
7th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.10.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற டிட்கோ, BCI ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான "AeroDefCon 2025" என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்தார்.
- இம்மாநாடு, அக்டோபர் 7 முதல் 9 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இம்மாநாடு தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சூழலுடன் இத்துறை சார்ந்த சர்வதேச நிறுவனங்களை இணைக்கும் முக்கிய தளமாக விளங்கும்.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக 5.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமத்தை திறந்து வைத்தார்.
- மேலும், யானைகளை பராமரிக்கும் காவடி பணியிடங்களுக்கு 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் இந்தியாவின் முதல் யானை பாகன் கிராமம் 13.5.2025 அன்று முதல்வரால் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, யானைகளின் பராமரிப்பு மற்றும் தோழமைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பாகன்கள் மற்றும் காவடிகளின் தன்னலமற்ற சேவை அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் பழமையான யானை முகாமில் ஒன்றான கோழிக்கமுத்தி யானைகள் முகாம், யானை மேலாண்மையில் பல தலைமுறைகளாக பாரம்பரிய அறிவைப் பெற்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த யானைப் பாகன்களின் இருப்பிடமாகும்.
- இந்த முகாமில் தற்போது 24 யானைகள் உள்ளன. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இம்முகாம்களில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக யானைகளைப் பார்க்கும் காட்சியகம் மற்றும் பார்வையாளர் நடைபாதை போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
- இந்திய கடற்படையின் பலத்தை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் ஐஎன்எஸ் ஆண்ட்ரோத் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
- விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரோத் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் இயக்கப்பட்டது. கிழக்கு கடற்படை கமாண்ட்டிங் தலைமை தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் பென்தர்கர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் கப்பல் கட்டும் தளத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- ஆண்ட்ரோத் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது, உள்நாட்டுமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கடற்படையின் தொடர்ச்சியான படிகளில் மற்றொரு முக்கிய நிகழ்வாகும் என்று கிழக்கு கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ரயில்வே அமைச்சகத்தின் 24,634 கோடி ரூபாய் செலவிலான நான்கு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- வார்தா – பூஷாவல் – 3-வது மற்றும் 4-வது பாதை – 314 கிலோமீட்டர் (மகாராஷ்டிரா), கோண்டியா – டோன்கர்கர் – 4-வது பாதை – 84 கிலோமீட்டர் (மகாராஷ்டிரா, சத்தீஷ்கர்), வதோதரா – ரட்ளம் – 3-வது மற்றும் 4-வது பாதை – 259 கிலோமீட்டர் (குஜராத், மத்தியப்பிரதேசம்) & இடார்சி – போபால் – பினா 4-வது பாதை – 237 கிலோமீட்டர் (மத்தியப்பிரதேசம்).
- இந்த நான்கு திட்டங்கள் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களின் 18 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இதன் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 894 கிலோமீட்டர் அதிகரிக்கும்.
- ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பல்தடத் திட்டம் சுமார் 85.84 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட மற்றும் 2 முன்னோடி மாவட்டங்கள் (விதிஷா, ராஜ்நந்த்கான்) இடம் பெற்றுள்ள சுமார் 3,633 கிராமங்களுக்கு போக்குவரத்தை மேம்படுத்தும்.
- நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சாஞ்சி, சத்பூரா புலிகள் காப்பகம், பீம்பேட்கா பாறை, ஹசாரா அருவி, நவேகான் தேசியப் பூங்கா போன்ற முக்கிய இடங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரயில்போக்குவரத்து வசதி ஏற்படும்.
- நிலக்கரி, பெட்டகம், சிமெண்ட், உணவு தானியம், இரும்பு போன்ற பொருட்களை அனுப்புவதற்கான முக்கிய வழித்தடமாக இது உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 78 மில்லியன் டன் சரக்குகளை அனுப்ப முடியும்.