தமிழக பள்ளிகளில் 'வானவில் மன்றம்' திட்டம் - திருச்சியில் முதல்வர் துவக்கி வைப்பு
- திருச்சி - தஞ்சை சாலையில் உள்ள காட்டூர் - பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் 'வானவில் மன்றம்' என்ற புதிய திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- பள்ளிக்கல்வித் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
குரங்கு அம்மை இனி 'எம் பாக்ஸ்' - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
- கடந்த 1958ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இந்த நோய் குறித்து ஆராய்ச்சி நடத்தி குரங்கு அம்மை என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால் குரங்கு அம்மை என்ற பெயர் ஆப்ரிக்க கண்டத்தை இனரீதியில் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
- இந்த நோய் ஆப்ரிக்க நாடுகளில் இருந்துதான் பரவுவதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்பதே உண்மை.
- எனவே 'குரங்கு அம்மை என்ற பெயருக்கு பதிலாக இந்த தொற்று நோய்க்கு வேறு பெயர் சூட்ட வேண்டும்' என உலகில் பல நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதன் அடிப்படையில் பல்வேறு விஞ்ஞானிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
- இதையடுத்து குரங்கு அம்மை நோய் இனி 'எம் பாக்ஸ்' என அழைக்கப்படும்.2 ஆண்டு:அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குரங்கு அம்மை மற்றும் எம் பாக்ஸ் பெயர்கள் இரண்டும் பயன்படுத்தப்படும். அதன் பின் எம் பாக்ஸ் என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்படும்.
பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்கா திறப்பு
- தமிழக அரசின் 2022-23 பட்ஜெட்டில், கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதியதொழில் பூங்காக்கள் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- இதன்படி, பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அங்கு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.
- அப்போது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், கோத்தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துக்கும் ரூ.1,700 கோடிமதிப்பில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இதன்மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தைவான்நாட்டைச் சேர்ந்த 10 தொகுப்பு நிறுவனங்களுடன், ரூ.740 கோடி முதலீட்டில், 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு
- பி.டி.உஷா தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1979 முதல் 1998 வரையில் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக தடகள விளையாட்டில் பி.டி.உஷா பங்கேற்று வந்தார்.
- ஆசிய விளையாட்டில் 4 தங்கம் மற்றும் 7 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவர் சொல்லி இருந்தார். சக விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் ஆதரவுடன் மனு தாக்கல் செய்வதாக சொல்லி இருந்தார்.
- 58 வயதான பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 16-வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை அலங்கரிக்க உள்ள முதல் பெண்மணியும் அவர்தான்.
உலக சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட் - ஒரே ஓவரில் 7 சிக்ஸ்
- 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- இந்த தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது.
- அதன்படி மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.
- இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். நோ பால் உள்பட 7 பந்துகளில் 43 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
இந்திய - மலேசிய கூட்டு ராணுவப் பயிற்சி மலேசியாவில் தொடங்கியது
- “ஹரிமாவு சக்தி-2022” என்ற இந்திய- மலேசிய கூட்டு ராணுவப் பயிற்சி மலேசியாவின் க்லுவாங்கில் உள்ள புலாயில் இன்று தொடங்கியது. இந்த பயிற்சி டிசம்பர் 12-ஆம் தேதி நிறைவடையும். ஹரிமாவு சக்தி என்பது 2012 முதல் இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டுப் பயிற்சியாகும்.
- இந்திய ராணுவத்தின் கர்வால் ரைஃபிள்ஸ் படையும், மலேசிய ராணுவத்தின் ராயல் மலாய் படையும் இந்தக் கூட்டு பயிற்சியில் கலந்து கொண்டு, வனப்பகுதிகளில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் முறையை மேம்படுத்துவதற்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றன.
- உத்தி சார்ந்த திறன்கள் மற்றும் படைகளுக்கு இடையேயான இயங்கு தன்மையை மேம்படுத்துவது, ராணுவங்களுக்கு இடையேயான உறவை ஊக்குவிப்பது முதலியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில் இரண்டு நாள் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
- இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தக் கூட்டுப் பயிற்சியால், இரு நாடுகளின் உறவும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா
- டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ள ஒருவரின் போராட்டங்களை கூறும் ஈரானிய திரைப்படமான ‘நர்கேசி’ 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை வென்றுள்ளது.
- மகாத்மா காந்தியின் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை ஆகிய கொள்கைகளை சிறப்பாக பிரதிபலிக்கும் படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
- கோஸ்டரிகா திரைப்பட இயக்குநர் வாலன்டினா மாரல் இயக்கிய ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ் கோல்டன் பீக்காக் விருதை வென்றது
சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன
- 017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டன. 30 பேருக்கு சில்ப் குரு விருதுகளும். 78 பேருக்கு தேசிய விருகளும் வழங்கப்பட்டன.
- கைவினைஞர்களின் சிறப்பான செயல்திறன், இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளித்துறையில் மதிப்புமிக்க பங்களிப்புக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
- சில்ப் குரு விருதுகள் மிகச் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. 2002-ஆம் ஆண்டு, இந்திய கைவினைத் தொழில்கள் பொன்விழாவையொட்டி இந்த விருது நிறுவப்பட்டது.
- சில்ப் குரு விருதில் தங்க நாணயம் ஒன்று ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவை அடங்கும். தேசிய விருதுகள் 1965ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
- தேசிய விருதுகள் உலோகப் பதிவு, கைபின்னல் வேலை, மட்பாண்டம் செய்தல், களம்காரி, பந்தானி, அச்சு பதித்தல், தஞ்சாவூர் ஓவியம், தெரக்கோட்டா வேலைப்பாடு, பனை ஓலையில் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவேலைப்பாட்டுத் திறனுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ரொக்கப்பரிசு ரூ.1 லட்சம், தாமிரப்பத்திரம், சால்வை மற்றும் சான்றிதழ் அடங்கும்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் வி பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டுக்கான சில்ப் குரு விருதைப் பெற்றுள்ளார்.
- புதுச்சேரியைச் சேர்ந்த கே வெங்கடேசன், டெரக்கோட்டா வேலைப்பாட்டுக்காகவும், மாசிலாமணி, ஷோலாபித் வேலைப்பாட்டுக்காகவும், தேசிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற்றுள்ளனர்.