'கர்நாடகாவில் முதலீடு செய்யுங்கள் 2022' என்ற தலைப்பிலான முதலீட்டாளர்கள் மாநாடு
- 'கர்நாடகாவில் முதலீடு செய்யுங்கள் 2022' என்ற தலைப்பிலான முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
- சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் தடுமாற்றத்தில் இருந்தாலும், இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது பெருமைக்குரியது.
- பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அடித்தளங்கள் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு ஏதுவான சூழல் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
- இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. செமிகண்டக்டர் (சிப்) தயாரிப்பு மற்றும் தொழிநுட்பக் கட்டமைப்பு வாயிலாக இந்தியாவின் உற்பத்தித் துறை புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
- தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், ஃபின்டெக், உயிரித் தொழில்நுட்பம், ஸ்டார்ட்-அப் மற்றும் நீடித்த எரிசக்தி ஆகியவற்றுக்கான தாயகமாக கர்நாடகா திகழ்கிறது. கர்நாடகாவின் வளர்ச்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுக்குமே சவாலாக விளங்குகிறது.
- பல்வேறு துறைகளில் இம்மாநிலம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சி நடைபெறுவது முக்கியக் காரணமாகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஏ.டி. 1 எனப்படும் பாலிஸ்டிக் தடுப்பு ஏவுகணை சோதனை வெற்றி
- நம் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள 'ஏ.டி-1' தடுப்பு ஏவுகணையின் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
- இந்நிலையில், இதன் இரண்டாம் கட்ட சோதனை, ஒடிசா கடல் பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் நடந்தது. இதில், அனைத்து விதமான பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தடுக்கும் சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
- இதுபோன்ற தடுப்பு ஏவுகணைகள் உடைய நாட்டின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பெட்டாசியம், பாஸ்பேட் உரத்துக்கு ரூ. 51,875 கோடி: மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
- பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்பர் போன்ற பயிர் ஊட்டச்சத்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறை பரிந்துரை செய்தது.
- அதை ஏற்று 2022-23ம் ஆண்டுக்கு (அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023ம் ஆண்டு வரை) பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- அதன்படி, நைட்ரஜனுக்கு கிலோவுக்கு ரூ.98.02, பாஸ்பரசுக்கு ரூ.66.93, பொட்டாசுக்கு ரூ.23.65, சல்பருக்கு ரூ.6.12 மானியமாக வழங்கப்படும். இதன் மூலம், இக்காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.51,875 கோடி அளவிற்கு மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அருணாச்சல புதிய ஏர்போர்ட் பெயர் 'டோன்யி போலா'
- அருணாசலப் பிரதேசத்தின் இடாநகரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.649 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
- இந்நிலையில், இந்த விமான நிலையத்துக்கு டோன்யி போலோ என பெயர் சூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, அருணாசலப் பிரதேச அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
- இது சூரியன் (டோன்யி) மற்றும் நிலவு (போலோ) பற்றிய நீண்ட கால பழங்குடியின கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
- இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இடாநகர் புதிய விமான நிலையத்துக்கு டோன்யி போலோ என பெயர் சூட்டும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- டெல்லியின் கல்காஜி பகுதியில் குடிசை புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 3,024 பிளாட்டுகளை(EWS flats) தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- இதில், பிரதமர் மோடி பிளாட்டுகளுக்கான சாவிகளை உரிய பயனாளிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று டெல்லியின் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு பெரிய நாள் என்றும், பல ஏழைக் குடும்பங்களுக்கு இது ஒரு புதிய தொடக்கமாகும் என்றும் கூறினார்.
இனி ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின்
- தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில், இரண்டு நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம்.
- அதன்படி இந்த ஆண்டு 1,037-வது சதய விழா மங்கல இசையுடன் தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீர்வள மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் துறையில் இந்தியா - டென்மார்க் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மைத் துறையில் இந்தியா மற்றும் டென்மார்க் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
- புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பரந்த அளவிலான ஒத்துழைப்பு அம்சங்கள்
- டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தகவல் அணுகலை எளிதாக்குதல்
- ஒருங்கிணைந்த மற்றும் நவீன நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை;
- நீர்நிலை வரைபடம், நிலத்தடி நீர் மாதிரியாக்கம், கண்காணிப்பு மற்றும் மேம்படுத்துதல்;
- வருவாய் அல்லாத நீர் மற்றும் ஆற்றல் நுகர்வை குறைத்தல் உள்ளிட்ட வீடுகள் மட்டத்திலான திறன் வாய்ந்த மற்றும் நிலையான நீர் வழங்கல் நடைமுறைகள்
- வாழ்வாதாரம், மீட்சித் தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நதிகள் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்தி தூய்மைப்படுத்துதல்
- நீர் தர கண்காணிப்பு மற்றும் மேலாண்மை
- கழிவுநீரை மறுபயன்பாடு / மறுசுழற்சி செய்வதற்கான சுழற்சிப் பொருளாதாரம் உட்பட கழிவுநீர்/கழிவுநீர் சுத்திகரிப்பு, விரிவான கழிவு நீர் மேலாண்மை, நீர் வழங்கல் மற்றும் தூய்மைப் பணிகள் பிரிவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துதல்;
- காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் செயல் திட்டங்களை ஏற்றல், இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் உள்ளிட்டவை
- நகர்ப்புற வெள்ளத் தடுப்பு மற்றும் வெள்ள மேலாண்மை உட்பட நதிகளை மையமாகக் கொண்ட நகர்ப்புற திட்டமிடல்
- புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் இயற்கை முறையில் திரவக் கழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை, கிராமப்புற நீர் வழங்கல், கழிவு நீர் மேலாண்மை/கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை பரந்த அளவில் வலுப்படுத்தும். அதிகாரிகள், கல்வியாளர்கள், நீர் தொடர்பான துறைகள் மற்றும் தொழில்துறையினர் இடையே நேரடி ஒத்துழைப்பு மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.