30th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தில்லியில் காற்றின் தரக் குறியீடு
- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றுத் தரக் குறியீட்டுத் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் தில்லியில் காற்றின் தரம் “சிறந்தது” முதல் “மிதமான'து என்ற அளவில் அதிக நாட்கள் இருந்துள்ளது.
- 2016 முதல் கடந்த 7 ஆண்டுகளில் கோவிட் கால ஊரடங்கு காலத்தைத் தவிர பிற காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த நான்கு மாத காலப்பகுதியில் தான் அதிக நாட்கள் நல்ல நிலையில் காற்றின் தரக் குறியீடு இருந்துள்ளது.
- ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 2016-ம் ஆண்டில் 8 நாட்களும், 2017-ம் ஆண்டில் 29 நாட்களும் 2018-ம் ஆண்டில் 32 நாட்களும் 2019-ம் ஆண்டில் 44 நாட்களும், 2020-ம் ஆண்டில் 68 நாட்களும், 2021-ம் ஆண்டில் 31 நாட்களும், 2022-ம் ஆண்டில் 27 நாட்களும் காற்றின் தரம் “சிறப்பு” அல்லது “மிதமானது” என்ற நிலையில் இருந்துள்ளது.
- இதில் 2020-ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் கோவிட் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது, நடப்பு 2023-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 52 நாட்கள் காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையில் அல்லது மிதமான நிலையில் இருந்துள்ளது.
- கோவிட் பாதிப்புக் காலத்தைத் தவிர கடந்த 7 ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2023-ம் ஆண்டில் இதுவரை தில்லியில் மிகக் குறைந்த நாட்களே ‘மோசமானது முதல் மிக மோசமானது’ என்ற தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
- எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. இதன் 'ஸ்கீட்' கலப்பு அணிகளுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் மைராஜ் அகமது, கனேமத் ஜோடி பங்கேற்றது. 143 புள்ளிகள் பெற்ற இவர்கள் முதலிடம் பிடித்து தங்கத்திற்கான போட்டிக்கு முன்னேறினர்.
- சக போட்டியாளராக மெக்சிகோவின் ஆலிவர்ஸ், கேப்ரியல்லா ஜோடி பங்கேற்றது. 43 வயதான அகமதுவின் அனுபவம், கனேமத்தின் (22 வயது) துடிப்பான செயல்பாடு கைகொடுத்தது.
- முடிவில், 6-0 என வெற்றி பெற்ற இந்திய ஜோடி தங்கப்பதக்கம் கைப்பற்றியது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாக அமைந்தது.
- அகமது 'சீனியர்' அளவில் வென்ற ஐந்தாவது பதக்கம். கனேமத்தை பொறுத்தவரை 4வது பதக்கம். கலப்பு அணிகள் பிரிவில் இவர் கைப்பற்றிய 2வது பதக்கம் இதுவாகும்.
- துபாயில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 40வது சீசன் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆங் யேவ் சின், டியோ ஈ யி ஜோடியை எதிர்கொண்டது.
- முதல் செட்டை 16-21 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-17 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
- வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஒரு கட்டத்தில் 8-11 என பின்தங்கி இருந்த இந்திய ஜோடி, பின் சுதாரித்துக் கொண்டு 21-19 என தன்வசப்படுத்தியது.
- ஒரு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் அபாரமாக ஆடிய சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 16-21, 21-17, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இதன்மூலம் ஆசிய பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது.
- இதற்கு முன், ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் திபு-ராமன் கோஷ் (1971), பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஷ்வினி பொன்னப்பா (2014), கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ரான்கன்-சரோஜினி (1965), ஷேக்-கர்னிக் (1965) ஜோடிகள் தலா ஒரு வெண்கலம் வென்றிருந்தன.
- தவிர இது, 58 ஆண்டுகளுக்கு பின் ஆசிய பாட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். கடைசியாக 1965ல் ஒற்றையரில் இந்தியாவின் தினேஷ் கண்ணா தங்கம் வென்றிருந்தார்.