13th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2023-24 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள் அரசு மின் சந்தைத் தளம் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு மொத்த வர்த்தக மதிப்பை எட்டி புதிய சாதனை
- கடந்த நிதியாண்டு (2022-23) முழுவதற்குமான மொத்த வர்த்தக மதிப்பை (ஜிஎம்வி) விஞ்சி, நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள் மொத்த வர்த்தக மதிப்பு (ஜிஎம்வி) ரூ. 2 லட்சம் கோடியைத் தாண்டி, அரசு மின் சந்தைத் தளம் (ஜிஇஎம்) ஒரு குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது
- நடப்பு நிதியாண்டில் இந்த முக்கியமான சாதனைக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் கணிசமான பங்களிப்பை செய்துள்ளன. இவற்றின் மதிப்பு 83 சதவீதம் ஆகும்.
- மீதமுள்ள 17 சதவீதம் மாநில அரசுகளின் பங்களிப்பாகும். உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தில்லி, மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பீகார், அசாம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடப்பு நிதியாண்டில் கணிசமான அளவு கொள்முதல் ஆணை நடைமுறைகளை இந்தத் தளத்தின் மூலம் மேற்கொண்டுள்ளன.
- சேவைத் துறையில் ஜிஇஎம்-ன் விரிவாக்கமும் அதன் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. சேவைகள் பிரிவில் கொள்முதல் ஆணைகள் மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்துள்ளது.
- 2021-22 நிதியாண்டில் 23 சதவீதமாக இருந்த சேவைகள் துறை வர்த்தகம், நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- ஜிஇஎம் தளம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ. 5.93 லட்சம் கோடி மொத்த வர்த்தக மதிப்பைத் தாண்டியுள்ளது. ஜிஇஎம்-மில் மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 1.8 கோடியைத் தாண்டியுள்ளது.
- இந்த ஜிஇஎம் டிஜிட்டல் மாற்றத்துக்கு பலமாக இருப்பதுடன் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் "மேக் இன் இந்தியா" முன்முயற்சியின் மைல்கல்லாகவும் உள்ளது.
- இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (ஐஐசிஏ), லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ் (அறக்கட்டளை) & வெய்சி இந்தியா ஆகியவை குருகிராமின் மானேசரில் இன்று (13-11-2023) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐசிஏ-வின் டாக்டர் லதா சுரேஷ் மற்றும் லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ்-சின் நிறுவனர் திரு உமேஷ் ரத்தோட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்) மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிப்பதும், அவர்களின் அறிவு, திறன்களை மேம்படுத்துவதும், தொழிலாளர்களை நிர்வகிப்பதும் இதன் நோக்கம்ஆகும். ஐஐசிஏ-வுடன் இணைந்து, லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ் நிறுவனம் பெண் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை வழங்கும்.
- பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தலில் அவர்களுக்கு வளங்கள், பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் பிற ஆதரவு வழிமுறைகள் வழங்கப்படும்.
- உயர்தரமான நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குதல், நகர்ப்புறங்களில் சேவை வழங்கலை மேம்படுத்துதல், திறமையான நிர்வாக அமைப்புகள் போன்றவற்றுக்காக ஆசிய வளர்ச்சி வங்கியுடன் 400 மில்லியன் டாலர் கொள்கை அடிப்படையிலான கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று (13-11-2023) கையெழுத்திட்டது.
- நிலையான நகர்ப்புற மேம்பாடு மற்றும் சேவை வழங்கல் திட்டத்தின் துணைத் திட்டம் 2-க்கான கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இணைச் செயலாளர் திருமதி ஜூஹி முகர்ஜி, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியப் பிரிவு இயக்குநர் திரு டகேயோ கொனிஷி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த 350 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் 2021 ஆம் ஆண்டில் துணை திட்டம் 1 அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இந்தத் துணைத் திட்டம் -2 மாநில மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி நிலைகளில் முதலீட்டுத் திட்டமிடல் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.
- ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவித்து, கடந்த வியாழன் அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 145 நாடுகள் வாக்களித்தன.
- 7 நாடுகள் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஐ.நா. தீர்மானத்தில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- காஸா மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான சண்டை நிறுத்தம் குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது.