
22nd JANUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின் ஸ்பிரின்ட் 1 செயல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.22) தலைமைச் செயலகத்தில், பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப்பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகள் உள்ளடக்கிய செயல் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
- பதிவுத்துறை, பொதுமக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஏற்படுத்துதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
- முத்தமிழறிஞர் கலைஞர் 160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பதிவுத்துறையில் 6.02.2000 அன்று ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தை தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்.
- அதன் தொடர்ச்சியாக, பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின் கீழ் 18 புதிய சேவைகள் உள்ளடக்கிய முதல்நிலை செயல் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.22) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முள்ளக்காடு கிராமத்தில் 2292.38 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
- தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முற்போக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
- அதன்படி, கடந்த நான்கரை ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, தூத்துக்குடியில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
- மேலும், செயற்கை நூற்பு இழை நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனங்கள், அறைகலன் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட உள்ளன.
- இவைமட்டுமின்றி, கப்பல் கட்டுமான தொழிற்சாலை, பசுமை சக்தி உற்பத்தி நிறுவனங்கள், விண்வெளி சாதன உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
- இந்த வளர்ச்சியினை மேலும் விரைவுபடுத்தும் விதமாக, தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் விரிவாக்கம், விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடங்கள் போன்றவை இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளன.
- இதன் தொடர்ச்சியாக, இப்பகுதியின் சமச்சீர் வளர்ச்சி மேம்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்காக தற்போது தாமிரபரணி ஆற்றின் நீர் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு மாற்றாக, ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை நிறுவி தண்ணீர் வழங்க வகை செய்யும் இத்திட்டம் Hybrid Annuity Model முறையில் ரூ.2292.38 கோடி திட்ட மதிப்பீட்டில் 40 சதவீதம் சிப்காட் பங்களிப்புடனும், ஸ்ரீ ஜேடபிள்யூஐஎல் இன்ஃப்ரா லிமிடெட், ஐடிஇ டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், விஷ்ணுசூர்யா ப்ராஜெக்ட்ஸ் இன்ஃப்ரா லிமிடெட் ஆகிய கூட்டமைப்பின் 60 சதவீதம் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகிறது.
- இத்திட்டம், தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது சுற்றுப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் தடை இல்லாத நீர் வழங்கும் சேவையினை உறுதி செய்திடும்.
- இதனால், வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றின் நீரானது பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

