அமெரிக்க துணை கவர்னராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு
- கவர்னர் மற்றும் துணை கவர்னர் பதவிக்கான தேர்தலில் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
- கவர்னராக வெஸ் மூர், துணை கவர்னராக இந்திய வம்சாவளியான அருணா மில்லர், 58, ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
- அருணாவுக்கு ஆதரவாக அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
- மேரிலாண்ட் துணை கவர்னராக பதவியேற்கவுள்ள அருணா மில்லர், நம் நாட்டின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் 1972ல் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
- பள்ளிக் கல்வியை அங்கு முடித்த அருணா, அங்குள்ள பல்கலையில் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கரான டேவிட் மில்லர் என்பவரை திருமணம் செய்த அருணாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2-வது கூட்டத்தை இந்தியா நடத்தியது
- மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் பல்வேறு துறைச் சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் வேளாண்துறை அமைச்சர்கள் நிலையிலான இரண்டாவது கூட்டத்தை இந்தியா நடத்தியது.
- இக்கூட்டத்தில் பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய திரு தோமர், வேளாண்துறை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரிவான பிராந்திய செயல் திட்டத்தை ஏற்படுத்த ஒத்துழைக்குமாறு உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.
- சிறுதானிங்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட அவர், இது ஊட்டச்சத்துமிக்கது என்று கூறினார். சிறு தானியங்களை பிரபலப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக்கூறினார்.
- 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் உகந்த வேளாண்முறையை கடைப்பிடித்து, ஆரோக்கியமான உணவை வழங்குமாறு உறுப்பு நாடுகளை அவர் வலியுறுத்தினார்.
- சிறு தானியங்களை ஒரு உணவாக பிரபலப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இணைந்து செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இயற்கை மற்றும் சூழலியல் வேளாண்முறை வேளாண்- உயிரி பன்முகத்தன்மையை பாதுகாத்து ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.
சிறுதானியங்கள் மற்றும் மதிப்புக் கூட்டிய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது
- சத்துள்ள தானியங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் அதன் உயர்நிலை வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பான, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மூலம் வரும் டிசம்பரில் இந்திய சிறுதானியங்கள் ஏற்றுமதியை மேம்படுத்த விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது.
- இந்தியாவின் முன்மொழிவை ஐநா பொதுச்சபையின் 72 நாடுகள் ஆதரவு அளித்து 2021 மார்ச் 5 அன்று 2023-ஐ சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்த பின்னணியில் இந்த சிறுதானியங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் வந்துள்ளது.
- இந்திய சிறுதானியங்களையும், அவற்றின் மதிப்புக் கூட்டு பொருட்களையும் உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு உள்நாடு மற்றும் சர்வதேச நிலையில் தற்போது சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-க்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
- இந்திய சிறுதானியங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க 16 சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் வாங்குவோர், விற்போர் சந்திப்புகள் ஆகியவற்றில் ஏற்றுமதியாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் பங்களிப்புக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- உலகில் சிறுதானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவின் சிறுதானியங்கள் உற்பத்தி 2020-21-ஐ விட, 2021-22-ல் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
- ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறுதானியங்கள் உற்பத்தியில் முதன்மை வகிப்பவையாகும்.
- மொத்த சிறுதானியங்கள் உற்பத்தியில் 1 சதவீதம் ஏற்றுமதியாகிறது. தற்போதுள்ள 9 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சிறுதானியங்களின் சந்தை அளவு 2025 வாக்கில் 12 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- நூடுல்ஸ், பாஸ்தா, காலை சிற்றுண்டிக்கான தானியங்கள் கலவை, பிஸ்கெட்டுகள், இனிப்பு வகைகள், காரவகைகள் போன்ற உண்பதற்கு தயாரான, பரிமாறத் தயாரான நிலையில் மதிப்புக் கூட்டுப்பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்புக்கான புதிய தொழில்களையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
- இந்தியாவின் சிறுதானியங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஏமன், எகிப்து, துனிஷியா, ஓமன், சவுதி அரேபியா, லிபியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இந்தியாவிலிருந்து சிறுதானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளாகும். கம்பு, சோளம், கேழ்வரகு, கடலை உட்பட 16 வகையான சிறுதானியங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.