7th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
துவாரகா விரைவுச்சாலைக்கு ஊக்கமளிக்கும் விதமாக குருகிராமில் ஹூடா சிட்டி சென்டரிலிருந்து சைபர் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- துவாரகா விரைவுச்சாலைக்கு ஊக்கமளிக்கும் விதமாக குருகிராமில் ஹூடா சிட்டி சென்டரிலிருந்து சைபர் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 28.50 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 27 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
- இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மொத்த செலவு ரூ.5,452 கோடியாக இருக்கும். இந்தத் திட்டத்தை 4 ஆண்டுகளில் நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் 50:50 என்ற விகிதத்தில் செலவை ஏற்கும். ஹரியானா மாநில எம்ஆர்டிசி நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.
- பழைய குருகிராமில் இதுவரை மெட்ரோ ரயில் போக்குவரத்து இல்லை. தற்போதைய திட்டம் பழைய குருகிராமுடன் புதிய குருகிராமை இணைப்பது சிறப்பம்சமாகும்.
- இந்த வழித்தடம் மற்ற ரயில்வே வழித்தடத்தை இணைக்கும். அடுத்த கட்டத்தில் இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை இணைப்பதற்கு வழிவகுக்கும். மேலும் இந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
- புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சமபங்கு அளிப்பதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும்.
- இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இந்த புதுப்பிக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் மூலம் நாட்டின் தொலை தூரப் பகுதிகளுக்கும் தொடர்பு வசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிலையான தொலைத்தகவல் சேவை நிறுவனமாக பிஎஸ்என்எல் வளர்ச்சி பெறும்.
- நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி கண்டறிதல் தொடர்பான மத்திய திட்டத்தைத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2021-22-ஆம் நிதியாண்டிலிருந்து 2025-26-ஆம் நிதியாண்டு வரை 15-வது நிதி ஆணையத்தின் திட்டப்படி ரூ.2,980 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- இந்தத் திட்டத்தின் கீழ், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு இரண்டு விரிவான நிலைகளில் நடத்தப்படுகிறது: (i) பிராந்திய ஆய்வு ஊக்குவிப்பு மற்றும் (ii) கோல் இந்தியா நிறுவன எல்லைக்கு உட்படாத பகுதிகளில் விரிவான ஆய்வு ஆகியவையாகும்.
- இந்தத் திட்டத்தின் ஒப்புதல் மூலம் பிராந்திய ஆய்வு ஊக்குவிப்புக்கு ரூ.1650 கோடியும், கோல் இந்தியா நிறுவன (சிஐஎல்) எல்லை அல்லாத பகுதிகளில் விரிவான ஆய்வுக்காக ரூ.1330 கோடியும் ஒதுக்கப்படும்.
- உத்தேசமாக, 1300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பிராந்திய ஆய்வின் கீழும், உத்தேசமாக 650 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிவான ஆய்வுத் திட்டத்தின் கீழும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க உதவும் வகையில், நிலக்கரி வளங்கள் தொடர்பான ஆதாரங்களை நிரூபிக்கவும் மதிப்பிடவும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு அவசியமானதாகும்.
- இந்த ஆய்வின் மூலம் தயாரிக்கப்படும் புவியியல் அமைப்பு தொடர்பான அறிக்கைகள், புதிய நிலக்கரிச் சுரங்கத் தொகுதிகளை ஏலம் விட பயன்படுத்தப்பட்டு, அதன்பின் ஒதுக்கீடு பெறுபவர்களிடமிருந்து செலவு வசூலிக்கப்படும்.
- 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது.
- 2018-19ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி விலையைவிட குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்குக்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், 2023-24-ஆம் ஆண்டுக்கான கரீஃப் சந்தைப்பருவ குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- பஜ்ராவுக்கு 82 சதவீதமும், துவரைக்கு 58 சதவீதமும், சோயாபீனுக்கு 52 சதவீதமும், உளுந்துக்கு 51 சதவீதமும், விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கும் மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீத அளவுக்கு விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும்.
- சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ஐ.எஸ்.ஏ) எட்டாவது நிலைக்குழுக் கூட்டம் 06.06.20223 அன்று புதுதில்லியில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்றது.
- நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் என இரண்டு முறைகளிலும் இக்கூட்டம் நடைபெற்றது. பிரான்சும் இதற்கு கூட்டாக தலைமை வகித்தது.
- உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் சிலர் தில்லியில் நேரில் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாகவும் சில நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- உறுப்பு நாடுகளின் செயல்விளக்க திட்டங்கள், சூரிய சக்தித் தொழில்நுட்ப பயன்பாட்டு வள மையம் (ஸ்டார்-சி), சூரிய சக்திக் கூட்டமைப்பின் 6-வது கூட்டத்துக்கான ஏற்பாடுகள் போன்றவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.