11th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக அரசு - ஹூண்டாய் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
- தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் (இந்தியா) தலைமைச் செயல் அலுவலர் உன்சூ கிம் பரிமாறிக் கொண்டனர்.
- இந்நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், ஹூண்டாய் கார்ப்பரேட் விவகாரங்கள் செயல் இயக்குநர் டி.எஸ்.கிம், நிதிப் பிரிவு துணைத் தலைவர் டி.சரவணன், கார்ப்பரேட் விவகாரங்கள் இணை துணை தலைவர் புனீத் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- தமிழக அரசு - ஹூண்டாய் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 1.78 லட்சம்பேட்டரி அசம்பிள் செய்யும் வகையில் தொழிற்சாலை, அடுத்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைத்தல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையின் உற்பத்தி திறனை 8.50 லட்சம் வாகனங்களாக உயர்த்துதல், மின்சார வாகனங்கள் தயாரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
- தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், அமைச்சரவையில் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் மன்னார்குடி எம்எல்ஏ-வும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு கடந்த 9-ம் தேதி வெளியானது.
- சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டிஆர்பி.ராஜாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
- தமிழக அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, டிஆர்பி.ராஜா புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, அமைச்சர்களின் பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
- அதன்படி, புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி.ராஜாவுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்து வந்த தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
- பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கவனித்து வந்த நிதி, திட்டம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள், புள்ளியியல் ஆகிய துறைகள் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் ஏற்கெனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சிமொழித் துறை ஆகியவை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- அமைச்சர் த.மனோ தங்கராஜ் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் கவனித்து வந்த பால்வளத் துறை மனோ தங்கராஜுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- மகளிர் முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
- அக்குழுக்களின் பொருளாதார சுயசார்புக்கு வலுசேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்புவழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- இதை செயல்படுத்தி, சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எட்டவும், சுயஉதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தரவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- இதன் ஒருபகுதியாக, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையேநேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினியும், சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் நிராஜ் பாண்டாவும் கையெழுத்திட்டனர்.
- யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம்-ஒழுங்கு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
- இது தொடர்பாக 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2016-ல் ஆளுநருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
- 2019-ல் இரு நீதிபதிகள் அமர்வு, இவ்வழக்கில் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியது. ஒரு நீதிபதி அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு நீதிபதி துணைநிலை ஆளுநருக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர்.
- இதையடுத்து, இந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
- இதன்படி, தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு வழக்கை விசாரித்தது.
- இதற்கிடையில், 2021-ல் "தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம்" நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்டறிவது கட்டாயமாக்கப்பட்டது. இதன் பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும்கூட, துணைநிலை ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
- இந்த சூழலில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: இதர யூனியன் பிரதேசங்களுக்கும், டெல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும்.
- பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக் குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
- டெல்லி துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
- தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 11 அன்று புதுதில்லி, பிரகதி மைதானத்தில் தொடங்கிவைத்தார். தேசிய தொழில்நுட்ப தினத்தின் 25-வது ஆண்டு கொண்டாட்டம் மே 11-ல் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுவதையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில், ரூ.5800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் அறிவியல் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் பிரதமரின் தற்சார்பு இந்தியா நோக்கத்தை அடையும்வகையில் இது அமைந்துள்ளது.
- ஹிங்கோலியில் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு - அலை கண்காணிப்பகம் இந்தியா (எல்ஐஜிஓ- இந்தியா,) ஒடிசா மாநிலம் ஜாட்னியில் ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மும்பை டாடா நினைவு மருத்துவமனையின் பவளவிழா கட்டடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
- மும்பையில் ஃபிஷன் மாலிப்டெனம்-99 உற்பத்தி நிறுவனம், விசாகப்பட்டினத்தில் அரிய புவி நிரந்தர காந்த நிறுவன, நவி மும்பையில் தேசிய ஹாட்ரான் பீம் சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் ஆராய்ச்சி பிரிவு, நவி மும்பையில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை கட்டடம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.
- இந்நிகழ்ச்சியின் போது, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த கண்காட்சியை பிரதமர் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். நினைவு தபால்தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.
- நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும் நோக்கிலும், பாரம்பரிய மருத்துவத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இடையே ஒருங்கிணைந்த மருத்துவத் துறையில் இணைந்து ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால், மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால் ஆகியோர் முன்னிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ஸ்ரீ ராஜேஷ் கோடேச்சா மற்றும் ஐசிஎம்ஆர் செயலாளர் டாக்டர் ராஜீவ் பால் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கவேண்டிய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில், பொது சுகாதார ஆராய்ச்சி முயற்சிகளில் ஆயுஷ் அமைச்சகமும், ஐசிஎம்ஆரும் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் இடையே ஒரு குழு உருவாக்கப்படும். இக்குழு காலாண்டுக்கு ஒருமுறை கூடி ஆராய்ச்சித் திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்த வேண்டும்.
- மேலும் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் மாநாடுகள், பட்டறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது