பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
- நம் அண்டை நாடான பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதின் உறவினர் அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க, இந்தியா கடந்த ஆண்டு ஐ.நா.,விடம் வலியுறுத்தியது.
- ஆனாலும், இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது உள்நாட்டு சட்டப்படி, அப்துல் ரஹ்மான் மக்கியை பயங்கரவாதியாக கடந்த ஆண்டு அறிவித்தன.
- இந்நிலையில், லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் மற்றும் அவற்றுடன் தொடர்புடையவர்கள், குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்து, ஐ.நா., பாதுகாப்புக் குழு தீர்மானம் கொண்டு வந்தது.
- இதன் அடிப்படையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கர வாதியாக அறிவித்தது.
- தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) முன்னாள் இயக்குநர் பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராஜஸ்தானில் 1988ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த சிங், 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31, 2021ம் ஆண்டில் பிஎஸ்எப். இயக்குநராக பதவியேற்ற இவர், கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி பணிஓய்வு பெற்றார்.
- தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை பிரகாஷ் சிங் 1993 ஜூன் முதல் 1994 ஜனவரி வரை பிஎஸ்எப் இயக்குநராக பதவி வகித்துள்ளார்.
- உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளது.
- கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருகிறது. 2023-2024 உலக பொருளாதார வளர்ச்சி முறையே 1.7 மற்றும் 2.7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.
- வர்த்தக ரீதியிலான நிலக்கரியை உற்பத்தி செய்ய மேலும் மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஆணைகளை அத்துறையின் கூடுதல் செயலாளர் திரு நாகராஜூ வழங்கினார்.
- இதன்மூலம் எரிசக்தி பாதுகாப்பில் தனியாரின் பங்களிப்பை உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர், நிலக்கரி சுரங்க மேம்பாட்டுக்கு தங்களது முழு திறனையும் செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
- இந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி ஆண்டுக்கு 3.7 மில்லியன் டன்னாகவும், புவியியல் இருப்பு 156.57 மெட்ரிக் டன்னாகவும் இருக்கும்.
- இந்த நிலக்கரி சுரங்கங்கள் ஆண்டு வருமானமாக 408 கோடி ரூபாயை ஈட்டுவதுடன், 550 கோடி ரூபாய் மதிப்பிலான மூலதன முதலீட்டை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும், இந்த மூன்று சுரங்கங்கள் மூலம் ஐயாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தற்போது 3 சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் இதுவரை அனுமதி வழங்கப்பட்ட சுரங்கங்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.