ஜி.எஸ்.எல்.வி டி6 ராக்கெட் மூலம் ஜிசாட் 6 செயற்கைக்கோள் வரும் 27-ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-6 மூலம் ஜி.எஸ்.எல்.வி. டி.6 ராக்கெட் வரும் 27ம் தேதி மாலை 4.52 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
ஜிசாட்-6 செயற்கைக்கோளில் மிகப் பிரம்மாண்டமான ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறிய தொலைபேசியைக் கொண்டு நேரடியாகச் செயற்கைக்கோள் மூலம் மற்றொரு இடத்திற்குத் தொடர்புகொள்ள முடியும் என்று தெரிவித்தார். இந்தச் செயற்கைக்கோள் பிரத்யேகமாக பாதுகாப்புத்துறைக்குப் பேருதவி புரியும் என்றும் அவர் தெரிவித்தார்.திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம்சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் சிவன், 2500 கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட் ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜி.எஸ்.எல்.வி டி6 ராக்கெட்டை ஏவுவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.