
அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்
- 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எவ்வித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர வேண்டும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் வரும் சிக்கல்களில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
- இணையதளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ‘அகல்விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படும்’’ என 2024-25 பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தனர்.
- இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
- அமைச்சர்கள் ரகுபாதி, பெய்யநாதன் ஆகியோர் வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டு மாணவிகளுக்கு வழங்கினர்.
- தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- முதற்கட்டமாக ரூ.1,119 கோடியில் 114 ஏக்கர் நிலத்தில் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே மிக அதிகமாக அற்புதமான வேகத்தில் வளரக்கூடிய பொருளாதார வளர்ச்சியில் இன்று தமிழகம் இருந்து வருகிறது. தமிழகம் கடந்த 14 ஆண்டுகளாக ஒன்றை இலக்க அடிப்படையில் தான் பொருளாதார வளர்ச்சி இருந்து வந்துள்ளது. கடந்தாண்டு வரை 9 சதவீதம் என்ற கணக்கீட்டில் தான் இருந்துள்ளது.
- தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த திமுக ஆட்சியில்தான் முன்பு இரட்டை இலக்க எண்ணில் பொருளாதார வளர்ச்சி உயர்ந்திருந்தது.
- ஆனால், மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிடுள்ள தரவுகளின் அடிப்படையில் தமிழகம் தற்போது பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதத்தை எட்டியிருக்கிறது.
- இதனைத் தொடர்ந்து, தனிநபர் வருமானமும் வளர்ச்சி இன்னும் பன்மடங்கு உயரும். மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான வளர்ச்சியாக இல்லாமல் மாநில முழுவதுக்குமான பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்காகக் கிடைத்த வெற்றிதான் மத்திய அரசின் தரவுகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. இதன்வாயிலாக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடா்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
- இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- இந்தக் குழுவினர் பல்கலை. துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியாா் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
- அதன்படி, சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. எனினும், வெள்ளப் பாதிப்புகள், மக்களவைத் தோ்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
- அதன்பின் மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினா் 2024 ஜூலை 1-ஆம் தேதி தமிழக அரசிடம் சமா்ப்பித்தனர்.
- இந்த நிலையில் முதல்கட்டமாக பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஆக. 8) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- அந்த அறிக்கையில், 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும், கல்வி மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும், நீட் தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- மேலும் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தொடரும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் - பெலகாவி, அமிர்தசரஸ் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் சேவைகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
- இது பிரதமர் தொடக்கி வைத்த 150வது வந்தே பாரத் ரயிலாகும். பின்னர், பிரதமர் மெட்ரோ ரயிலில் ராகிகுட்டாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை பயணம் செய்தார்.
- தொடர்ந்து, பெங்களூரில் மஞ்சள் தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.
- பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. இதனிடையே, மூன்றாவதாக மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
- ஆர்.வி சாலை ரயில்நிலையம் முதல் பொம்மசந்திரா ரயில்நிலையம் வரையிலான இந்த மஞ்சள் தடத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை பிரதமர் தொடக்கி வைத்தார்.
- எலக்ட்ரானிக் சிட்டி பகுதியுடன் மெட்ரோ ரயில்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
- புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கர்தவ்ய பவன் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம், 60 முதல் 70 ஆண்டுகால கட்டடங்களிலிருந்து புதிய கட்டடங்களுக்கு அமைச்சகங்கள் மாறவிருக்கின்றன.
- இந்த அமைச்சக அலுவலகங்கள் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு பக்கங்களிலும் தரை தளம் மற்றும் ஆறு மாடிகளைக் கொண்ட கட்டடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கட்டடங்களில் மத்திய உள்விவகாரத் துறை, வெளி விவகாரத் துறை, ஊரக மேம்பாட்டுத் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை உள்ளிட்டவை இடம்பெறவிருக்கின்றன.
- வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும்.
- இந்நிலையில், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புகள் 5.50 சதவிகிதம் மாற்றாமல் நிலையாக வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
- ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது, வட்டி விகிதத்தை ஒருமனதாக நிலைநிறுத்தி, நடுநிலையான நிலைப்பாட்டைத் தொடர முடிவு செய்தது. இதனால் வீட்டு மற்றும் வாகன கடன்களின் மாதாந்திர தவணைகள் மாறாமல் நிலையாக இருக்கும்.
- உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்து நீடித்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது.
- அதே வேளையில், பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்தாலும், இது பெரும்பாலும் நிலையற்ற உள்ள உணவு விலைகள் காரணமாகும் என்றார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.
- போலந்தில் நடைபெற்ற 8-ஆவது வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
- வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் தொடரில் தனது இரண்டாவது முயற்சியில் 62.59 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றுள்ளார். 32 வயதாகும் அன்னு ராணு இந்திய அளவில் அதிக தூரம் ஈட்டி எறிந்ததில் தேசிய சாதனை படைத்த வீராங்கனையாக இருக்கிறார்.
- அசாம், திரிபுரா மாநிலங்களுக்கு மத்திய சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு புதிய கூறுகளின் செலவுக்கு ரூ.4,250 கோடி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- முன்மொழியப்பட்ட நான்கு புதிய கூறுகளின் ஒட்டுமொத்த செலவு ரூ.7,250 கோடியாக இருக்கும். இதில் அசாம் சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்புகளின் மத்திய துறை திட்டத்திற்கு ரூ.4000 கோடியும் மற்றும் திரிபுராவுக்கு ரூ.250 கோடியும் மத்திய அரசு வழங்கும். எஞ்சியுள்ள தொகையில் ரூ.3,000 கோடி அசாம் மாநில அரசால் அதன் வளங்களிலிருந்து வழங்கப்படும்.
- மத்திய அரசும், அசாம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் இனக்குழுக்களுடன் கையெழுத்திட்ட தீர்வு ஒப்பந்தத்தின்படி, ரூ.4,250 கோடியில், 205-26 நிதியாண்டு முதல் 2029-30 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.4,000 கோடி அசாமின் மூன்று கூறுகளுக்கும், 2025-26 நிதியாண்டு முதல் 2028-29 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு ரூ.250 கோடி திரிபுராவின் ஒரு கூறுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 175 பொறியியல் நிறுவனங்கள் மற்றும் 100 பாலிடெக்னிக் கல்லூரிகளை உள்ளடக்கிய 275 தொழில்நுட்ப நிறுவனங்களில் 'தொழில்நுட்பக் கல்வியில் பலதுறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு' திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- தேசிய கல்விக் கொள்கை 2020-உடன் இணைக்கப்பட்ட தலையீடுகளை செயல்படுத்துவதன் மூலம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய தொழில்நுட்பக் கல்வியில் தரம், சமத்துவம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
- இது 2025-26 முதல் 2029-30 வரையிலான காலத்திற்கு ரூ.4200 கோடி மொத்த நிதிச் சுமையுடன் கூடிய 'மத்தியத் துறைத் திட்டம்' ஆகும். ரூ.4200 கோடியில், உலக வங்கியிலிருந்து ரூ.2100 கோடி கடனாக, வெளிப்புற உதவியாக இருக்கும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 275 அரசு/அரசு உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆதரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், மாநிலப் பொறியியல் நிறுவனங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இணைப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ஆகியவை அடங்கும்.
- இது தவிர, தொழில்நுட்பக் கல்வித் துறையைக் கையாளும் மாநில/யூனியன் பிரதேசத் துறைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரிக்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.
- வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருவதால் அதனை ஈடு செய்யும் வகையில் ரூ.30,000 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைசச்கத்தால் பகிர்ந்தளிக்கப்படும். இந்த இழப்பீட்டுத் தொகை 12 தவணைகளாக வழங்கப்படும்.
- இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகிய மூன்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் நுகர்வோருக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்கிறது.
- 2024-25-ம் ஆண்டில் சர்வதேச அளவில் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டும் இந்த விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்தும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
- சர்வதேச அளவில் சமையல் எரிவாயு விலைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியத் தொகை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியத் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
- வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கும் (ஆண்டுதோறும் 9 சிலிண்டர் வரை) இந்த மானியம் வழங்கப்படும். 5 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களுக்கு இந்த மானியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்.
- 2025-26-ம் நிதியாண்டுக்கான இந்த மானியத் தொகை காரணமாக அரசுக்கு 12,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கான வைப்புத் தொகை இல்லாமல் சமையல் எரிவாயு இணைப்பு, ரெகுலேட்டர், பாதுகாப்பான எரிவாயு ட்யூப், நுகர்வோர் எரிவாயு அட்டை, இவற்றை நிறுவுவதற்கான கையேடு ஆகியவை அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை (01.07.2025) 10.33 கோடி பயனாளிகள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இணைப்பைப் பெற்றுள்ளனர்.
- தமிழ்நாட்டில் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.2,157 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- தற்போது சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், நாகப்பட்டினம் இடையே இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக மாநில நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
- முக்கிய நரகங்கள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கான சாலைக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
- இதனைக் கருத்தில் கொண்டு மரக்காணம் – புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 332ஏ நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது.
- இத்திட்டம் இரண்டு மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகளுடன் ஒருங்கிணைத்து மேம்படுத்தப்பட உள்ளதால், தமிழகம் முழுவதும் பொருளாதார சமூக மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான தடையற்ற இணைப்பை வழங்குகிறது.
- மேலும் புதுச்சேரி மற்றும் சின்னபாபு சமுததிரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை – புதுச்சேரியில் இரண்டு விமான நிலையங்கள் கடலூரில் ஒரு சிறிய துறைமுகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பல்வகைப் போக்குவரத்து வழித்தடமாக இந்த நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட உள்ளது.