2022-23ம் நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம்
- தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், '2022-23ம் நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக உள்ளது.
- கடந்த 2021-22ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 8.4 சதவீதமாக ரூ.35.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.38.17 லட்சம் கோடியாக உள்ளது.
- ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி 13.5 சதவீதமாக அதிகரித்து ரூ.64.95 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே முந்தைய 2021-22ம் நிதியாண்டில் அதே காலகட்டத்தில் ரூ.51.27 லட்சம் கோடியாக இருந்தது' என கூறப்பட்டுள்ளது.
பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
- விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
- நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
- இதேபோல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
- சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது ஜீவன்ஜோத் சிங், முகமது அலி, சுமா சித்தார்த், சுஜித் மான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நாசாவின் தொலைதூர சாதனையை முறியடித்த ஓரியன் விண்கலன்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓரியன் விண்கலன், நிலவை சுற்றும் பணியில் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.
- திங்கள்கிழமை பூமிக்கு அப்பால் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டர் (2 லட்சத்து 70 ஆயிரம் மைல்கள்) தூரத்தை இது அடைந்தது.
- இதுவரை விண்வெளி வீரர்களை ஏற்றிச்செல்ல வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள் பயணித்த தூரத்தை விட இது அதிக தொலைவாகும்.
- ஓரியன் விண்கலனை கொண்டு நாசா மிகவும் சிக்கலான பயணங்களைத் திட்டமிடுகிறது. அவை அனைத்தும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தேசிய பயங்கரவாத கூட்டு பயிற்சியில் தமிழக கமாண்டோ படை 2ம் இடம் பிடித்து சாதனை
- தேசிய அளவிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டி-2022 என்ற பெயரில் தேசிய பாதுகாப்பு படையினரால் ஹரியானா மாநிலத்தில் உள்ள மானேசர் முகாமில் கடந்த 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது.
- இந்த பயிற்சியானது மாநில பயங்கரவாத எதிர்ப்பு படைகளின் நிபுணத்துவத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இந்த போட்டியில் மாநில அளவில் தமிழ்நாடு கமாண்டோ படை மற்றும் ஹரியானா, மேகாலாயா, உத்தரபிரதேசனம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில காவல்துறை சார்பில் படைகள் பங்கு பெற்றன.
- இப்பயிற்சிகளில் திறம்பட பயிற்சி பெற்ற சிறந்து விளங்கிய அணியை தேர்வு செய்தனர். மேலும், ஒவ்வொரு அணியின் கமாண்டோக்களின் உடல் தகுதித்திறன், பகல் மற்றும் இரவு நேரங்களில் துப்பாக்கி சுடும் திறன், கமாண்டோ தடைகளை கடக்கும் திறன், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் திறன் போன்ற தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது.
- தமிழநாடு கமாண்டோ படையை சேர்ந்த 18 கமாண்டோக்கள் கொண்ட அணி துறை தளவாய் வேலு தலைமையில் இப்போட்டியில் திறமையுடனும், வீரத்துடனும் செயல்பட்டு, இவ்வணியின் கூட்டு முயற்சியால் இந்திய அளவில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி-2022 போட்டியில் 2ம் இடம் பற்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.
1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை
- 2022 - 23ஆம் தேதி நிதியாண்டில் தமிழகத்திற்கு 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக சட்டப்பேர்வையில் 110 விதியின் கீழ் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
- அதன்படி, அதற்கான அரசாணையை தமிழக அரசு போக்குவரத்து துறை தற்போது வெளியிட்டிருக்கிறது. பழைய பேருந்துகளை கழிவு செய்துவிட்டு, புதிய பேருந்துகளை வாங்குவதற்காக இந்த 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
- மாநகரப் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு சேர்த்து மொத்தமாக 1000 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
- ஒரு பேருந்துக்கு பல ரூ. 42 லட்சம் என மதிப்பீடு செய்து 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 100 பேருந்துகளும் , கோவை கோட்டத்திற்கு 120 பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.
- இதேபோல் கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 270 பேருந்துகளும், நெல்லை கோட்டத்திற்கு 130 பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.
மணிப்பூர் சங்காய் திருவிழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்
- மணிப்பூர் சங்காய் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
- இந்த மாநிலத்தின் மிகவும் பிரபலமான இந்த திருவிழா, மணிப்பூரை, உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்ற உதவும். மணிப்பூரின் மாநில விலங்கான சங்காய் ரக மானின் பெயரிலேயே இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த வகை மான்கள் மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே காணப்படுகின்றன.
17வது கட்டுமான பொருட்கள் தொடர்பான சர்வதேச மாநாடு
- சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களுக்கான தேசிய கவுன்சில், சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் தொடர்பான 17-வது சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளது.
- மத்திய வர்த்தக அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான இது இந்த ஆண்டு நடத்தும் மாநாட்டின் கருப்பொருள், ‘பூஜ்ய கார்பன் உமிழ்வை நோக்கி முன்னேறுதல்’ என்பதாகும்.
- டிசம்பர் 6-ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் திரு.அனுராக் ஜெயின் தொடங்கி வைக்கிறார். 9-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் வர்த்தகத்துறை இணையமைச்சர் திரு.சோம் பிரகாஷ் பங்கேற்கிறார்.
- எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல், சுழற்சி பொருளாதாரம், சிமெண்ட் தொழில்துறையில் ஒட்டுமொத்த தரம் போன்றவை தொடர்பான அரசின் விருதுகளும் இந்த மாநாட்டில் வழங்கப்படுகின்றன.
- 20 அமர்வுகளை கொண்டதாக நடைபெறும் இந்த மாநாட்டில் 150 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் கொண்ட தொழில்நுட்ப கண்காட்சியும் இடம்பெறுகிறது.
மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான கூட்டுப் பயிற்சியான 'சாமான்வய் 2022' ஆக்ரா விமானப்படை தளத்தில் நிறைவு
- மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (எச்ஏடிஆர்) தொடர்பான வருடாந்திர கூட்டுப் பயிற்சியான 'சாமான்வய் 2022' ஆக்ரா விமானப்படை தளத்தில் இன்று நிறைவடைந்தது.
- நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்த கூட்டுப் பயிற்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆசியான் உறுப்பு நாடுகளிலிருந்தும், பேரிடர் மீட்பு தொடர்பான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- 'சாமான்வய் 2022' பயிற்சியின் மனிதாபிமான உதவி பேரிடர் நிவாரணம் தொடர்பாக திறன் மிக்க வாய்ப்புகளும் பரிசோதிக்கப்பட்டன. இதில் அறிவாற்றல், அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கான இலக்கை எட்டும் முக்கிய முயற்சிகளை நோக்கிய செயல்பாடாக இப்பயிற்சி அமைந்த்து.
சென்னையில் 24-வது தேசிய எண்ணெய்ப் படலம் பேரிடர் தற்செயல் திட்டம் மற்றும் தயார்நிலைக் கூட்டத்தை நடத்தியது இந்திய கடலோரக் காவல்படை
- தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 24-வது தேசிய எண்ணெய்ப் படலம் பேரிடர் தற்செயல் திட்டம் மற்றும் தயார்நிலைக் கூட்டத்தை இந்திய கடலோரக் காவல்படை 30.11.2022 நடத்தியது.
- இந்தக் கூட்டத்தின் தலைவரும், இந்திய கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநருமான திரு வி எஸ் பதானியா, தலைமை வகித்தார்.
- பல்வேறு மத்திய அமைச்சர்கள், மத்திய – மாநில அரசுத்துறைகள் மற்றும் முகமைகள், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், துறைமுகங்கள், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றின் சுமார் 100 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
- இந்திய கடல்பகுதியில், எண்ணெய் அல்லது ரசாயன படலம் ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் கூட்டுத்தயார் நிலையை உறுதி செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
- உலகிலேயே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும். இந்தக் கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலமே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதே போல, ரசாயன இறக்குமதியிலும், உலகிலேயே 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
- எண்ணெய் மற்றும் ரசாயன கசிவுகளால் ஏற்படும் கடல்சார் அபாயங்களுக்கும் தீர்வு காணப்படவேண்டும். கசிவுகளால் கடலோர மக்களுக்கும், கடல்சார் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
புவனேஸ்வரில் சுமங்கலம் பஞ்சமகாபூத மாநாட்டு வரிசையில் வாயு குறித்த மாநாடு
- 75-வது ஆண்டு விடுதலைப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக தூய்மையான காற்றின் அவசியம் குறித்த மாநாடு, ‘வாயு – முக்கிய ஆதாரமான உயிர் சக்தி” என்ற தலைப்பில் புவனேஸ்வரில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- சிக்ஷா ஓ அனுசந்தன் பல்கலைக் கழகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. காற்றின் தரம் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அறிவியல் ரீதியான விவாதங்களை நோக்கமாகக் கொண்டும், பருவநிலை மாற்றம், மாசுக் கட்டுப்பாடு போன்றவை தொடர்பான புரிதல்களை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஒடிசா மாநில ஆளுநர் திரு.கணேஷி லால், மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ், மத்திய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய சுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
- காற்றின் தரம் தொடர்பான சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக டிசம்பர் 2-ம் தேதியன்று நடைபெறும் அமர்வில் மாணவர்கள் பங்கேற்று சூழல் அறிவியல், பருவநிலை மாற்றம், வேளாண் பிரச்சினைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
- காற்றின் தரம் தொடர்பான கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகாரிகள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.