தமிழக பட்ஜெட் : 2018 - 2019 முழு விபரம்
திண்டிவனத்தில் 450 ஏக்கரில் உணவு பதப்படுத்தும் பூங்கா!
வேளாண் துறைக்கு, 8,916 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் துவரை, உளுந்து, பச்சை பருப்பு ஆகியவை, நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி கொள்முதல் செய்யப்படும்
இந்த நிதியாண்டில், 110 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி அடைவதே இலக்கு. உணவு தானிய உற்பத்தியை பெருக்க, 24 லட்சம் ஏக்கரில், திருந்திய நெல் சாகுபடி முறை பின்பற்றப்படும்
நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க, 200 கோடி ரூபாய்
உற்பத்தி பொருட்களின் மதிப்பை கூட்டி, சேதங்களை தவிர்க்க, சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கை வெளியிடப்படும். உணவு பதப்படுத் தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க, ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு, உரிய சட்டம் கொண்டு வரப்படும்.
திண்டிவனம் அருகேயுள்ள பெலாக்குப்பம் கிராமத்தில், 450 ஏக்கர் பரப்பளவில், மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும்.
தேனி, விருதுநகர், துாத்துக்குடி, ஈரோடு, கடலுார், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் உருவாக்கப்படும்
இந்த பூங்காக்களில், பழங்கள், காய்கறிகள், மீன்கள், பால் பொருட்கள், கோழி இறைச்சி போன்ற உணவுப்பொருட்கள் பதப்படுத்தப்படும். இதற்காக, தனியார் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப் படும்
டாக்டர் ரங்கராஜன் குழு பரிந்துரைபடி, வருவாயில் பகிர்வு செய்யும் முறை அடிப்படையில், கரும்பு கொள்முதலுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறைக்கு மாற, அரசு முடிவு செய்துள்ளது
பயிர் காப்பீடு திட்டத்திற்கு, மாநில பங்கு தொகை வழங்க, 632 கோடி ரூபாய்
வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்க, மேலும், 500 மையங்கள் அமைக்கப்படும். வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க,150 கோடி ரூபாய்; நுண்ணீர் பாசனத்தை மேம்படுத்த, 715 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களிலும், கடலோர பகுதிகளிலும், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப் படும்
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், 'உழவன்' என்ற மொபைல் போன் செயலிஅறிமுகப்படுத்தப்படும்
சென்னை, கிண்டியில், 20 கோடி ரூபாயில், 'அம்மா பசுமை பூங்கா' அமைக்கப்படும்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மலர்களுக்கான வணிக வளாகம்; கடலுார் மாவட்டம், மங்களூரில் மக்காசோளம் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்
கன்னியாகுமரி, தோவாளையில், மலர்களை அறுவடைக்கு பின், பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.
மக்கள் இணையதளம் விரைவில் அறிமுகம்
மக்கள், தங்கள் தொடர்பான தரவு தகவல்களை, தாங்களே திருத்தம் செய்து கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த தமிழ்நாடு மக்கள் இணையதளம், விரைவில் துவங்கப்படும்
தமிழ்நாடு மாநில, 'ஆதார்' சட்ட முன்வடிவு, இந்த பட்ஜெட் தொடரில் அறிமுகம் செய்யப்படும்
அனைத்து அரசு துறைகளுக்குமான, பொது மின் ஆளுமை வடிவமைப்பு உருவாக்கப்பட்டு, விரைவில் செயல்பாட்டுக்கு வரும்
3,000 புது பஸ்கள் வாங்க முடிவு
2017 - 18ல், ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய நிலுவை, பணியாளர்களுக்கான நிலுவை, விபத்து இழப்பீடு ஆகியவற்றுக்காக, 2,519 கோடி ரூபாய், சிறப்பு வழிவகை முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது
2017 - 18ல், டீசல் மானியம், மாணவர் பஸ் பாஸ் சலுகை, முதியோர் கட்டண மானியம் மற்றும் பங்கு மூலதன உதவியாக, 1,364 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது
போக்குவரத்து கழகங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையில், 3,001 கோடி ரூபாய், மூலதன பங்குத் தொகையாக நடப்பு ஆண்டில் மாற்றம் செய்யப்படும்
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 2,000 பஸ்களுடன், வரும் நிதியாண்டில், புதிதாக, 3,000 பஸ்கள் வாங்கப்படும். இதற்காக, 600 கோடி ரூபாயை, பங்கு மூலதனமாக, அரசு வழங்கும். பின், 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள, 4,593 பழைய பஸ்கள் மாற்றப்படும்
நிதி நிறுவனங்கள், பணியாளர்களுக்கான நிலுவைக்காக, வழிவகை முன்பணமாக, 900 கோடி ரூபாய் வழங்கப்படும்
மாணவர்கள், முதியோர் பஸ் பாஸ் வழங்க, 799 கோடி ரூபாய் உட்பட, போக்குவரத்து துறைக்கு, 2,717.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு
சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டம், 22 ஆயிரத்து, 828 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 16 ஆயிரத்து, 258 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், மூன்று வழித்தடங்களில், 107.55 கி.மீ., பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவி பெற, மத்திய அரசு ஒப்புதல் கோரி
அனுப்பப்பட்டுள்ளது
இதன் தொடர்ச்சியாக, கோவையிலும், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, விரிவான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன
இந்த பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 750 கோடி ரூபாய் பங்கு மூலதன உதவியாகவும், 1,000 கோடி ரூபாய் துணை கடனும் வழங்க நிதி ஒதுக்கப்படுகிறது.
200 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்
வரும் நிதி ஆண்டில், 100 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளி களாகவும்; 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
தற்போது பள்ளிக்கு செல்லாத, 33 ஆயிரத்து, 519 குழந்தைகளை, வரும் நிதியாண்டில், பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் உள்ள நுாலகங்கள் புதுப்பிக்கப்படும்
2018 - 19ல், 200 கோடி ரூபாய் செலவில், 'நபார்டு' வங்கி உதவியுடன், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, 333 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 14 வகை இலவச திட்டங்களுக்கு, 1,654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, தலா, 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, 314 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' வழங்க, 758 கோடி ரூபாய் நிதி தரப்படும்
மத்திய அரசு நிதி உதவியில் மேற்கொள்ளப்படும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்துக்கு, 1,750 கோடி ரூபாய்; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்துக்கு, 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திட்டத்துக்கு, 201 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
பள்ளிக்கல்வி துறைக்கு, மொத்தம், 27 ஆயிரத்து, 205 கோடியே, 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
உயர்கல்வி
வரும் நிதியாண்டில், கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சென்னையில் உள்ள, மாநில கல்லுாரியின் விக்டோரியா விடுதி மற்றும் ராணி மேரி கல்லுாரியின் பாரம்பரிய கட்டடங்கள், 26 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு, அரசு வழங்கும் கல்வி கட்டண செலவுக்காக, 683 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
பல்கலைகளுக்கு வழங்கப்படும் மானிய தொகையில் எந்த மாற்றமும் இல்லை.
வரும் நிதி ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கு, 250 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். அத்துடன் சேர்த்து, பல்கலைகளுக்கான மானியம், 501 கோடி ரூபாயாக உயரும்
மொத்தமாக, உயர்கல்வித் துறைக்கு, 4,620.20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
உணவு மானியத்திற்கு ரூ.6,000 கோடி
கூட்டுறவு துறை
கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு, 8,000 கோடி ரூபாய் அளவிற்கு, புதிய பயிர் கடன்கள் வழங்கப்பட உள்ளன.
பொது வினியோக திட்டம்
ஊரக மற்றும் நகர ரேஷன் கடைகளில் ஏற்படும் நஷ்டத்தை, கூட்டுறவு அமைப்புகளுக்கு ஈடு செய்வதற்காக, 460 கோடி ரூபாய் வழங்கப்படும்
உணவு மானியத்திற்காக, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
எரிசக்தி துறை
ஜெர்மனி வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன், 1,593 கோடி ரூபாய்மதிப்பீட்டில், பசுமை ஆற்றல் மின் தொடர் திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு, இதுவரை, 725 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
மாநிலத்தின் மின் வழித்தட திறனை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன், 5,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'தமிழ்நாடு மின் தொடரமைப்பு மேம்பாட்டு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இரு திட்டங்களுக்கும், பட்ஜெட்டில், 931 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
விவசாயம் மற்றும் இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியமாக, 7,538 கோடி ரூபாய் உட்பட, மொத்தம், 13 ஆயிரத்து, 964 கோடி ரூபாய், எரிசக்தி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம்
ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அதிகவேக இணைப்பினை வழங்கும் வகையில், 'ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்' வாயிலாக, கிராமங்களை, வட்ட தலைமையகத்துடன் இணைக்க, 1,230 கோடி ரூபாய் செலவில், 'பாரத் நெட்' திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது
தகவல் தொழில்நுட்ப துறைக்கு, 158.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சுகாதாரத்திற்கு ரூ.1,480 கோடி
தமிழக சுகாதாரத் துறைக்கு, 11 ஆயிரத்து, 638 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இது, கடந்த நிதியாண்டை விட, 1,480 கோடி ரூபாய் கூடுதலாகும்.
பட்ஜெட் விவரம் வருமாறு:
நெல்லை, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோவை அரசு மருத்துவ கல்லுாரிகளில், 345 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்
தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், முதல்வர் காப்பீட்டு திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, 1,362 கோடி ரூபாய்
24 கோடி ரூபாய் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள், பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும்
விழுப்புரம், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 34 கோடி ரூபாய் செலவில், புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும். 10 அரசு மருத்துவமனைகளில், தற்போதுள்ள கோபால்ட் அலகுகள், 35 கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைக்கப்படும்
சென்னை, அரசு ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையிலும், திருவாரூர், கன்னியாகுமரி மற்றும் தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் உள்ள, ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள், 48 கோடி ரூபாய் செலவில், தரம் உயர்த்தப்படும்
விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்துார் மற்றும் ராமநாதபுரம் ஆகிய, நான்கு மாவட்ட தலைமையிட மருத்துவமனை களில், 80 கோடி ரூபாய் செலவில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுகள் துவங்கப்படும்
தேசிய சுகாதார இயக்கத்திற்காக, 1,551 கோடி ரூபாய்
'அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம்' வழங்க, 1,001 கோடி ரூபாய்
மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ், 'சானிட்டரி நாப்கின்' வழங்க, 61 கோடி ரூபாய்.
சிறு, குறு நிறுவனங்களிடம் கொள்முதல் 'டெண்டர்' விதிகளை திருத்துது அரசு
அரசு மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில், 25 சதவீதத்தை, சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில், 'டெண்டர்' விதிகளில், திருத்தம் செய்யப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம்:
தொழில் முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளித்தல் மற்றும் புதுப்பித்தலை, ஒற்றைச்சாளர முறையில் வழங்க, இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் அலகுகளை ஊக்கப்படுத்த, 9,030 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 'சிப்காட்' நிலவங்கி விரிவுபடுத்தப்படும்
தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க, காஞ்சி புரம் மாவட்டம், வல்லம், வடகாலில் வானுார்திப் பூங்கா, பொன்னேரியில், பிளாஸ்டிக் தொழிற்பூங்கா, செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்க முயற்சிகள் நடக்கின்றன
வாகன தயாரிப்பு துறையை அடித்தளமாக வைத்து, வானுார்தி பூங்கா மற்றும் பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில் வழித்தடத்தையும் அமைக்க, சிறப்புக் கவனம் செலுத்தி, 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும்
அடுத்த ஆண்டு, ஜனவரி, 22, 23ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
முதலீட்டு மானியமாக, 1,600 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிதியாண்டில், 2,000 கோடி ரூபாயாக மானியம் உயர்த்தப்படும்
அம்பத்துார்
தொழிற்பேட்டையில், 30 கோடி ரூபாய் செலவில், சிறு தொழில் மேம்பாட்டு கழகத்தால், குறு நிறுவனங்களுக்காக, பன்னடுக்கு பணிமனைகள் கட்டப்படும். பணியாளர்களுக்கான விடுதிகள் கட்டப்பட்டு, தனியார், அரசு பங்களிப்பில் நிர்வகிக்கப்படும்
அரசு மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில், 25 சதவீதம் வரை தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வது கட்டாயமாக்கப்படும். இதற்காக, டெண்டர் விதிகளில் திருத்தம் செய்யப்படும்
முதல் தலைமுறை தொழில் தொடங்குவோருக்காக, அதிக பட்ச கடன் உச்சவரம்பு, ஒரு கோடி ரூபாயில் இருந்து, ஐந்து கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
சுற்றுலாத்துறை
தமிழக சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக, 173.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான அலுவலகங்களை, தகவல் தொழில்நுட்ப வலையமைப்பால், வட்டாரங்களுடன் இணைக்க, மாநில பெரும்பரப்பு வலையமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டப்பணிகள், 443.64 கோடி ரூபாயில் தொடங்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலுக்கு ரூ.172 கோடி ஒதுக்கீடு
கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி அமைப்பு வார்டுகளின் எல்லைகள், மறுவரையறை செய்யப்படுகின்றன. இப்பணிகளை, எல்லை வரையறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாகவும், நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் காரணமாகவும், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வார்டுகளை மறுவரையறை செய்த பின்னரே, தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும்
மாநில நிதிக்குழு பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 5,980 கோடி ரூபாயும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 4,834 கோடி ரூபாயும் வழங்கப்படும்.
மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 1,975 கோடி ரூபாயும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 1,877 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்படும்.
ரூ.40 கோடியில் கைத்தறி உதவி திட்டம்
இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, 490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
கைத்தறி நெசவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 'கைத்தறி உதவித் திட்டம்' என்ற புதிய திட்டத்தை, அரசு செயல்படுத்தும். அதற்காக, 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கைத்தறி துணிகள் விற்பனை மீதான தள்ளுபடி மானியத் திட்டத்திற்கான ஒதுக்கீடு, 80 கோடி ரூபாயில் இருந்து, 150 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்
கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை, விரைவில் வெளியிடப்படும்
சர்வோதயா சங்கங்களை ஊக்குவிக்கும் வகையில், சந்தை மேம்பாட்டு நிதி உதவித் திட்டத்திற்கு, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
வரும் நிதி ஆண்டில், கைத்தறி, துணிநுால் துறைக்கு, 1,241 கோடி ரூபாயும், கதர் துறைக்கு, 227 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சுற்றுவட்ட சாலை மத்திய அரசு ஒப்புதல்
ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 1,000 கி.மீ., சாலைகள் அகலப்படுத்தப்படும்; 4,000 கி.மீ., சாலைகள் மேம்படுத்தப்படும்
ஊரக சாலைகளை தரம் உயர்த்தும் திட்டத்தில், 2,500 கி.மீ., சாலை பணிகள், 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தில், திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் சாலை, ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசி சாலை மேம்படுத்தும் பணிக்கு, இந்த நிதியாண்டில், 482 கோடி ரூபாய் செலவிடப்படும்
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன், 12 ஆயிரத்து, 301 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள, சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, எண்ணுார் துறைமுகம் - தச்சூர் இடையிலான, வடக்கு துறைமுக அணுகுசாலையை அமைக்கும் பணி, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் துவங்கும்
ஆறு ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை, 184 கோடி ரூபாய் செலவில், அரசு மேற்கொள்ளும். 'நபார்டு' வங்கி நிதியுதவியுடன், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 70 புதிய பாலங்கள் கட்டப்படும்
நெடுஞ்சாலை துறைக்கு மொத்தமாக, 11 ஆயிரத்து, 73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பள்ளிக்கரணை மீட்பு திட்டத்துக்கு ரூபாய், 165 கோடி
தமிழ்நாடு பல்லுயிரின பாதுகாப்பு மற்றும் பசுமை திட்ட பணிகளுக்கு, 86.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
காப்பு காடுகளை புதுப்பித்து, அடர்த்தியாக்கும் திட்டத்தில், 7,000 ஏக்கர் பகுதிகளை மேம்படுத்த, 21.43 கோடி ரூபாய் வழங்கப்படும்
சென்னை, பள்ளிக்கரணையில், 1,717 ஏக்கர் சதுப்பு நிலங்களை மீட்டெடுக்க, மத்திய அரசின் நிதி உதவியுடன் ஐந்தாண்டு திட்டம் செயல்படுத்தப்படும். மொத்தம், 165.68 கோடி ரூபாயில் மதிப்பிடப்பட்டுள்ள, இத்திட்டத்துக்கு, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு, 1.30 லட்சம் வீடுகள்
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், வரும் நிதி ஆண்டில், 2,276 கோடி ரூபாயில், 1.30 லட்சம் வீடுகள் கட்டப்படும். முதலமைச்சரின் சூரிய ஒளி மின்வசதி உடைய பசுமை வீடுகள் திட்டத்தில், 420 கோடி ரூபாயில், 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்
ஊரக பகுதிகளில், வீட்டுவசதி திட்ட பணிகளுக்கு, 2,696.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
நகர்ப்புற பகுதிகளில் அனைவருக்கும் வீட்டு வசதி - பிரதமரின் வீட்டு வசதி திட்ட பணிகளுக்கு, 2,301 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது
குறைந்த வருவாய் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு, 20 ஆயிரத்து, 95 வீடுகள் கட்ட, 2,894.63 கோடி ரூபாய் வழங்கப்படும்
'துாய்மை இந்தியா' இயக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக, ஊரக பகுதிகளுக்கு, 1,074 கோடி ரூபாயும், நகர்ப்புற பகுதிகளுக்கு, 550 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதில், தமிழக அரசின் பங்காக, 300 கோடி ரூபாயும், குறைந்தபட்ச தேவைகள் திட்டத்துக்கு, 186 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது
நபார்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும், திட்ட பணிகளுக்காக, 600 கோடி ரூபாய் உட்பட, குடிநீர் வழங்கல் பணிகளுக்கு மொத்தமாக, 1,853 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்று லட்சம் குடும்பங்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்
வருவாய் துறை வாயிலாக, தனியார் நிலங்களை கையகப்படுத்தி, ஏழை குடும்பங்களுக்கு, இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்படும். இவ்வாறு, இலவச பட்டா பெற்றவர்களுக்கு, ஊரக வளர்ச்சி துறையில், நடைமுறையில் உள்ள திட்டங்கள் வாயிலாக வீட்டுவசதி அளிக்கப்படும்
வரும் நிதி ஆண்டில் வருவாய் துறைக்கு, 6,145 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு ரூ.250 கோடி
நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கும், குடிமராமத்து திட்டம், 300 கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
'நபார்டு' வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், 250 கோடி ரூபாய் செலவில், தடுப்பணைகள் கட்டப்படும்
நீர்வள, நிலவள திட்டத்தின், இரண்டாம் கட்ட பணிகளை மேற்கொள்ள, 655 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும், பருவநிலை மாற்ற தழுவல் திட்டத்திற்கு, 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட பணிக்கு, 166 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
அத்திக்கடவு - அவினாசி நீர்பாசன திட்டத்தை, 1,789 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, வரும் நிதியாண்டில், 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
மாநிலங்களுக்கு இடையேயோன ஆறுகளை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியான, தாமிரபரணி - நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு, இதுவரை, 349 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.