1st NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
- குறிப்பாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
- புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களும் புதிய முதலீடுகளை தமிழகத்தில் உருவாக்கும் நோக்கில் அரசுக்கு உரிய முன்மொழிவுகளை அளித்திருந்தன. அவர்களுக்கு அமைப்பு முறையினாலான தொகுப்பு சலுகைகளை வழங்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.
- சுமார் 8 தொழில் நிறுவனங்கள் அமைப்பு முறையினாலான தொகுப்பு சலுகைகளை பெறுவதற்கும், ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களின் தொழிற்சாலை விரிவாக்க நடவடிக்கை சார்ந்து சலுகைகளை பெறுவதற்கும் அவர்களின் கருப்பொருளை ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் குறிப்பாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் ஏறத்தாழ 7,108 கோடி ரூபாய் முதலீடுகளில் சுமார் 22,536 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க கூடிய திட்டங்களுக்கு அமைச்சரவையில் அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த தொழிற்சாலைகள் மின்சார வாகனம், காலணி உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள், கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாடு சார்ந்து முதலீடுகள் செய்ய உள்ளன.
- அடுத்ததாக தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை - 2023 குறித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, அது குறித்து விவாதித்து, கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தமிழகம் தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது.
- இந்த மாநிலத்தில் கடற்கரை மிகவும் நீளமானது. சுமார் 1,076 கி.மீ. நீளமான கடற்கரையை நாம் பெற்றுள்ளோம். இதில் 4 பெரிய துறைமுகங்கள், 17 சிறிய துறைமுகங்களும் உள்ளன.
- நம்முடைய தொழில் வளர்ச்சிக்கு சிறந்த துறைமுக கட்டமைப்பு அவசியம். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை - 2023 வடிவமைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் வளர்ச்சிக்காக இதனை வடிவமைத்துள்ளோம்.
- கடந்த 16 ஆண்டுகளில் கடல்சார் வணிகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பல்வேறு மாநிலங்களிடையே பெரிய போட்டி நிலவுகிறது. இந்த வளர்ச்சி சார்ந்து தனியார் துறை முதலீட்டை ஈர்க்க இத்தகைய துறைமுக மேம்பாட்டு கொள்கை உருவாக்கப்படுவது அவசியமானதாக இருக்கிறது.
- இதையொட்டி மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இப்போது நடைமுறையில் உள்ள கொள்கைகளை ஆய்வு செய்து, அதனை உள்வாங்கிக் கொண்டு, போட்டித்தன்மையை கவனித்து இந்த துறைமுக மேம்பாட்டு கொள்கையை உருவாக்கி இருக்கிறோம்.
- கப்பல் மறுசுழற்சி வசதி, மிதவை கலன் கட்டுதல், துறைமுகங்களை மேம்படுத்துதல், அதனை வணிக ரீதியிலான சாத்தியமாக மாற்றுவதற்கான விஷயங்கள், அது சார்ந்த அனுமதியை முறைப்படுத்துவது, வியாபாரத்தை எளிதாக்குதல் தொடர்பாக இந்த கொள்கையை உருவாக்கி உள்ளோம்.
- சவாலான நீர் விளையாட்டுகள், பசுமை துறைமுக திட்டங்கள், ஆழ்கடல் துறைமுக வளர்ச்சி சார்ந்த முதலீடு தனியார் பங்களிப்புடன் பெறப்பட உள்ளது. இது அனைத்தையும் உள்ளடக்கி இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளோம்.
- காற்றாடி பறக்கவிடும் போட்டிகளின் போது மனிதா்களுக்கும் விலங்குகளுக்கும் குறிப்பாக பறவைகளுக்கும் பலத்த காயங்கள், உயிரிழப்புகள் ஏற்பட மாஞ்சா நூலே காரணமாக உள்ளது.
- மேலும், இவை வடிகால் பாதைகள், நீா்நிலைகளை அடைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் சீா்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பறவைகள், பிற விலங்கினங்களுக்கு மிக ஆபத்தான சூழலை ஏற்படுத்துகிறது.
- இந்த நிலையில் விலங்குகள், பறவைகள், பொதுமக்கள் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் நைலான், நெகிழி அல்லது செயற்கை பொருள்களால் தயாரிக்கப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலுக்கு அரசு முழுமையான தடை விதித்துள்ளது. அதன்படி, மாஞ்சா நூல் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் முழுமையாக தடை செய்யப்படுகிறது.
- இது தொடா்பாக அக்.6-ஆம் தேதி உத்தரவு வெளியிடப்பட்டு, அக்.30-ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த அரசாணையில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், வனத் துறை வனச்சரகா்கள், அதற்கும் மேல்நிலை அதிகாரிகள், தமிழ்நாடு காவல் துறை உதவி ஆய்வாளா்கள், அதற்கும் மேல்நிலை அதிகாரிகள், நகராட்சி, மாநகராட்சி ஆணையா்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மேற்படி அறிவிப்பை செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- இந்தத் தடை உத்தரவை மீறுபவா்களுக்கு சுற்றுச்சூல் (பாதுகாப்பு) சட்டம், 1986-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (1.11.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 'தமிழரசு' சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு" (தமிழ் நூல்) மற்றும் "Tamil Nadu's Contribution to the Freedom Struggle" (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை வெளியிட, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று முதன்முதலாக 15.08.2021 அன்று சுதந்திரத் திருநாளன்று சென்னை தலைமைச் செயலக கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து ஆற்றிய உரையின்போது, இந்திய இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அளித்த பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தயாரித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடும் என்று அறிவித்தார்.
- அக்.31 உலக நகரங்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ.
- கேரளத்தில் உள்ள கோழிக்கோடும் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரும் இந்தப் பட்டியலில் இணைகின்றன. கலாச்சாரம், படைபூக்கம் மற்றும் புத்தாக்க நகர மேம்பாட்டுக்கான அங்கீகாரமாக உலகம் முழுவதுமிருந்து 55 நகரங்களை இந்தப் பட்டியலில் புதிதாக சேர்த்துள்ளது யுனெஸ்கோ.
- கோழிக்கோட்டுக்கு இலக்கிய நகரம் என்கிற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கேரள இலக்கிய விழா மற்றும் புத்தக வெளியீடுகள் தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வருகின்றன. குவாலியருக்கு, இசைக்கான நகரம் என்கிற அங்கீகாரத்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது.
- இந்தியாவின் பழமையான ஹிந்துஸ்தானி இசை, நாட்டுப்புற இசை மற்றும் பக்தி இசையில் குவாலியர், தனித்துவமான கலாச்சாரத்தையும் பன்முகத்தன்மையையும் கொண்டுள்ளது.
- மேலும், மொரோக்கோ நாட்டின் காசாபிளாங்கா, நேபாளின் காத்மாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ உள்ளிட்ட 55 நகரங்கள் இந்த வலைப்பின்னலில் புதிதாக இணைகின்றன.
- ஐக்கிய படைப்பூக்க நகரங்களுக்கான வலைப்பின்னலின் (யுசிசிஎன்) கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள இந்த நகரங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
- 2024-ம் ஆண்டு ஜூலையில் போர்ச்சுகலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
- இந்தியா- வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து காணொளிக் காட்சி மூலம் மூன்று இந்தியாவின் உதவியுடனான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.
- அகௌரா - அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்பு குல்னா - மோங்லா துறைமுக ரயில் பாதை; மற்றும் மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் அலகு - II ஆகிய மூன்று திட்டங்களை இருவரும் தொடங்கி வைத்தனர்.
- வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட ரூ.392.52 கோடி இந்திய அரசின் மானிய நிதியுதவியின் கீழ் அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் 6.78 கி.மீ இரட்டை ரயில் பாதை மற்றும் திரிபுராவில் 5.46 கி.மீ இரட்டை ரயில் பாதையுடன் ரயில் இணைப்பின் நீளம் 12.24 கி.மீ ஆகும்.
- குல்னா-மோங்லா துறைமுக இரயில் பாதைத் திட்டம் இந்திய அரசின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்த திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தில் மோங்லா துறைமுகத்திற்கும் குல்னாவில் தற்போதுள்ள ரயில் வலையமைப்பிற்கும் இடையில் சுமார் 65 கி.மீ அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் மூலம், வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா அகல ரயில் பாதையுடன் இணைக்கப்படுகிறது.
- 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய சலுகை நிதி திட்டத்தின் கீழ் மைத்ரி சூப்பர் அனல்மின் திட்டம், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் உள்ள ராம்பாலில் அமைந்துள்ள 1320 மெகாவாட் சூப்பர் அனல்மின் நிலையம் ஆகும்.
- இந்தியாவின் என்.டி.பி.சி லிமிடெட் மற்றும் வங்கதேச மின் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான 50:50 கூட்டு முயற்சி நிறுவனமான வங்கதேசம்-இந்தியா நட்புணர்வு மின் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
- மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு 2022ம் ஆண்டு செப்டம்பரில் இரு பிரதமர்களாலும் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது மற்றும் 2 வது அலகு 2023 நவம்பர் 1 அன்று திறந்து வைக்கப்படும்.
- மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தை இயக்குவது வங்கதேசத்தின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும். இந்தத் திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்.
- நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 13 சதவீதம் அதிகமாகும்.
- நடப்பு நிதியாண்டில் 2-ஆவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.70 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.52 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சம் கோடி வசூலான நிலையில், இரண்டாவது அதிகபட்ச தொகையாக அக்டோபரில் வசூலாகியிருக்கிறது.
- சராசரியாக மாதம் ரூ.1.66 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகமாகும்.
- கடந்த ஆண்டு ஜிஎஸ்டி ரூ.8,93,334 கோடி வசூலாகியிருந்து; சராசரி மாத வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.59 லட்சம் கோடியாக இருந்தது.
- கடந்த ஏப்ரலில் சாதனை அளவாக ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. விழாக் காலம் என்பதால், எதிா்வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.