சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்பு
- உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் சேர்த்து, 34 நீதிபதிகளுக்கான பதவியிடங்கள் உள்ளன; ஏழு இடங்கள் காலியாக இருந்தன.
- இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தாவை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான, 'கொலீஜியம்' சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தது.
- இதையேற்று, தீபங்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீபங்கர் தத்தா, பதவியேற்றார்.
- தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வரும் 2030 பிப்ரவரி வரை, அவர் பதவியில் இருப்பார்.
- இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 28 ஆக அதிகரித்துள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சலில் குமார் தத்தாவின் மகன்.
மாநிலங்களவையில் எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேறியது
- மாநிலங்களவையில் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதாவை கடந்த 8ம் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதா எத்தனால், ஹைட்ரஜன், பயோமாஸ் உள்ளிட்ட புதைபடிவமற்ற எரிபொருட்களின் பயன்பாட்டை கட்டாயமாக்க கொண்டு வரப்பட்டதாகும்.
- இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இந்த மசோதாவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் சுட்டிக் காட்டினர்.
- இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4% சரிவு
- கடந்த அக்டோபரில் தொழில்துறை உற்பத்தி 4 சதவீதம் சரிந்தது. இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் உற்பத்தி புள்ளி குறியீடு 4.2 சதவீதமாக இருந்தது. 2020 ஆகஸ்ட்டில் அதிகபட்சமாக மைனஸ் 7.1 ஆக சரிவடைந்தது.
- பொருட்கள் உற்பத்தி முந்தைய ஆண்டு 3.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. சுரங்க உற்பத்தி 2.5 சதவீதம், மூலதன பொருட்கள் உற்பத்தி 2.3 சதவீதம், நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 15.3 சதவீதம், நுகர்வோர் சாராத பொருட்கள் உற்பத்தி13.4 சதவீதம் சரிந்தது.
- நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான தொழில்துறை உற்பத்தி 5.3 சதவீதமாக சரிந்தது. இது முந்தைய ஆண்டு 20.5 சதவீதமாக இருந்தது.
ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது ஜாஸ் பட்லருக்கு அறிவிப்பு
- ஐசிசி -யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் ஜாஸ் பட்லருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோன்று மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் சித்ரா அமீன் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அயர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்றது. இதற்கு சித்ரா அமீன் முக்கிய காரணமாக அமைந்தார். இதேபோன்று 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு ஜாஸ் பட்லர் ஒரு முக்கிய காரணம்.