Type Here to Get Search Results !

BHARATHIYAR KAVITHAIGAL IN TAMIL / பாரதியார் கவிதைகள்

  • BHARATHIYAR KAVITHAIGAL IN TAMIL / பாரதியார் கவிதைகள்: சுப்ரமணிய பாரதியார் (Subramania Bharathiyar) ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். 
  • விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் கவிதைகளை விரிவாகக் காண்போம்.
பாரதியின் வசனநடை – சிட்டுக்குருவி

சிறியதானியம் போன்ற மூக்கு: சின்னக்கண்கள்: சின்னத்தலை: வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு:
கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை:
துளித்துளிக் கால்கள்: இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்.
இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.

பாரத தேசம்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் – அடி
மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தங் கவிதைகொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்

காணி நிலம்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்

நடிப்பு சுதேசிகள் (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள்

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மை திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி - கிளியே
வாய் சொல்லில் வீரரடி!
கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பாரடீ

தமிழ்மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!

புதுக்கவிதை
  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகளிதை எனப்படுகிறது.
  • ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார்.
  • இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

மெய்யோ பொய்யோ

வானகமே, இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே
போனதனால் நானும்ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

காற்றே வா!

காற்றே வா
மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா
இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு
காற்றே வா
எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்
நின்று வீசிக் கொண்டிரு
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ?

முரசுப்பாட்டு

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம்
பேதமை யற்றிடும் காணீர்

செந்தமிழ் நாடு கீதங்கள்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

எத்தனை கோடி இன்பம் - பாரதியார் தெய்வப் பாடல்கள்

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா

தோத்திரப் பாடல்கள் என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல்

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
பெண்மை வெல்க

மழை

வெட்டியடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

'தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதத் தொடங்கிய பாரதி, Member என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லொன்றை உருவாக்க முனைந்தார்
  • மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். அவயவி சரியான வார்த்தையில்லை. அங்கத்தான் கட்டிவராது. சபிகன் சரியான பதந்தான்.
  • ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது, யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு.
  • அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன்; உறுப்பாளி? ஏதெல்லாமோ நினைத்தேன்.
  • ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக மெம்பர் என்று எழுதி விட்டேன்.
  • இன்னும் ஆர, அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்.
செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel