15th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
- வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராட்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கன்னரதேவனின் இரு கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தொல்லியல் துறையினரும் வருவாய் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
- அப்பொழுது வள்ளிமலை கோயில் அருகில் சிதிலமடைந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த கல்வெட்டுகளில், கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரக்கூட மன்னன் கன்னரதேவனின் வெற்றியைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
- இக்கல்வெட்டுகளில் தமிழிலும், கன்னடத்திலும் ஓரே செய்தியைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுகள் நாளடைவில் மண்ணுக்குள் புதைந்து, செடி கொடிகளால் சேதாரமாகி இருந்தன.
- இக்கல்வெட்டுகள் வேலூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
- இந்த கல்வெட்டுகள் 2011 -ஆம் ஆண்டு வள்ளிமலை இடும்பன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்டு, அவற்றை பாதுகாப்பதற்காக முருகன் சன்னதி அருகே அப்போதைய தொல்லியல் துறை அதிகாரிகள் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
- குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 வெளியிடப்பட்டபின் முதல் தொகுப்பு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. புதுதில்லியில் சில விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் திரு அஜய்குமார் பல்லா இன்று வழங்கினார்.
- விண்ணப்பதாரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த உள்துறை செயலாளர், குடியுரிமை (திருத்த) விதிகள், 2024-ன் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.
- குடியுரிமை (திருத்த) விதிகள், 2024-ஐ மத்திய அரசு 2024 மார்ச் 11 அன்று அறிவிக்கை செய்தது. இதன் தொடர்ச்சியாக மதரீதியான துன்புறுத்தல்கள் அல்லது அவற்றால் ஏற்பட்ட அச்சம் காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 31.12.2014 வரை இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- தில்லியில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டு பிரிவு இயக்குநர் தலைமையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழு உரிய பரிசீலனைக்குப் பின் 14 விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்தது.
- இதன் அடிப்படையில் இந்த விண்ணப்பதாரர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டு பிரிவு இயக்குநர் சான்றிதழ்கள் வழங்க அனுமதி அளித்தார்.
- மின் நிதிக் கழகம் 2023-24-ம் நிதியாண்டிற்கான அதன் நிதி செயல்பாடுகளை மும்பையில் இன்று (15.5.2024) நடைபெற்ற நிகழ்வில் அறிவித்தது.
- மின் நிதிக் கழகக் குழுமம் 25% அதிகரிப்புடன் வரிக்குப் பிந்தைய அதிக வருடாந்தர லாபத்தை பதிவு செய்தது. அதாவது 2023-ம் நிதியாண்டில் ரூ.21,179 கோடியாக இருந்த நிலையில், 2024-ம் நிதியாண்டில் ரூ.26,461 கோடியாக இருந்தது.
- மின் நிதிக் கழகக் குழுமத்தின் 2024-ம் நிதியாண்டின் மொத்த இருப்புநிலை ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடந்து நாட்டின் மிகப்பெரிய வங்கி சாரா நிதிக்குழுமமாக தொடர்கிறது. தற்போதைய இருப்புநிலை ரூ.10.39 லட்சம் கோடியாகும்.
- 31.03.2023 அன்று ரூ.8,57,500 கோடியாக இருந்த ஒருங்கிணைந்த கடன் சொத்து 16% அதிகரித்து 31.03.2024 அன்றைய நிலவரப்படி ரூ.9,90,824 கோடியாக உயர்ந்துள்ளது.
- ஒருங்கிணைந்த நிகர மதிப்பு (கட்டுப்பாடற்ற வட்டி உட்பட) 20% அதிகரித்துள்ளது. 31.03.2023 நிலவரப்படி ரூ.1,11,981 கோடியாக இருந்தது. இது 31.03.2024 நிலவரப்படி ரூ.1,34,289 கோடியாக உள்ளது.
- ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது. அதில் அவர் 82.27 மீட்டரை எட்டி முதலிடம் பிடித்து அசத்தினார்.
- முன்னதாக, ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ், மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் 4.05 மீட்டரை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா்.
- மற்றொரு தமிழரான பரணிகா இளங்கோவன் 4 மீட்டருடன் வெள்ளி பெற, கேரளத்தின் மரியா ஜெய்சன் 3.90 மீட்டருடன் வெண்கலம் வென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா - ஜிம்பாப்வே கூட்டு வர்த்தகக் குழுவின் 3-வது அமர்வு 13.05.2024 முதல் 14.05.2024 வரை புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை பொருளாதார ஆலோசகர் திருமதி பிரியா பி. நாயர் மற்றும் ஜிம்பாப்வே குடியரசின் வெளியுறவு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஒத்துழைப்பு, சர்வதேச வர்த்தகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் தலைமை இயக்குநர் திருமதி ரூடோ எம் ஃபரானிசி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
- ஜிம்பாப்வே தூதரக பொறுப்பாளர் பீட்டர் ஹொப்வானி மற்றும் ஜிம்பாப்வேயின் தொடர்புடைய அமைச்சகங்களின் 15-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
- இந்த விவாதங்கள் சுமூகமான மற்றும் நட்புரீதியான சூழ்நிலையில் நடைபெற்றன. அதிக ஒத்துழைப்பு, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது, மக்களுக்கு இடையேயான தொடர்புகளை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
- இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக சூழ்நிலையை இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர். அத்துடன் பல்வேறு வாய்ப்புகளையும் அவர்கள் குறிப்பிட்டனர். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
- டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்வுகள், தொலை மருத்துவம், கச்சா வைரங்கள், விரைவாகப் பணம் செலுத்தும் முறை மற்றும் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒழுங்குமுறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறித்து ஆராய இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.