
13th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ருச்சி ப்ரீதம் எழுதிய "Ancient Jain Legacy of Tamil Nadu" என்ற புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், அவர்களின் மனைவி ருச்சி ப்ரீதம் எழுதிய “Ancient Jain Legacy of Tamil Nadu" (தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
- எழுத்தாளர் ருச்சி ப்ரீதம் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு” என்ற புத்தகத்தில், மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் கலையில் சமண மதத்தின் தாக்கத்தையும், தமிழ்நாட்டின் அடையாளத்தில் சமண மதத்தின் ஒருங்கிணைந்த பங்கினையும் எடுத்துக்காட்டுகிறது.
- தமிழ்நாட்டின் கலை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் தாக்கம் குறித்த நுணுக்கமான விவரங்களுடன், மதத்திற்கு அப்பாற்பட்ட சமண மதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
- மேலும், இப்புத்தகம் சமண மதத்திற்கும் தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்புகளை ஆராய்வதுடன், சமண மதத்தின் நீடித்த செல்வாக்கிற்கு சான்றாக விளங்குகிறது.
- மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது.
- இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 பேரவைத் தொகுதிகளில், பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா். மீதமுள்ள 50 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது.
- பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் கூட காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட பிற கட்சிகள் களமிறங்கவில்லை. போட்டியிட்ட 50 தொகுதிகளில் பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்றது.
- ஏற்கெனவே போட்டியின்றி தோ்வான 10 இடங்களையும் சோ்த்து, பாஜகவின் பலம் 46 இடங்களை கைப்பற்றியது.
- தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும், அருணாசல் மக்கள் கட்சி 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பெமா காண்டு இன்று பதவியேற்றார்.
- அவர் தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சராகி உள்ளார். அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பாஜக கட்சியினர் பங்கேற்றனர்.
- 2024 மே மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் ஏப்ரல் 2024ல் 4.83 சதவிகிதமாக ஆக இருந்த நிலையில் அது 4.75 சதவிகிதமாக குறைந்துள்ளது.
- அதுவே கிராமப்புற மற்றும் நகர்ப்புற பணவீக்க விகிதம் முறையே 5.28% மற்றும் 4.15% ஆக உள்ளது. நுகர்வோர் உணவு விலை பணவீக்கமானது 2024 ஏப்ரலில் 8.70 சதவிகிதமாக இருந்த நிலையில் அது 8.69 சதவிகிதமாக குறைந்துள்ளது.
- குறிப்பிடத்தக்க வகையில், மே 2024க்கான பொது நுகர்வோர் அடிப்படையிலான அகில இந்திய பணவீக்கம், மே 2023க்குப் பிறகு மிகக் குறைவாக உள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இது செப்டம்பர் 2023 முதல் 6 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
- முந்தைய மாதமான ஏப்ரல் 2024 உடன் ஒப்பிடுகையில் 'ஸ்பைசஸ்' ஆண்டாண்டு பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க சரிவை கண்டுள்ளது. கூடுதலாக ஆடை, காலணி, வீட்டுவசதி போன்றவற்றுக்கான பணவீக்க விகிதங்களும் கடந்த மாதத்திலிருந்து குறைந்துள்ளன.
- நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறியீடு 5 சதவிகிதமாக வளர்ந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2023 ஏப்ரலில் பதிவு செய்யப்பட்ட 4.6 சதவிகித வளர்ச்சி விகிதத்திலிருந்து சிறிதளவு அதிகமாகும்.
- அதே வேளையில், சுரங்கத் துறை ஏப்ரல் 2023 உடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2024ல் 6.7 சதவிகித வளர்ச்சியை வெளிப்படுத்தியது. மறுபுறம் உற்பத்தித் துறை இதே காலகட்டத்தில் 3.9 சதவிகித மிதமான வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தது.
- கடைசியாக மின்சாரத் துறை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் 2024ல் 10.2 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் எட்டியுள்ளது.
- நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக தற்போது ஜெனரல் மனோஜ் பாண்டே இருக்கிறார். 2022 ஏப்ரல் மாதம் முதல் மனோஜ் பாண்டே ராணுவ தளபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.
- இவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், ராணுவத்திற்கு விரைவில் புதிய தளபதி அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியானது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் காரணமாக அறிவிப்பு வராமல் இருந்தது.
- இந்நிலையில், நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் திவேதி ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஏற்கவுள்ளார்.
- இப்போது ராணுவத் துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30வது இராணுவ தலைமை தளபதியாகப் பொறுப்பேற்க இருக்கிறார். இவர் காலாட்படை டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.