
9th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (9.4.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் நிதி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.
- ரிசர்வ் வங்கி, நிதியாண்டு 2026க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
- இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கடைசி கொள்கை கூட்டத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருந்தனர்.
- இந்திய கடற்படைக்காக பிரான்சிடமிருந்து 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- 26 விமானங்களில் 22 விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து இயக்கக்கூடிய ஒற்றை இருக்கை ஜெட் விமானங்களாகும். மற்ற நான்கு, இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களாகும். இரு அரசுகளுக்கும் இடையிலான ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 (ஜிராக்பூர்-பாட்டியாலா) சந்திப்பில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை எண் 5 (ஜிராக்பூர்-பர்வானூ) சந்திப்பில் 19.2 கிலோமீட்டர் நீளத்திற்கு 6 வழி ஜிராக்பூர் புறவழிச்சாலை அமைக்கவும், பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவிடும் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்திற்கான மொத்த மூலதன மதிப்பீடு ரூ.1878.31 கோடியாகும்.
- ஜிராக்பூர் புறவழிச்சாலை, ஜிராக்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-7 (சண்டிகர்-பதிண்டா) சந்திப்பில் இருந்து தொடங்கி ஹரியானாவின் பஞ்ச்குலாவில் தேசிய நெடுஞ்சாலை எண்-5 (ஜிராக்பூர் - பர்வனூ) உடன் நிறைவடைகிறது.
- மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பதி – பகாலா – காட்பாடி ஒருவழி ரயில் பாதையை (104 கிலோமீட்டர்) இரட்டை ரயில் பாதையாக ரூ.1332 கோடி செலவில் மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்தப் பணி மேம்படுத்தப்பட்ட ரயில் பாதைத் திறன் இயக்கத்தை மேம்படுத்தி, இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேவையில் நம்பகத்தன்மையை வழங்கும். பல்தடத் திட்டமானது செயல்பாடுகளை எளிதாக்கி கூட்ட நெரிசலைக் குறைக்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (09.04.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டத்தின் (கிரிஷி சின்சாயி) துணைத் திட்டமாக 2025-2026 காலகட்டத்தில் நீர் பிடிப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கும், நீர் மேலாண்மையை நவீனமயமாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- தற்போதுள்ள கால்வாய்கள் அல்லது பிற ஆதாரங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் பாசன நீரை வழங்குவதற்காக பாசன நீர் வழங்கல் கட்டமைப்பை நவீனப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- தரவுகளுக்கான கண்காணிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு (SCADA), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பம் ஆகியவை நீர் கணக்கீட்டிற்கும் நீர் மேலாண்மைக்கும் பயன்படுத்தப்படும்.
- இது பண்ணை அளவில் நீர் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும். இத்திட்டம் வேளாண் உற்பத்தியையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.