
6th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சி-டாட் உருவாக்கியுள்ள கேரள காவல்துறையின் மேம்பட்ட சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன் திறந்து வைத்தார்
- கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன், காணொலி மூலம் காவல் அமைப்புகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கான சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கேரள காவல்துறையின் இணையவழிப் பிரிவின் "மேம்பட்ட சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை" திறந்து வைத்தார்.
- மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), கேரள காவல்துறைக்கான இணையப் பாதுகாப்பு செயல்பாட்டு மையமான திரிநேத்ராவை வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
- சி-டாட்டின் திரிநேத்ரா தீர்வு என்பது செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உள்நாட்டு, ஒருங்கிணைந்த இணையப் பாதுகாப்பு தளமாகும். இது நிறுவனங்கள் மற்றும் முக்கியமான துறைகளின் இணைய பாதுகாப்பை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது பாதிப்புகளை முன்கூட்டியே அடையாளம் காணுதல், முரண்பாடுகளைக் கண்டறிதல் மற்றும் குற்றங்களைத் தணித்தல் ஆகிய செயல்பாடுகளைக் கொண்டதாகும்.
- காவல்துறை தலைமையகம், நகர ஆணையரகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த காவல் நிலையங்களில் கணினிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் மேம்பட்ட சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் கவனம் செலுத்தும்.
- இந்த 24 மணி நேரமும் இயங்கும் மையமானது இணைய அச்சுறுத்தல் கண்காணிப்பு, பாதிப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் வலுவான தரவு பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
- இந்த முயற்சி கேரள காவல்துறையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும், இணைய பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
- விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்துரையாடலில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதி இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி ஆகியோர் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் அடிப்படையிலான புதிய கடன் மதிப்பீட்டு மாதிரியை அறிமுகம் செய்தனர்.
- 2024-25 மத்திய பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகள் (PSBs)கடன் வழங்குவதற்காக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு வெளிப்புற மதிப்பீட்டை சார்ந்திருப்பதற்குப் பதிலாக, தங்களது சொந்த உள் திறன் மதிப்பீடு முறை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
- பொருளாதாரத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல் தள மதிப்பெண்ணின் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகள் புதிய கடன் மதிப்பீட்டு மாதிரியை உருவாக்கும்.
- இந்தக் கடன் மதிப்பீட்டு மாதிரியானது, தொழில்துறைச் சூழல் அமைப்பில் டிஜிட்டல் முறையில் பெறப்பட்ட, சரிபார்க்கக்கூடிய தரவுகளைப் பயன்படுத்தி, அனைத்து கடன் விண்ணப்பங்களுக்கான மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
- இந்த மாதிரியைப் பயன்படுத்துவதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும். இணையதள முறையில் எங்கிருந்தும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், குறைந்த ஆவணங்கள், வங்கிக் கிளைக்கு நேரில் செல்வதற்கான தேவை தவிர்க்கப்படுதல், டிஜிட்டல் முறை மூலம் உடனடி கொள்கை ஒப்புதல், கடன் முன்மொழிவுகளை தடையின்றி பரிசீலித்தல், நேரடி செயல்முறை, குறைந்த செயல்பாட்டு நேரம் போன்ற பலன்கள் கிடைக்கும்.
- டிஜிட்டல் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட, குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டு மாதிரியானது, சொத்து அல்லது விற்றுமுதல் அளவுகோல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கடன் தகுதியின் பாரம்பரிய மதிப்பீட்டை விட குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் (IWAI) ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- மத்திய துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீநகரில் நடைபெற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியின் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் இந்தியாவில் நதி சொகுசுக் கப்பல் சுற்றுலாவைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
- ஜம்மு-காஷ்மீர் அரசுடனான இந்த ஒப்பந்தம், நதி சொகுசு கப்பல் சுற்றுலாவை மேலும் மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நதிகளில் கப்பல் சுற்றுலாவை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நாட்டில் உள்ள 111 தேசிய நீர்வழிகளில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மூன்று தேசிய நீர்வழிகள் உள்ளன. அவை செனாப் நதி நீர் வழி (NW-26), ஜீலம் நதி நீர் வழி (NW-49), ரவி நதி நீர் வழி (NW-84) ஆகியவை ஆகும்.
- நதி சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்குடன், சமீபத்தில் முடிவடைந்த உள்நாட்டு நீர்வழிகள் மேம்பாட்டு கவுன்சிலின் (IWDC) இரண்டாவது கூட்டத்தில், காஷ்மீர் முதல் கேரளா வரையிலும், அசாம் முதல் குஜராத் வரையிலும் பல்வேறு கப்பல் சுற்றுலா வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டன.
- இரண்டு மாத காலத்திற்குள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நதிக் கப்பல் சுற்றுலாவை சுமார் ரூ. 100 கோடி செலவில் மேம்படுத்த நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.