30th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆடவருக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் 2023
- ஆடவருக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் கொரியாவில் உள்ள புசான் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, கொரியா, ஜப்பான், ஈரான், சீன தைபே, ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்துகொண்டுள்ளன.
- இந்திய அணி லீக் சுற்றில் கொரியா, ஜப்பான், ஈரான்,சீன தைபே, ஹாங் காங் ஆகிய 5 அணிகளையும் வீழ்த்தி இருந்தது.
- இந்நிலையில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, ஈரானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பவன் ஷேராவத் 10 புள்ளிகள் குவித்தார்.
- ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் உள்ள ஹுவாங்சோவ் நகரில் நடைபெற்றது.
- இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் ஜோடி தரவரிசையிலில் 2-வது இடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த அர்னால்ட, இவான் யூயன் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
- இதில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் ஜோடி 11-10, 11-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதிப்புமிக்க டயமண்ட் லீக் தொடரின் லொசேன் லெக் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில், 87.66 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
- ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.03 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தையும், செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் 86.13 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள்
- மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு 6,194.40 கோடி ரூபாய் வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, பீஹார், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கோவா, ஒடிசா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான நிதியாக 4,984.80 கோடி ரூபாய் வழங்கப்படும்.
- வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, 2022 - 23ம் ஆண்டுக்காக 1,209.60 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
- இந்த நிதி நடப்பு பருவமழைக் காலத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உதவியாக இருக்கும்.
- பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, 2023 - -24ம் ஆண்டில், ஒன்பது மாநிலங்களுக்கு, மாநில நிவாரண நிதிக்கான மத்திய அரசின் பங்காக 3,649.40 கோடி ரூபாயை வழங்க ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
- புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு வணிகங்களுக்கான உரிமம், பதிவுச் சான்று வழங்குதல் மற்றும் உணவு மாதிரிகள் எடுத்து கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட போட்டியில் இந்திய அளவில் 260 மாவட்டங்கள் கலந்து கொண்டன.
- வெற்றி பெற்றது என தேர்வு செய்யப்பட்ட 31 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகளை பெற்றுள்ளது.
- இப்போட்டியில், கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2022-2023ம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பட்டது.
- இதனிடையே தலைமை செயலகத்தில் நேற்று 'ஈட் ரைட் சேலஞ்' போட்டியில் தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்கு சிறந்த செயல்பாட்டிற்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்காக வழங்கப்பட்ட விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்துகள் பெற்றார்.
- மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 2023, ஜூன் 30-ந் தேதி ஐஎன்எஸ் ஷான்குஷ் நீர்மூழ்கிக் கப்பலின் மறுசீரமைப்பு சான்றிதழுக்காக மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மும்பையில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.2,275 கோடி ஆகும்.
- எஸ்எஸ்கே வகை நீர்மூழ்கிக் கப்பலான ஷான்குஷ், மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்படும். அவ்வாறு மறுவடிவமைப்பு செய்யப்படும் நீர்மூழ்கிக் கப்பல் 2026-ம் ஆண்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் ஷான்குஷ் சேர்க்கப்படும்.
- இந்தத் திட்டத்தில் 30 சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தத் திட்டம் மத்திய அரசின் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான முக்கிய படியாக கருதப்படும்.