குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு தாமதமாவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம். தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் பணியில் தொடங்கி துணை ஆட்சியர் வரையிலான பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றது.
லட்சக்கணக்கானவர்கள் போட்டியிடும் இத்தேர்வுகள் தொடர்பான திட்ட அறிக்கையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் வெளியிடும்.
அந்த வகையில், நடப்பாண்டு வெளியிட்ட திட்ட அறிக்கைப்படி, டி.என்.பி.எஸ்.சி. செயல்பட்டு இருந்தால், இம்மாதம் குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்று இருக்கும். ஆனால், தற்போது வரை டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்றும், நவம்பரில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சியின் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், திட்ட அறிக்கைப்படி டி.என்.பி.எஸ்.சி. செயல்படாததால், குரூப்-1 தேர்வுக்கான தாமதம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
குறிப்பாக, உதவி வன பாதுகாவலர், தொழிலாளர் நல உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பும் வெளியாகாததால், அதனை குரூப்-1 முதல்நிலைத் தேர்வு உடன் சேர்த்து நடத்த டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தேர்வாணையம், குரூப்2 மற்றும் குரூப்2 ஏ, தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருவதால், குரூப்-1 அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் நிலவுதாக கூறியுள்ளது.
தாமதத்திற்கான காரணங்களை டி.என்.பி.எஸ்.சி. நியாப்படுத்தினாலும், வயது உச்சவரம்பின் விளிம்பில் உள்ள தேர்வர்களுக்கு அநியாயம் இழைப்பதாகவே இந்த தாமதம் அமைந்துள்ளது.
குரூப்-1 பணிகளுக்கான தேர்வுக்கு பொதுப்பிரிவினருக்கு 34 வயதும், இதர வகுப்பினருக்கு 39 வயதும் உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், மேலும் 2 ஆண்டுகள் தற்காலிகமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டு வெளியாக வேண்டிய குரூப்-1 அறிவிப்பு, அடுத்தாண்டு வெளியாகும் பட்சத்தில், வயது வரம்பின் விளிம்பில் உள்ளவர்கள் தேர்வை எழுதக் கூட முடியாத நிலை ஏற்படும்.
எனவே, இதனை அரசு கவனத்தில் கொண்டு நடப்பாண்டிற்குள் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே தேர்வர்களின் பிரதான கோரிக்கையாகும். அதே சமயம், நீண்ட நாள் கோரிக்கையான வயது உச்ச வரம்பை அதிகரிப்பது குறித்தும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று போட்டித் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.