
28th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2025-26 ரபி பருவத்தில் பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- 2025-26 ரபி பருவத்தில் (01.10.2025-31.03.2026) பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலைகளை நிர்ணயிப்பதற்கான உரத்துறையின் பரிந்துரைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 2025-26 ரபி பருவத்தில் தற்காலிக பட்ஜெட் தேவை ரூ.37,952.29 கோடியாகும். இது 2025 காரீஃப் பருவத்திற்கான பட்ஜெட் தேவையைவிட சுமார் ரூ.736 கோடி அதிகமாகும்.
- டை அமோனியம் பாஸ்பேட், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்ஃபர் உள்ளிட்ட பாஸ்பேட் பொட்டாசியம் உரங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட விலையின் அடிப்படையில், மானியங்கள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்த செலவில் இந்த உரங்கள் சீராகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இது வழங்கப்படும்.
- இதன் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள், மானிய விலையிலும் குறைந்த விலையிலும் மற்றும் உகந்த விலையின் அடிப்படையில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
- உரங்கள் மற்றும் இடுபொருட்களின் சர்வதேச விலைகளில் சமீபத்திய நிலைகளைக் கருத்தில் கொண்டு பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான மானியங்கள் நிர்ணயிக்கப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 8-வது மத்திய ஊதியக் குழுவின் விதிமுறைகளுக்கு இன்று ஒப்புதல் அளித்தது.
- 8-வது மத்திய ஊதியக் குழு ஒரு தற்காலிக அமைப்பாக இருக்கும். இந்த ஊதியக்குழு ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் (பகுதி நேரம்) ஒரு உறுப்பினர்-செயலாளர் ஆகியோரைக் கொண்டிருக்கும்.
- அது அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை வழங்கும். தேவைப்பட்டால், பரிந்துரைகள் இறுதி செய்யப்படும்போது ஏதேனும் விஷயங்களில் இடைக்கால அறிக்கைகளை அனுப்புவதை இது பரிசீலிக்கலாம்.
- மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பு, ஓய்வூதிய சலுகைகள் மற்றும் பிற சேவை நிலைமைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை ஆராய்வதற்கும், அவற்றில் தேவையான மாற்றங்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்கும் மத்திய ஊதியக் குழுக்கள் அவ்வப்போது அமைக்கப்படுகின்றன.
- வழக்கமாக, ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு முறை ஊதிய குழுக்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். இதன் அடிப்படையில், 8-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் செயலாக்கம் 01.01.2026 முதல் எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளை ஆராய்ந்து மாற்றங்களை பரிந்துரைக்க 8-வது மத்திய ஊதியக் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு 2025 ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
- இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் விமான சேவை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் சிறிய ரகத்திலான விமானங்கள் அதிகம் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- உடான் திட்டத்தின்கீழ் மேற்கண்ட எஸ்ஜே-100 விமானம் தயாரிக்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடட் (எச்ஏஎல்) நிறுவனம் ரஷியாவின் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசனுடன் (பிஜேஎஸ்சி - யுஏசி) ஒப்பந்தம் போட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தம் மாஸ்கோவில் திங்கள்கிழமை (அக். 27) கையெழுத்தானது.
- இந்தியாவில் இத்தகையதொரு பயணிகள் விமானம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

 
 
