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று மூன்று ஆண்டுகள் வரை அதிகாரிகள் நேரிடையாக ஆய்வு செய்யமாட்டார்கள். 
2. தொடங்கிடு இந்தியா மையம்:
  • புதிய தொழில் தொடக்கத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும், அறிவு பரிமாற்றத்திற்கும், நிதி உதவி பெறுவதற்கும் என எல்லா வசதிகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள இத்தகைய மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
3. செல்பேசி செயலி மற்றம் இணையதளம்:
  • அரசுத் துறைகள் மற்றும் ஒழுங்காற்று அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும், தொழில் ரீதியான அனைத்துத் தேவைகளுக்கும் தகவல்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களோடு கருத்துப் பரிமாற்றத்திற்கு இவ்வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
4. சட்டரீதியான ஆதரவும், குறைந்த செலவில் துரிதமான காப்புரிமையும்:
  • புதிய தொழில் தொடங்கிடுவோர் விண்ணப்பிக்கின்ற காப்புரிமை, டிரேட்மார்க் உரிமை, வடிவமைப்பு உரிமை அனைத்திற்கும் அவ்வசதிகளைப் பெற்றுத்தருவோருக்கான கட்டணத்தை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். 
  • தொழில் தொடங்குவோர், சட்டப்படியான சிறிதளவு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். மேலும் காப்புரிமை வேண்டி விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டிய கட்டணத்தில் புதிய தொழில் தொடங்குவோருக்கு 80 சதவீதத் தள்ளுபடி உண்டு.
  • சோதனை முறையில் இந்த வசதிகள் முதலில் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன என்று பார்த்த பின்னர் மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
5. தொடங்கிடு இந்தியா நிறுவனங்களிலிருந்து அரசுக் கொள்முதலுக்கு விதிகள் தளர்வு
  • புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கின்ற வகையில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளவற்றில் இருந்து அரசுக்கு வேண்டிய தயாரிப்புகளைக் கொள்முதல் செய்யும்போது முன் அனுபவம் இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட தொகைக்கு விற்று வரவு இருக்க வேண்டும் என்ற விதிகள் தளர்த்தப்படும். 
  • எனினும் தயாரிப்புகளின் தரத்தில் எவ்வித சமரசமும் இருக்காது. தொழில்நுட்ப அளவு கோல்களிலும் தளர்வு கிடையாது. அரசுக்கு வேண்டியவற்றை நிறைவேற்றித் தரும் திறன் இருப்பதை அவை நிரூபிக்க வேண்டும் என்பதோடு, அவற்றின் உற்பத்திக் கூடங்கள் இந்தியாவில் இருக்க வேண்டும்.



6. துரிதமாக வெளியேறவும் வாய்ப்பு:
  • தொடங்கிடு இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்கள் சரிவர நடக்கவில்லை என்றாலும் அவற்றை மூடிவிட நினைத்தாலும், அதற்கான விண்ணப்பத்தை அளித்தலில் இருந்து 90 நாட்களுக்குள் நிறுவனத்தைக் கலைத்து விடலாம். 
  • அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நொடித்தல் மற்றும் திவால் ஆதல் மசோதா 2015 -ல் இதற்கு வகைசெய்யப்பட்டுள்ளது. “வரம்புற்ற பொறுப்பு” என்ற கருத்தாக்கத்தையும் இந்த ஏற்பாடு மதித்து நடக்கும்.
நிதி ஆதரவும், ஊக்க உதவிகளும்
  • ரூ 10,000 கோடி நிதியம் மூலம் நிதிஉதவி: தொடங்கிடு இந்தியா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்குவோருக்கு நிதி உதவி அளிப்பதற்காக ஆரம்பத்தில் ரூ.2500 கோடியில் ஒரு நிதியம் ஏற்படுத்தப்படும். 
  • புதிய தொழில் நிறுவனங்கள் பெறுகின்ற கடன்களுக்கு, தேசியக் கடன் உத்திரவாதப் பொறுப்புக் கம்பெனி மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி மூலமாக உத்திரவாதம் அளிக்கப்படும். இதற்கென ஆண்டுக்கு ரூ.500 கோடி வீதம் நான்காண்டுகளுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.
  • புதிய தொழில் முயற்சியால் கிடைக்கும் மூலதன ஆதாயத்தை அரசு அங்கீகரித்துள்ள மூலதன நிதியில் முதலீடு செய்தால் அந்த ஆதாயத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும். 
  • தொடங்கிடு இந்தியா திட்டத்தன்கீழ் ஆரம்பிக்கப்டும் தொழில்களில் கிடைக்கும் லாபத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு வருமானவரி கிடையாது. இந்த நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு டிவிடண்ட் வழங்காமல் இருந்தால்தான் இந்த வருமான வரிச்சலுகை கிடைக்கும் .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel