20th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் தலைமையில் விசாரணை குழு அமைப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
- கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்.
- இதனை வாங்கி குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
- மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி 36 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்துறை சார்பில், டெல்லியில் அண்மையில் உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 2023-24ம் நிதியாண்டில் நாட்டில் காற்றாலை மின்நிலையம் அமைத்ததில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்ததற்காக விருது வழங்கப்பட்டது.
- இவ்விருதை தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மத்திய இணையமைச்சர் பத் யசோ நாயக்கிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
- தமிழகத்தில் கடந்த ஆண்டில் 586 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலம் 1,600 மெகாவாட் உடன் முதலிடத்தையும், கர்நாடகா 700 மெகாவாட் உடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த பாஸ்கர் ஒய்வு பெற்றதையடுத்து, தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த எஸ். மணிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பிறப்பித்துள்ளார்.
- ஏற்கனவே எஸ். மணிகுமார் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்தவர். இதையடுத்து அவர் இங்கிருந்து கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டியிருந்தார்.
- அங்கு ஒய்வு பெற்றதையடுத்து தற்போது தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை பதவி வகிப்பார். இவருடன் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற ராஜா இளங்கோ மற்றும் வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோர் அங்கு நீதிபதிகளாக உள்ளனர்.
- மனித உரிமைகள் ஆணையத்தை பொறுத்தவரை எஸ். மணிகுமார், கண்ணதாசன் மற்றும் ராஜா இளங்கோ ஆகியோரும் செயல்படுவர்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2024-25-ம் ஆண்டு முதல் 2028-29-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.2254.43 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் சார்பில் "தேசிய தடய அறிவியல் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டத்திற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் நாட்டில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகங்களை உருவாக்குதல், நாட்டில் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களை நிறுவுதல்.
- தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தில்லி வளாகத்தில் தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 39 லட்சத்திலிருந்து 99 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.2869.65 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- 75,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட புதிய முனையக் கட்டடம் ஒரே நேரத்தில் 5000 பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
- இந்த திட்டத்தில் ஓடுபாதையை நீட்டிப்பது உள்ளிட்ட பணிகளும் அடங்கும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் முதன்மை நோக்கத்துடன் வாரணாசி விமான நிலையம் பசுமை விமான நிலையமாக உருவாக்கப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை, கடற்கரைக்கு அப்பால் காற்றாலை எரிசக்தித் திட்டங்களை அமல்படுத்துவதில் சாத்தியக்கூறு இடைவெளி நிதியளிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- தமிழ்நாட்டிலும், குஜராத்திலும் தலா 500 மெகா வாட் என மொத்தம் ஒரு ஜிகா வாட் மின்னுற்பத்திக்கு கடற்கரைக்கு அப்பால், காற்றாலை எரிசக்தித் திட்டங்களை நிறுவுதல், மற்றும் இயக்குதலுக்கான ரூ. 6853 கோடி உட்பட இவற்றுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ. 7453 கோடியாகும்.
- இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் போது, ஆண்டுக்கு 372 கோடி யூனிட் புதுப்பிக்க வல்ல மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதனால் அடுத்த 25 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2.98 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றம் குறைக்கப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவை, 2024-25 சந்தைப் பருவத்திற்கு கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளுக்கு சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டுக்கு அதிக அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இதன்படி எள்ளின் விலை குவிண்டாலுக்கு ரூ. 632-ம், காட்டு எள்ளின் (நைகர் சீட்) விலை குவிண்டாலுக்கு ரூ. 983-ம், துவரம்பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 550-ம் அதிகரிக்கும்.
- நெல்லின் விலை குவிண்டாலுக்கு ரூ. 117-ம், சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 191-ம், கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ. 444-ம், மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 135-ம், பயத்தம் பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 124-ம் அதிகரிக்கும்.
- எண்ணெய் வித்துகளை பொறுத்தவரை நிலக்கடலை விலை குவிண்டாலுக்கு ரூ. 406-ம், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 520-ம், சோயாபீன் (மஞ்சள்) விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 292-ம் அதிகரிக்கும்.
- நடுத்தர இழை மற்றும் நீள இழை பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ. 501 அதிகரிக்கும்.
- அகில இந்திய அளவில் சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது என மத்திய பட்ஜெட் 2018-19-ல் அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, 2024-25 சந்தைப் பருவத்தில் கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகாராஷ்டிராவின் தகானு அருகே வாதவனில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா கடல்சார் வாரியம் இணைந்து இந்தத் துறைமுகத்தை அமைக்க உள்ளன.
- இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.76,220 கோடியாகும். இந்தத் துறைமுகத்தில் 1000 மீட்டர் நீளமுள்ள ஒன்பது சரக்குப் பெட்டக முனையங்கள், கடலோர பெட்டக முனையம் உட்பட நான்கு பல்நோக்கு முனையங்கள் அமைக்கப்படும்.
- இந்தத் துறைமுகத்தில் திட்டம் ஆண்டுக்கு 298 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கைக் கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது.