
16th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நாட்டில் ஜூன் 2025 மாத வேலையின்மை விகிதம் - 5.6%ஆக பதிவு
- 2025, ஜூன் மாதத்தில் நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக தொடா்கிறது. மே மாதத்தில் பெண்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 5.6 சதவீதமாக குறைந்தது.
- 15-29 வயதுடையவா்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 15 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 15.3 சதவீதமாக உயா்ந்தது.
- அதிகரித்த நகா்ப்புற வேலையின்மை: நகா்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 17.9 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 18.8 சதவீதமாக அதிகரித்தது. கிராமப்புற பகுதிகளில் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 13.7 சதவீதமாக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 13.8 சதவீதமாக அதிகரித்தது.
- தொழிலாளா் பங்கேற்பு விகிதம்: 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோா் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் ( எல்எஃப்பிஆா்) ஜூன் மாத்தில் 54.2 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 54.8 சதவீதமாக இருந்தது.
- அதேபோல் ஜூன் மாதத்தில் 15 வயதுடையோருக்கான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 56.1 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 50.4 சதவீதமாகவும் உள்ளது.
- இந்த கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு முந்தைய 7 நாள்களின் நிலவரத்தின்படி ஜூன் மாதத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 78.1 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 75 சதவீதமாகவும் உள்ளது.
- மே மாதத்தில் இதே வயதுடைய ஆண்கள் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 78.3 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 75.1 சதவீதமாகவும் இருந்தது.
- தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம்: தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம் என்பது மொத்த மக்கள்தொகையில் பணியில் உள்ள தொழிலாளா்களைக் குறிக்கிறது.
- ஜூன் மாதத்தில் கிராமப்புறப் பகுதிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோா் மத்தியிலான தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம் 53.3 சதவீதமாகவும் நகா்ப்புறப் பகுதிகளில் 46.8 சதவீதமாகவும் உள்ளது.
- இதன்மூலம் ஜூன் மாதத்தில் கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோா் மத்தியிலான மொத்த தொழிலாளா்-மக்கள்தொகை விகிதம் 51.2 சதவீதமாக உள்ளது. இது மே மாதத்தில் 51.7 சதவீதமாக இருந்தது.
- நாட்டில் உள்ள தொழிலாளா்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடும் நோக்கில் குறிப்பிட்ட கால தொழிலாளா் கணக்கெடுப்பு நடைமுறையில் கடந்த ஜனவரி மாதம் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- அதன்படி இந்திய அளவில் 2025, ஜூன் காலாண்டில் முதல்கட்டமாக 7,520 மாதிரிகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
- இந்த காலகட்டத்தில் மொத்தம் 89,493 குடியிருப்புகளில் (கிராமப்புறம்-49,335 மற்றும் நகா்ப்புறம்-40,158) கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- இதில் கிராமப்புறத்தில் 2,17,251 போ் மற்றும் நகா்ப்புறத்தில் 1,63,287 போ் என மொத்தம் 3,80,538 போ் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், "பிரதமரின் தன்-தான்ய கிருஷி யோஜனா" எனப்படும் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டம் அடையாளம் காணப்படும் 100 மாவட்டங்களில், நடப்பு நிதியாண்டு முதல் (2025-26) ஆறு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். வேளாண் துறையிலும் அது சார்ந்த துறைகளிலும் விரைவான வளர்ச்சியை எட்டுவது தொடர்பாக இத்திட்டம் கவனம் செலுத்தும்.
- இத்திட்டம், வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தல், நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய தானிய சேமிப்புத் திறனை அதிகரித்தல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், விவசாயிகளுக்குக் கடன்கள் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம், மத்திய அரசின் 11 துறைகள், மாநில அரசுகளின் திட்டங்கள், தனியார் துறையினர் ஆகியோரின் கூட்டு ஒத்துழைப்புடன் தற்போது நடைமுறையில் உள்ள 36 திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்தப்படும்.
- குறைந்த உற்பத்தித்திறன், குறைந்த பயிர் சாகுபடி, விவசாயிகளுக்குக் குறைந்த கடன் வழங்கல் ஆகியவை உள்ள 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த மாவட்டங்ளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
- ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும், மாவட்டங்களின் எண்ணிக்கை நிகர பயிர் பரப்பளவு, நிலங்களின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கும் மாவட்டங்கள் தேர்வு செய்யப்படும். எனினும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தபட்சம் 1 மாவட்டம் தேர்ந்தெடுக்கப்படும்.
- திட்டமிடல், செயல்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றுக்காக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டத்தின் முன்னேற்றம் மாதாந்திர அடிப்படையில் கண்காணிக்கப்படும்.
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட்டில் ரூ.7,000 கோடி வரை முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுக்கான தற்போதைய முதலீட்டு வழிகாட்டு நெறிகளிலிருந்து என்எல்சி நிறுவனத்திற்கு சிறப்பு விலக்கு அளிக்க ஒப்புதல் அளித்தது.
- இந்த விதி விலக்கு என்பது 2030-ம் ஆண்டுக்குள் 10.11 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் என்ற என்எல்சி நிறுவனத்தின் லட்சிய இலக்கை எட்டுவதற்கும் 2047-ம் ஆண்டுக்குள் 32 ஜிகாவாட் என்ற அளவுக்கு விரிவுபடுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
- மத்திய அரசின் பஞ்சாமிர்த இலக்குகளின் ஒரு பகுதியாக 2030-க்குள் நிலக்கரி அல்லாத எரிசக்தித் திறனை 500 ஜிகாவாட் அளவுக்கு உற்பத்தி செய்ய உறுதிபூண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு என்எல்சி நிறுவனம் மிக முக்கியமான பங்களிப்பை செய்ய முடியும்.
- தற்போது மொத்தம் 2 ஜிகாவாட் நிறுவப்பட்ட திறனுடன் 7 புதுப்பிக்கவல்ல எரிசக்தி நிறுவனங்களை என்எல்சி செயல்படுத்தி வருகிறது. இன்றைய அமைச்சரவையின் முடிவு நிலக்கரியை சார்ந்திருப்பதையும், இறக்குமதி செய்வதையும் குறைத்து பசுமை எரிசக்தியின் தலைமையிடத்தை இந்தியா பெறுவதற்கும் நாடு முழுவதும் 24 மணி நேரமும் நம்பகமான மின் விநியோகத்தை விரிவுபடுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அப்பால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவாக இந்த முடிவு அமையும்.
- மகாராஷ்டிராவில் 2032-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 60 ஜிகாவாட்டாக அதிகரிக்க தேசிய அனல் மின் கழகத்தின் பசுமை எரிசக்தி நிறுவனத்திற்கான ஒதுக்கீட்டு வரம்பை ரூ.7500 கோடியிலிருந்து ரூ.20,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு உள்ளூர் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது.
- பசுமை எரிசக்தி நிறுவனம் அதன் இலக்கை எட்டுவதால் 2070-க்குள் நிகர பூஜ்ய உமிழ்வு என்ற இலக்கை எட்டுவதற்கு உதவியாக இருக்கும்.