9வது கபடி லீக் தொடர் - 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெய்ப்பூர்
- கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 7-ம் தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதியது.
- இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பல்தன் அணியும் மோதியது.
- இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் அணி ஆட்ட நேர முடிவில் 33 - 29 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- 2014-ம் ஆண்டு நடைபெற்ற ப்ரோ கபடி தொடரின் முதல் சீசனில் ஜெய்ப்பூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதன்பின், 2016-ம் ஆண்டு நடைபெற்ற 4வது சீசனின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. இதையடுத்து, சுமார் 8 ஆண்டுகள் கழித்து 2வது முறையாக ஜெய்ப்பூர் அணி கோப்பை தட்டித்தூக்கியுள்ளது.
- கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மூன்றாம் இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதின.
- இறுதியில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாம் இடத்தை குரோஷியா பிடித்தது.
கிழக்கு மண்டல கவுன்சிலின் 25வது கூட்டம்
- மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 25வது கூட்டம் நேற்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஒடிசா அமைச்சர் பிரதீப் அமாத் மற்றும் 5 மாநில உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- இந்த கூட்டத்தில், எல்லையில் சட்டவிரோத ஊடுருவல், எல்லை தாண்டிய கடத்தல், இந்திய-வங்கதேச எல்லை பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
- மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து வசதிகள், நீர் பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஜார்கண்ட் -ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் மற்றும் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டனர்.
48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
- 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் நடந்தது. இதில், பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வரி விதிப்பில் மற்றும் உச்சவரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
- எஸ்யூவி கார்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு 22 சதவீதம் செஸ் வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் எஸ்யூவி மோட்டார் வாகனத்திற்கு 22% இழப்பீடு செஸ் பொருந்தும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டியின் கீழ் வழக்குத் தொடர வரித் தொகையின் குறைந்தபட்ச வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.5 கோடிக்கும் அதிகமான மோசடி குற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஜிஎஸ்டி சட்டம் தற்போது வரம்பை 1 கோடியாக நிர்ணயித்துள்ளது.
- சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கப்படாமல் அல்லது இரண்டும் இல்லாமல் போலி பில்களை வழங்கிய குற்றத்தைத் தவிர, வரித் தொகையில் தற்போது 50 முதல் 150 சதவீதம் வரை கூட்டுத் தொகை, 25 முதல் 100 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. போலி பில் தொடர்பான அபராதம் ரூ.1 கோடியாக தொடரும்.
- தவிடு, உமி ஆகியவற்றுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மோட்டார் ஸ்பிரிட்டுடன் (பெட்ரோல்) கலப்பதற்காக சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வழங்கப்படும் எத்தில் ஆல்கஹால் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
- வெல்லம் மற்றும் பல்வேறு வகையான அப்பளங்களுக்கு 18% வரி நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் 1, 2023 முதல் இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் மூலம் மாநிலங்களுக்குள் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
- ரூபே கடன் அட்டைகள், குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்குரிய பிம் யுபிஐ ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் வங்கிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கு வரிவிதிப்பு கிடையாது. புதிதாக எந்த பொருள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை.
- ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதவர்களுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுகின்ற நடைமுறை இப்போது இல்லை. எனவே இதில் மாற்றம் கொண்டுவர சிஜிஎஸ்டி விதிகள் 2017ல் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்தது
- பார்வையற்றவர்களுக்கான டி20 உலககோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும், வங்கதேச அணியும் மோதியது.பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடியது.
- முதலில் பேட் செய்த இந்திய பார்வையற்ற வீரர்களுக்கான அணி, 20 ஓவர் முடிவில் 277 ரன்கள் சேர்த்தது.சுனில் ரமேஷ் 63 பந்தில் 136 ரன்களும், அஜய் குமார் 50 பந்தில் 100 ரன்களும் எடுத்தனர்.
- இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.