தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. வரும் கல்வி ஆண்டில் (2024-25) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1-ம் வகுப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 1-ம் தேதி தொடங்கியுள்ளது. இதில் சேர விரும்பும் குழந்தைகளுக்கு 31.3.2024 அன்று 6 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
www.kvsangathan.nic.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 15-ம் தேதி மாலை 5 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர்வதற்கு அந்தந்த பள்ளிகளில் ஏப்ரல் 10-ம் தேதி மாலை 4 மணிக்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் அல்லாத பொதுமக்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கியதுபோக, எஞ்சியுள்ள இடங்கள் மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும். கே.வி. பள்ளிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கு உரிய இடஒதுக்கீடு உண்டு.