
1st SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜெர்மன் நாட்டில் Knorr Bremse, Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
- தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 31 அன்று அந்நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பில் உரையாற்றினார்.
- அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 01ந் தேதி டசெல்டோர்ஃப் நகரில் Knorr Bremse. Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- அத்துடன், BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழகத்தில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
- அதை தொடந்து, ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்ட நார் பிரெம்ஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- மேலும், உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரைக் தலைமையகமாக கொண்ட நார்டெஸ் குழும நிறுவனத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில் மயமாக்கலில் தமிழகத்தின் தலைமையை வலுப்படுத்த உதவும்.
- குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நார்டெஸ் குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- இந்த விரிவாக்கம் காற்றாலை உற்பத்தியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அத்துடன், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜெர்மனி நாட்டின் மல்ஃபிங்கன் நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள ebm-papst நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- இந்நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை (GCC) விரிவுபடுத்தவும், தமிழகத்தில் அதன் உற்பத்தியை அடுத்த 05 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அதுல் திரிபாதி கையெழுத்திட்டார்.
- மேலும், ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள BMW குழும நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனங்களுக்கான ஆட்டோமொடிவ் அசல் உபகரணங்கள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.
- இது தமிழகத்தில் ஆட்டோமொடிவ் துறையில், குறிப்பாக மின்சார வாகனப் பிரிவில் அந்நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து BMW குழும நிறுவனத்தின் அரசு விவகாரங்களுக்கான உலகளாவிய தலைமை அலுவலர் தாமஸ் பெக்கர், BMW இந்திய நிறுவனத்திற்கான அரசு மற்றும் வெளியுறவு இயக்குநர் வினோத் பாண்டே ஆகியோரை முதல்வர் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25வது உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
- சீனாவின் தியான்ஜின் நகரில் 2025, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கான திட்டமிடல், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதிசார் ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக் குறித்து இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.
- இந்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டமைப்பின் கீழ், ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த இந்தியாவின் அணுகுமுறையை எடுத்துரைத்தார்.
- இது தொடர்பாக பாதுகாப்பு, தொடர்புகள், வாய்ப்புகள் ஆகிய 3 அம்சங்களின் கீழ், சிறந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
- வளர்ச்சி மற்றும் வளமைக்கான முக்கிய அம்சங்களாக அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், தீவிரவாதத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள் உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
- இந்த உச்சி மாநாட்டின் நிறைவில் தியான்ஜின் பிரகடனத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்புநாடுகள் ஏற்றுக் கொண்டன.
- ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதம் 1-ம் தேதியன்று முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகின்றது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
- நடப்பாண்டு ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் மாத்ம் இதுவரை இல்லாத வகையில் ரூ. 2.37 லட்சம் கோடி வசூலானது. இந்த நிலையில், ஆகஸ்டு மாதத்தில் ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இது கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ. 1.74 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
- ஜிஎஸ்டி வருமானத்தில் மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர்கள் ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபான்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
- மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். ஆசிரியர்கள் டெட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதுபோல செய்தால், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று ஆராயவும் உச்ச நீதிமன்றம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
- டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராக பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.