தமிழகம் முழுவதும் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக். 19-ம் தேதி விதி 110-ன் கீழ், நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர்க் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் 2016-17-ம் ஆண்டுக்குப் பின்னர் மேம்படுத்தப்படாமல், பழுதடைந்த நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும், இதற்காக தமிழக அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டு, 4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- மேலும், சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானியத் திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, ரூ.7,338 கோடி மதிப்பில், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார்.
- அதனடிப்படையில், வரும் நான்கு ஆண்டுகளில் தமிழக அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி ஒதுக்கி, இதர திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து, மொத்தம் ரூ.9,588 கோடியில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 20,990 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
- முதல்கட்டமாக 2023-ல் மொத்தம் ரூ.5,140 கோடி மதிப்பில், 12,061 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.
- சென்னை மாநகராட்சியில் 1,680 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,171 கோடியிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 7,116 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.2,535 கோடியிலும், பேரூராட்சிகளில் 3,265 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,434 கோடியிலும் மேம்படுத்தப்படும்.
- மீதமுள்ள சாலைகள் அடுத்த 2 ஆண்டுகளில் மேம்படுத்தப்படும். சாலைகள் அனைத்தும் தரமானதாகவும், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
- சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் நியமிக்கப்பட்டுள்ளது.
- ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவராக பொறுப்பு வகித்த வந்த அனில் சஹஸ்ரபுதே 2021 செப். 1ல் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக்குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தற்காலிக தலைவராக அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
- இந்நிலையில் அசாமின் கவுஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனர் டி.ஜி.சீதாராமன் ஏ.ஐ.சி.டி.இ.யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
- இந்த பொறுப்பில் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை சீதாராமன் பணியாற்றுவார். இதற்கு முன் கர்நாடகாவின் பெங்ளூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் சிவில் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியராக பணியாற்றினார்.
- இந்தியாவின் சிறந்த செயல்பாடு கொண்ட துறைமுகமான ஜவகர்லால் நேரு துறைமுகம், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டிட பொறியியல் துறையுடன் இணைந்து கடல் நீரின் தரத்தைக் கண்காணிக்கும் நிலையம் மற்றும் சுற்றுச்சூழலைக் கண்காணிக்கும் மின்சார வாகனத்தை நவம்பர் 21-ஆம் தேதி துறைமுகத்தில் அறிமுகப்படுத்தியது.
- துறைமுகத்தின் துணைத் தலைவர் திரு உன்மேஷ் ஷரத் வாக் முன்னிலையில் அதன் தலைவர் திரு சஞ்சய் சேத்தி கண்காணிப்பு நிலையத்தையும், வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.
- கடல் நீரின் தரத்தை கண்காணிக்கும் அமைப்புமுறையும், கண்காணிப்பு வாகனமும் துறைமுகத்தில் சுற்றுச்சூழலின் தரத்தை ஒழுங்குபடுத்தி, கடல்நீர் மற்றும் காற்றின் தர மேலாண்மையில் உதவிகரமாக இருக்கும்.