
காஷ்மீருக்கு முதன்முறையாக சரக்கு ரயில் சேவை தொடக்கம்
- காஷ்மீர் பகுதியில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்குப் பொருட்களை எடுத்துச் செல்ல, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை மட்டுமே இதுவரை வர்த்தகர்கள் நம்பியிருந்தனர்.
- இந்த நெடுஞ்சாலை, மழை மற்றும் பனிக்காலங்களில் அடிக்கடி மூடப்படுவதால், வர்த்தகர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பிராந்தியத்துக்கு முதல் சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
- இந்தச் சரக்கு ரயில் சேவை, தோட்டக்கலை விளைபொருட்களை 24 மணி நேரத்துக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல உதவும். மேலும், போக்குவரத்து செலவும் குறையும்.
- இது ஆப்பிள் போன்ற அழுகும் பொருட்களை விரைவாகச் சந்தைக்குக் கொண்டு செல்ல உதவுவதால், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
- இந்திய ரயில்வே, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் கொண்ட ரயில் எஞ்சினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- இந்த சோதனை, சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றது. இந்த சோதனை வெற்றி, இந்திய ரயில்வேயின் எரிசக்தி மாற்றப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
- இந்த ஹைட்ரஜன் ரயில் எஞ்சின், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை இணைத்து மின்சாரத்தை உருவாக்குகிறது. இந்த செயல்முறையின்போது, நீராவியை மட்டுமே வெளியிடுவதால், இது சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் மாசு இல்லாததாகும்.
- இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் இந்திய ரயில்வேயின் அனைத்து டீசல் எஞ்சின்களையும் ஹைட்ரஜன் எஞ்சின்களாக மாற்ற உதவும்.
- புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
- இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்பட்டது.
- பழைய சட்டத்தில் இருந்த பல சிக்கலான நடைமுறைகளை களைந்து எளிமைப்படுத்தி தயாரிக்கப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- அப்போது, இந்த மசோதாவில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, மசோதா தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
- ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு, 4,500 பக்கங்கள் கொண்ட புதிய வருமான வரி மசோதா 2025-ன் மீது 285 பரிந்துரைகளை வழங்கியது.
- புதிய வருமான வரி சட்டத்தில் மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடப்படாத நன்கொடைகளுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்க வேண்டும், வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குப் பிறகும் எந்த அபராதக் கட்டணமும் செலுத்தாமல் டிடிஎஸ் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.
- இந்த பரிந்துரைகளில், பெரும்பாலான பரிந்துரைகளை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதா, மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
- ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் ஆடவர் ஓபன் கால் இறுதி சுற்று ஹீட் 1-ல் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் 14.84 புள்ளிகளை குவித்து முதலிடம் பெற்றார்.
- இதையடுத்து நடைபெற்ற அரை இறுதியில் ரமேஷ் புதிஹால் ஹீட் 1-ல் 11.43 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய சர்ஃபர் என்ற பெருமையை பெற்றார்.
- இந்நிலையில் நேற்று காலை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ரமேஷ் புதிஹால் 12.60 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றார். இந்த பிரிவில் முதல் 2 இடங்களை முறையே தென் கொரியாவின் கனோவா ஹீஜே (15.17 புள்ளிகள்), இந்தோனேசியாவின் பஜார் அரியானா (14.57) ஆகியோர் பிடித்தனர்.
- மகளிர் பிரிவில் ஜப்பானின் அன்ரி மாட்சுனோ 14.90 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கத்தை மற்றொரு ஜப்பான் வீராங்கனையான சுமோமோ சாடா (13.70 புள்ளிகள்) கைப்பற்றினார். இதே பிரிவில் தாய்லாந்து வீராங்கனை இசபெல் ஹிக்ஸ் 11.76 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.