பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு
- இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27%, தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்சி) 15%, பழங்குடியினருக்கு (எஸ்.டி) 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
- இந்நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு 2019-ல் நிறைவேற்றியது.
- இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டன.
- 2020-ம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
- இதன்படி, தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திரபட், தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
- அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த செப். 27-ல் நிறைவடைந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வுபெறும் நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்தி வாலா ஆகியோர், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
- ஆனால், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அவர்கள், அரசியலமைப்பின் 103-வது திருத்தம் செல்லாது என்று தெரிவித்தனர்.
- எனினும், இறுதியில் தலைமை நீதிபதி யு.யு. லலித் கூறும்போது, "பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்" என்று தீர்ப்பளித்தார்.
ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரராக ஒருவரை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாத, சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்ரிக்கா அணியின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
- சிறந்த வீராங்கனைகளுக்கான விருது பரிந்துரை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் தீப்தி சர்மா, பாகிஸ்தான் மகளிர் அணியின் நிதா தர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர்.
- இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேபோல் சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தான் மகளிர் அணியின் நிதா தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ராஜஸ்தானில் கோலாகலமாக தொடங்கியது 'புஷ்கர் திருவிழா'
- உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. கோட்டைகள், அரண்மனைகள், கலாச்சாரம், விதவிதமான உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு கணிசமான வருவாய் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கிடைக்கிறது.
- இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்கர் திருவிழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. இதற்காக அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஏராளமான மணற் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- புஷ்கர் திருவிழாவை ஒட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராட்சத பலூன் சவாரி சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திருத்தச் சட்டம் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- 2014 இல் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் நவம்பர் மாதம் 16ஆம் தேதி 1995இல் 1952 ஆம் ஆண்டின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினரான ஒவ்வொரு பணியாளரும் பணியாளர் பென்ஷன் பெறலாம் அதில் அதிகபட்சமாக 6500 எனும் வரம்பை மீறி சம்பளம் பெறும் உறுப்பினர்கள் தங்களுடைய முதலாளிகளுடன் சேர்ந்து ஓய்வூதிய நிதியில் தங்கள் சம்பளத்தில் 8.33% வரையில் பங்களிக்க தேர்வு செய்யலாம்.
- இபிஎஸ் 2014 திருத்தங்கள் சம்பள வரம்பை 6500 லிருந்து 15,000 ஆக அதிகரித்தது செப்டம்பர் மாதம் 2014 அன்று இபிஎஸ் உறுப்பினர்களாக இருந்த ஊழியர்கள் மட்டுமே அவர்களின் சம்பவத்திற்கு ஏற்ற ஓய்வூதிய நிதிக்கு தொடர்ந்து பங்களிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டது அதோட அவர்கள் புதிய ஓய்வூதிய முறையை தேர்வு செய்ய அவர்களுக்கு 6மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
- 15 000 ரூபாயை கடந்த ஊழியர்கள் அவர்களுடைய மாத ஊதியத்தில் 1.16% கூடுதலாக ஓய்வூதியத் திட்டத்தில் மாதம் தோறும் பங்களிக்க வேண்டும். என்ற நிபந்தனைகளையும் விதித்திருந்தது. அந்த நிபந்தனையை தற்போது நீதிமன்றம் தடை செய்திருக்கிறது.
- திருத்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் கூடுதல் பங்களிப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஒதுக்கீடுகள் சட்டம் 1952 இன் விதிகளுக்கு எதிரானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தெரிவித்தது. அத்துடன் இந்த கூடுதல் பங்களிப்பை ஆறு மாதங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
ஐநா தலைமைச் செயலாளரின் உயர்நிலை வட்டமேசை கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்
- எகிப்து நாட்டின் ஷார்ம் எல்- ஷேக் நகரில் நடைபெற்ற சிஓபி-27 உலகத்தலைவர்கள் உச்சிமாநாட்டில் இன்று அனைத்து நிர்வாக செயல்திட்டத்திற்கான முன்கூட்டிய எச்சரிக்கைகளை தொடங்கிவைப்பதற்கான ஐநா தலைமைச் செயலாளரின் உயர்நிலை வட்டமேசை கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.
- நிர்வாக செயல்திட்டம் அனைத்துக்குமான முன்கூட்டிய எச்சரிக்கைகளை வட்டமேசை கூட்டம் தொடங்கி வைத்தது.
- அனைத்துக்குமான முன்னெச்சரிக்கைகளை எட்டுவதற்கு தலைமைச்செயலாளரின் திட்டத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. இது பாதிப்புகளை குறைத்தல், தயாரிப்பு பணிகளை உறுதி செய்தல், இயற்கை சீற்றங்களின் போது விரைவாகவும், உரிய காலத்திலும் நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும்.
- இந்தியாவின் வெப் –டிசிஆர்ஏ என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த உதவுகிறது.
- பேரழிவை தாங்கவல்ல அடிப்படை கட்டமைப்புக்கான கூட்டணியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அடிப்படை கட்டமைப்பில் சேதங்களையும், அடிப்படை சேவைகளில் இடையூறுகளையும் குறைப்பதற்கு பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கையை மேம்படுத்துவதை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது.
- “அனைத்துக்குமான முன்னெச்சரிக்கைகளை அடைவதற்கான தலைமைச்செயலாளரின் திட்டத்திற்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கிறது. பருவ நிலை மாற்ற விகிதத்தை குறைப்பதற்கு உலகளாவிய பருவ நிலை தணிப்புக்கான வேகம் போதுமானதாக இல்லை. உலகை சுற்றிலும், கணிசமான அளவு சேதங்களுக்கு காரணமாக இருக்கும். இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டம் உலகிற்கு உடனடியாக தேவைப்படுகிறது” என்று அமைச்சர் திரு யாதவ் தெரிவித்தார்.
வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 7,183.42 கோடி 14 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது
- மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள செலவினத் துறை வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 7,183.42 கோடியை 14 மாநிலங்களுக்கு இன்று விடுவித்தது. 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, இந்த மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு ரூ. 86,201 கோடியை வழங்குமாறு 15 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. 12 மாத தவணைகளாக இதனை வழங்க செலவினத்துறை பரிந்துரை அளித்துள்ளது.
- 2022 நவம்பர் மாதத்தில் 8-ஆவது தவணையுடன் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.57,467.33 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- ஆந்திரப்பிரதேசம், அசாம், இமாச்சலப்பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இந்த மானியம் அளிக்கப்பட்டுள்ளது.