பெரு பெண் அதிபர் டினா பதவியேற்பு
- தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது.
- இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார்.
- இந்நிலையில், அவசர நிலையை பிரகடணப்படுத்திய அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அந்த நாட்டின் தொலைகாட்சி முன் தோன்றி பொதுமக்களிடம் பேசினார்.
- நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அவர் அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அதிபர் பெட்ரோ தெரிவித்தார்.
- அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர். ஆனால் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்றம் அவசரமாகக்கூடி அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கை எடுத்தது. அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தீர்மானத்துக்கு ஆதரவாக 101 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 6 வாக்குகள் கிடைத்தன. 10 பேர் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கைக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் அதிபர் பதவி இழந்தார்.
- அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிபர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்து பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபர் பொறுப்பு ஏற்றார். 60 வயதான டினா, 2026-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகிக்கப்போவதாக தெரிவித்தார்.
இமாச்சலில் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்
- 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன.
- இறுதியில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக வேட்பாளர்கள் 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
- இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 43.9 சதவீதம், பாஜகவுக்கு 43 சதவீதம், இதர கட்சிகளுக்கு 10.4 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. சுமார் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
தேசியக் கட்சியாக மாறிய ஆம் ஆத்மி
- கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகளில் ஒன்றை பெற்றிருக்கும் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் தேசியக்கட்சி அங்கீகாரம் வழங்குகிறது. 1. லோக்சபாவில் மொத்தம் உள்ள 543 இடங்களில், 2 சதவீத இடங்களை, அதாவது 11 எம்.பி.,க்களை மூன்று மாநிலங்களில் இருந்து பெற வேண்டும். 2. குறைந்தது நான்கு மாநில தேர்தல்களில் 6 சதவீத ஓட்டுகளும், லோக்சபாவில் நான்கு எம்.பி.,க் களும் பெற வேண்டும்.
- 3. குறைந்தது நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும். இங்கு, 6 சதவீத ஓட்டுகள் அல்லது குறைந்தது இரண்டு எம்.எல்.ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும்.
- இதன்படி ஏற்கனவே, டில்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்த ஆம் ஆத்மி, நான்காவதாக குஜராத்திலும் ஐந்து எம்.எல்.ஏ.,க்களைப் பெற்றதால் தேசியக்கட்சியாக உருவெடுத்துள்ளது.
- தற்போது, பா.ஜ., காங்., தேசியவாத காங்., திரிணமுல் காங்.,, தேசிய மக்கள் கட்சி - சங்மா, பகுஜன் சமாஜ், இ.கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., என எட்டு தேசிய கட்சிகள் உள்ளன.
குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சி
- குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், 64.3 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும்.
- மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்திருக்கும் பாஜக, தற்போது 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
- ஆனால், தற்போதைய தேர்தலில் காங்கிரஸுக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. குஜராத் தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு இணையாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
- குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 52.5 சதவீதம், காங்கிரஸுக்கு 27.3 சதவீதம், ஆம் ஆத்மிக்கு 12.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 128 ஆம் ஆத்மி வேட்பாளர்கள், 44 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
- வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. வன விலங்கு(பாதுகாப்பு) திருத்த மசோதா 2021, கடந்த ஆண்டு டிச.17ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- கடந்தாண்டு டிச. 25ம் தேதி அலுவல் ஆய்வு குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சிறப்பான முறையில் மேலாண்மை செய்யவும், கால்நடைகள் மேய்ச்சல், உள்ளூர் சமுதாயத்தினருக்கு குடிநீர் எடுப்பது போன்றவற்றுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
- கடந்த ஆகஸ்டில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கோவாவில் 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் மற்றும் ஆரோக்யா எக்ஸ்போ 2022
- 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் கோவாவின் பனாஜியில் மத்திய சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை இணை அமைச்சர் ஸ்ரீ பத் நாயக், முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது.
- 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ், உலக அளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் செயல்திறன் மற்றும் வலிமையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ‘ஆயுஷ்மான்’ காமிக் புத்தகத் தொடரின் மூன்றாவது பதிப்பும் வெளியிடப்பட்டது.
- அகில இந்திய ஆயுர்வேத கல்விக் கழகம், ஜெர்மனியில் உள்ள ரோசன்பெர்க் ஐரோப்பிய ஆயுர்வேத அகாடமி ஆகியவற்றுக்கு இடையே பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அம்ருத் இயக்கத்தின் தற்போதைய நிலவரம்
- அம்ருத் எனப்படும் அடல் புத்தாக்கம் மற்றும் நகர்ப்புற மாற்ற இயக்கம் 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி நாடு முழுவதும் குறிப்பிட்ட 500 பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் தொடங்கப்பட்டது.
- இந்த தேர்வு செய்யப்பட்ட நகரங்களில், குடிநீர் விநியோகம், கழிவு நீர் அகற்றல், கழிவு மேலாண்மை, மழை நீர் வடிகால், பசுமை வெளிகள், பூங்காக்கள், மோட்டார் அல்லாத நகர்ப்புறப் போக்குவரத்து ஆகிய அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் நகர்ப்புற சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
- அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாநில ஆண்டு செயல்திட்டங்களை செயல்படுத்த ரூ.77,640 கோடிக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மத்திய அரசின் நிதியுதவி, ரூ.35,990 கோடியாகும்.
- இதுவரை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ரூ.82,222 கோடி மதிப்பிலான 5,823 திட்டங்களை எடுத்துள்ளன. இதில், ரூ.32,793 கோடி மதிப்பிலான 4,676 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
- ரூ.49,430 கோடி மதிப்பிலான 1,197 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன.
- ரூ.35,990 கோடி மத்திய நிதியுதவியில், ரூ.31,198 கோடி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது. அம்ருத் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக ரூ.37,533 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- இதுவரை 134 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள், 102 லட்சம் கழிவு நீர் இணைப்புகள், அம்ருத் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.