மாநிலங்களவை அலுவல் குழுக்கள் மாற்றி அமைப்பு
- மாநிலங்களவைக்கு 12 அலுவல் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அலுவல் ஆலோசனைக் குழு, விதிமுறைகள் குழு, உரிமைக் குழு ஆகிய மூன்றுக்கும் தலைவராக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அரசு உறுதிமொழிக் குழு மீண்டும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன், அப்பதவியை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் வகித்தார்.
- மனுக்கள் குழு தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியின் சுஜித்குமார் அமர்த்தப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த எம்.பி.க்களில் லஷ்மிகாந்த் வாஜ்பாய் - கீழ்நிலை சட்டம் இயற்றல் குழுவிலும், சி.எம்.ரமேஷ் - குடியிருப்பு குழுவிலும் அமர்த்தப்பட்டுள்ளனர்.
- நெறிமுறைகள் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகரும், அவையில் சமர்ப்பிக்கப்படும் குறிப்புகள் குழுவில் காமாக்யா பிரசாத் தாசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஒவ்வொரு குழுவிலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 10 பேர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பு
- உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த யு.யு.லலித் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவருக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக உள்ள தனஞ்செய் யஷ்வந்த் (டி.ஒய்.) சந்திரசூட் 50-வது தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
- குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
- இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, தலைமை நீதிபதி பதவியிலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற யு.யு.லலித் பங்கேற்றனர்.
- தலைமை நீதிபதி பதவியி லிருந்து ஓய்வுபெற்ற யு.யு.லலித் 74 நாட்கள் மட்டுமே அப்பதவியில் இருந்தார். ஆனால், டி.ஒய்.சந்திரசூட் 2024 நவம்பர் 10-ம் தேதி வரை (2 ஆண்டுகள்) இந்தப் பதவியில் இருப்பார்.
சென்னை பஸ் ஆப் செயலியை சிறப்பாக செயல்படுத்திய மாநகர போக்குவரத்து கழகத்துக்கு விருது
- ஒன்றிய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கேரள மாநிலம், கொச்சியில் கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற 15வது இந்திய நகர்ப்புற இயக்க மாநாடு மற்றும் எக்ஸ்போ 2022- நடந்தது.
- இதில், கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற துறை இணை அமைச்சர் கௌசல் கிஷோர் ஆகியோர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'சென்னை பஸ் ஆப்' என்ற செயலியை திறம்பட செயல்படுத்தியமைக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 'சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்' என்ற விருது வழங்கப்பட்டது.
- முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கொச்சியில் நடைபெற்ற விழாவில், வழங்கப்பட்ட 'சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்' என்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
- டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசுக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது வழங்கப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடியிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்.
- இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முன்னாள் நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாதல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க கேரள அமைச்சரவை நடவடிக்கை - சட்டம் இயற்ற முடிவு
- நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள் உள்ளனர். மாநில அரசின் பரிந்துரையின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது.
- இந்நிலையில், சில மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் நிலவுவதால் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சிகளில் அந்தந்த மாநில அரசுகள் ஈடுபடுகின்றன.
- கேரளாவில் உள்ள 11 பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசால் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்திற்கு ஆளுநர் ஆரிப் முகம்மது கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துணைவேந்தர்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
- கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையேயான மோதல் வெளிப்படையானதாக மாறி உள்ள நிலையில், ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் நோக்கில் அவரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து நீக்குவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை நவ.9 ஒப்புதல் அளித்துள்ளது. மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அது சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளின் மேல்இணைப்பு மற்றும் கீழ் இணைப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2022-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இந்தியாவில் உள்ள செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளின் மேல்இணைப்பு மற்றும் கீழ் இணைப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2022-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தொலைக்காட்சி அலைவரிசைகளில் மேல் இணைப்பு மற்றும் கீழ் இணைப்புக்காக, டெலிபோர்ட்/ டெலிபோர்ட் ஹப்/ செய்தி சேகரிக்க டிஜிட்டல் முறையில் செயற்கைக் கோளைப் பயன்படுத்துதல் (டிஎஸ்என்ஜி) / செயற்கைக்கோள் வழியாக செய்தி சேகரிப்பு (எஸ்என்ஜி) / மின்னணு முறையில் செய்தி சேகரிப்பு (இஎன்ஜி) ஆகிய முறைகளுக்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள்/எல்எல்பி-க்கள், ஆகியவற்றுக்கும் இந்திய செய்தி முகமைகளின் மேல் இணைப்பு மற்றும் நேரலை நிகழ்வை தற்காலிகமாக மேல் இணைப்பு செய்வதற்கும் அனுமதி வழங்குவதை இந்த ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் எளிதாக்கும்.
- புதிய வழிகாட்டு நெறிமுறைகள், தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான விதிமுறைகளை எளிதாக்கும்
- நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்புக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியதில்லை
- இந்திய டெலிபோர்ட்டுகள் வெளிநாட்டு அலைவரிசைகளை மேல்இணைப்பு செய்யலாம்
- தேசிய/ பொதுநலனில் ஒளிபரப்பு உள்ளடக்கத்திற்கு தார்மீக பொறுப்பை உருவாக்கும்
- வழிகாட்டு நெறிமுறைகளை திருத்தி அமைத்திருப்பதால் ஏற்படும் முக்கிய பயன்கள்
- அனுமதி வைத்திருப்போருக்கு எளிதாக இணக்கத்தை ஏற்படுத்தும்
- வணிகம் செய்வதை எளிதாக்கும்
- எளிமைப்படுத்துதலும், முறைப்படுத்துதலும்
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சமூக பொருத்தப்பாடுள்ள உள்ளடக்கத்தில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 30 நிமிடத்திற்கு அரசு ஒளிபரப்பு சேவையில் இருந்து நிறுவனங்கள்/ எல்எல்பி-க்கள் மேல் இணைப்பு மற்றும் கீழ் இணைப்பு பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது