நேபாள பிரதமராகிறார் பிரசண்டா
- நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக, கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகளுடன் நேபாளி காங்கிரஸ் பேச்சில் ஈடுபட்டது.
- தேர்தலுக்கு முன், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன், நேபாளி காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் செய்தது.
- இதன்படி, ஐந்து ஆண்டு கால ஆட்சியில், இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருக்க முடிவு செய்யப்பட்டது.
- புதிய அரசை அமைக்க, அதிபர் வித்யா தேவி பண்டாரி, ஒரு வாரம் மட்டும் அவகாசம் அளித்துள்ளார். இந்த அவகாசம் முடிவடையும் நிலையில், அங்கு திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
- முன்னாள் பிரதமரான நேபாள கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒலியை, பிரசண்டா சந்தித்து பேசினார். அப்போது பல சிறிய கட்சிகளும் இதில் இணைந்து கொண்டன.
- இந்தப் பேச்சில், புஷ்பகமல் பிரசண்டா முதல் இரண்டரை ஆண்டுகளும், அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகளில் கே.பி.சர்மா ஒலியும் பிரதமராக இருப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணிக்கு, 165 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
உலக கிரிக்கெட் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் அஸ்வின், 400 விக்கெட்டுகளை கைப்பற்றி 3,000 ரன்களையும் குவித்து, இதை சாதித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- 86 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீக்கு பிறகு இரண்டாவது வீரராக இந்த சாதனையை படைத்திருக்கிறார் அஸ்வின்.
- இதே 400 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற சாதனையை கபில்தேவ் 131 போட்டிகளில் செய்திருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி குறைவான போட்டிகளில் இதை நிகழ்த்தி காட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
வங்கிக் கணக்கு காப்பீடு திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் - நிதி ஆயோக் அறிவிப்பு
- நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையின்படி பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றும் விதமாக, 2018 ஜனவரி மாதம் முன்னேற விழையும் மாவட்டத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
- அதனடிப்படையில் கல்வி, வேளாண்மை மற்றும் நீர்வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி, தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு ஆகிய இனங்களில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
- இதன் ஒருபகுதியாக, வங்கிக் கணக்கு தொடங்கி காப்பீட்டு திட்டத்தில் அதிகம் பதிவு செய்துள்ள மாவட்டங்கள் பட்டியலில் விருதுநகர் முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு அறிவித்துள்ளது.
- அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா மற்றும் அடல் பென்சன் ஆகிய திட்டங்களை 111 கிராமங்களில் 68 வங்கிக் கிளைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதில் 21 வங்கிகள் 100% சதவீத இலக்கை எட்டிப்பிடித்துள்ளன.
உலகின் சிறந்த உணவு - இந்தியாவிற்கு 5வது இடம்
- உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவு தான். ஒரு நாட்டின் அமைவிடம், கலாச்சாரம், வாழ்வியல் முறையின் அடிப்படையில் அந்நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் அமைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளிலும் பலவிதமான உணவுகள் உள்ளன.
- உலகில் உள்ள உணவு வகைகளில் சிறந்த உணவிற்கு டேஸ்ட் அட்லஸ் விருதுகள் அறிவித்தது. அதன்படி, 2022ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தையும், கிரீஸ் 2வது இடத்தையும், ஸ்பெயின் 3வது இடத்தையும், ஜப்பான் 4வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது.
- பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா 4.54 புள்ளிகள் பெற்றுள்ளது.
- டேஸ்ட்அட்லஸ் விருதுகள் 2022 முடிவுகளின்படி, 400க்கும் மேற்பட்ட பொருட்களில் கரம் மசாலா, நெய், மலாய், வெண்ணெய் பூண்டு நான் மற்றும் கீமா ஆகியவை இந்தியாவில் சிறந்த உணவுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- ஸ்ரீ தாக்கர் போஜனலே (மும்பை), காரவல்லி (பெங்களூரு), புகாரா (புது டெல்லி), டம் புக்த் (புது டெல்லி), கொமோரின் (குருகிராம்) மற்றும் 450 க்கும் மேற்பட்ட இடங்கள் இந்திய உணவு வகைகளை முயற்சிப்பதற்கான சிறந்த உணவகங்கள் என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.