Type Here to Get Search Results !

TNPSC 9th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு

  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி பிரவாசி பாரதிய திவஸ் தினம் (வெளிநாடுவாழ் இந்தியர் தினம்) கொண்டாடப்படுகிறது. தேசத் தந்தை காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய நாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
  • ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஓர் இந்திய நகரத்தில் பிரவாசி பாரதிய திவஸ் தின மாநாடு நடைபெறுகிறது.
  • அந்த வகையில் இந்த ஆண்டு மாநாடு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சுமார் 70 நாடுகளை சேர்ந்த 3,200-க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். 
சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் 2023
  • சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று காலை பேரவைக் கூட்ட அரங்கில் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.58 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். 
  • அவரை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், காவல் துறை மற்றும் வாத்தியக் குழுவின் மரியாதை அளிக்கப்பட்டது.
  • தொடர்ந்து, பேரவை அரங்கில் நுழைந்த ஆளுநர் 10.01-க்கு உரையை வாசிக்கத் தொடங்கினார். முதலில், தான் தமிழில் தயாரித்து வைத்திருந்த சில பகுதிகளைப் படித்தார். பின்னர், அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையை வாசிக்கத் தொடங்கினார்.
  • ஆளுநர் தனது உரையில் சில வார்த்தைகளைத் தவிர்த்தார். அதேபோல, இறுதியில் சில பகுதிகளை வாசிப்பதையும் தவிர்த்து, உரையை முடித்தார். காலை 10.48 மணிக்கு ஆளுநர் உரையை முடித்ததும், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். 
  • அப்போது விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவைக்குத் திரும்பினர். பேரவைத் தலைவர் காலை 11.31 மணிக்கு தமிழாக்கத்தை வாசித்து முடித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து, தீர்மானம் ஒன்றை வாசித்தார்.
  • அப்போது முதல்வர் பேசியதாவது: தமிழக அரசால் ஆளுநருக்கு வரைவு உரை ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்கப்பட்டு, பின்னர் அச்சடிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்டப் பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.
  • நமது `திராவிட மாடல்' கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள், ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும், சட்டப்பேரவை விதிகளை நாங்கள் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்கும் முன்னதாக எங்களது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடும், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையிலும் நடந்து கொண்டோம்.
  • ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமின்றி, அரசின் கொள்கைகளுக்கேகூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழக அரசு தயாரித்து, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாகவும், முழுமையாகவும் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, பேரவை மரபுகளை மீறியதும் ஆகும்.
  • எனவே, சட்டப்பேரவை விதி 17-ஐ தளர்த்தி, இன்று அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்டப் பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, படித்த பகுதிகள் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
  • இந்த தீர்மானத்தை முதல்வர் வாசித்து முடித்தபோது, முதல்வர் பேசியது குறித்து தனது செயலரிடம் ஆளுநர் விசாரித்து தெரிந்து கொண்டார். இந்நிலையில், அந்த தீர்மானத்தை பேரவைத்   தலைவர்  நிறைவேற்ற எழுந்தபோது, திடீரென பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
  • அவருடன், ஆளுநரின் செயலரும் வெளியேறினார். ஆளுநருக்கு முன்னதாகவே, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளியேறினர்.
  • இதையடுத்து, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், தேசியகீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, அவையின் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
அரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • 2.19 கோடி குடும்பங்கள்: தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 2.19 கோடி குடும்பங்களுக்கு ரூ.2,429.05 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
  • மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ரூ.487.92 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளியவர்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.
  • அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக, சென்னை கடற்கரை சாலை சத்யா நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பையும், இலவச வேட்டி, சேலைகளையும் முதல்வர் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் நிறுவனமான டான்சிம் மூலமாக குளோபல் தமிழ் ஏஞ்செல்ஸ் இணையதளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • சென்னையில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்திய உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள www.tamilangels.fund என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
அமெரிக்காவில் முதல் சீக்கிய பெண் நீதிபதி
  • அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ்கவுண்டி சிவில் நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண், நீதிபதியாக பதவி ஏற்று உள்ளார். அவரது பெயர் மன் பிரீத் மோனிகா சிங்.
  • இவர் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றினார். அவர் ஏராளமான முக்கிய வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றுள்ளார். 
  • அமெரிக்காவில் சீக்கிய பெண் ஒருவர் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். 
ஜி-20 முதல் கூட்டம் கொல்கத்தாவில் தொடங்கியது - 'மகிழ்ச்சியின் நகரம்' என்ற தலைப்பில் வரவேற்பு
  • ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் முதல் கூட்டம் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொல்கத்தாவிற்கு வந்துள்ளனர். 
  • கொல்கத்தாவின் நியூடவுனில் உள்ள விஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த கூட்டத்தில், உலகளாவிய கூட்டாண்மை (ஜி.பி.எஃப்.ஐ) குறித்து ஜி-20 பிரதிநிதிகள் விவாதிக்கின்றன். 
  • மூன்று நாட்கள் நடைபெறும் பல்வேறு அமர்வுகள் மற்றும் கூட்டங்களில் மேற்கண்ட தலைப்புகளில் பிரதிநிதிகள் பேசவுள்ளனர். முன்னதாக ஜி-20-யின் முதல் கூட்டம் கொல்கத்தாவில் நடப்பதால் 'மகிழ்ச்சியின் நகரம்' என்ற தலைப்பில் நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தமிழகத்தில் கிடைக்கக்கூடிய கனிம வளங்களை விஞ்ஞானரீதியாக சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம், சுரங்கப்பணி மேற்கொண்டு, அதன் மூலம் பல்வேறு உபதொழில்கள் தொடங்கி தொழில்வளத்தை பெருக்கவும், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிட வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையாகும்.
  • கடற்கரையோர கனிமங்களின் சுரங்க அனுமதி, அரசு நிறுவனங்களுக்கோ, அரசிற்கு சொந்தமான அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படுகிற நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அணுசக்தி கனிம அனுமதி விதியின்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு கனிம நிறுவனமும் இணைந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட் (Garnet), இலுமினைட் (IImenite), ஜிர்கான் (Zircon), ரூட்டைல் (Rutile) போன்ற கனிமங்களை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
  • அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு கனிம நிறுவனமும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும் இணைந்து ஓர் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடலோர கனிமங்களை பிரித்தெடுக்கவும், அதனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மேம்படுத்தவும், அதன்மூலம் அணுசக்தி துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன் பிற தொழில்களுக்கு இதர கனிமங்கள் கிடைக்கப்பெற வாய்ப்பும் உண்டாகும்.
  • இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கண்டறியப்பட்டுள்ள தேரி மணல் இருப்பு சுமார் 52 மில்லியன் டன்னாகும். இதனைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் குதிரைமொழி மற்றும் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் கனிமங்களை பிரித்தெடுக்கும் இரண்டு தொழிற்சாலைகள் தலா 1500 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவி ஆண்டிற்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் 1075 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel