Type Here to Get Search Results !

TNPSC 5th OCTOBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கவச வாகனங்களை ராணுவத்திடம் வழங்கியது பாரத் போர்ஜ்

  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து கல்யாணி எம்4 ரக கவச வாகனங்களை தயாரிப்பதற்கான ரூ.177.95 கோடி மதிப்பிலான ஆர்டரை பாரத் போர்ஜ் கடந்த 2021-ல் பெற்றது. 
  • அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வாகனங்களை இந்திய ராணுவத்துக்கு தயாரித்து வழங்குவதற்காக இந்த ஆர்டர் பெறப்பட்டது.
  • இந்நிலையில், பாரத் போர் ஜின் புனே & சத்தாரா ஆலையில் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் பயன்பாட்டுக்காக ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
  • கரடு முரடான நிலப்பரப்பு, சுரங்கங்கள் மற்றும் வெடிகுண்டு சாதனங்கள் (IED) அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் விரைவாக செல்லவும், ஆயுதப்படைகளின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் கல்யாணி எம்4 கவச வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி 2017- ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். 
  • பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு அறுவை சிகிச்சை மையங்கள், 750 படுக்கைகள், 64 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. 
  • மேலும் 24 மணி நேர அவசர சிகிச்சை, டயாலிசிஸ் வசதிகள் அல்ட்ராசோனோகிராபி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற நவீன இயந்திரங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. அம்ரித் மருந்தகம், 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிரிவு உள்ளிட்டவை மருத்துவமனையில் இடம் பெற்றுள்ளன.
சிறந்த கோல்கீப்பர்களாக ஸ்ரீஜேஷ், சவிதா தேர்வு
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த கோல்கீப்பர்களாக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மகளிர் ஹாக்கி அணியின் சவிதா பூனியா ஆகியோர் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீஜேஷ் 39.9 புள்ளிகள் பெற்றார். பெல்ஜியத்தின் லோயிக்வான் டோரன் 26.3 புள்ளிகளையும், நெதர்லாந்தின் பிர்மின் பிளாக் 23.2 புள்ளிகளையும் பெற்றனர். இந்த தேர்வுக்கான வாக்கெடுப்பு ஹாக்கி வல்லுநர்கள் (40 சதவீதம்), அணிகள் (20 சதவீதம்), ரசிகர்கள் (20 சதவீதம்) மற்றும் ஊடகங்கள் (20 சதவீதம்) மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்டன.
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த கோல்கீப்பர் விருதுக்கு ஸ்ரீஜேஷ் தொடர்ச்சியாக 2-வது முறையாக தேர்வாகி உள்ளார். மகளிர் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக இந்திய அணியின் சவிதா பூனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • இதற்கான வாக்கெடுப்பில் சவிதா 37.6 புள்ளிகள் பெற்றார். அர்ஜென்டினாவின் பெலன் சுசி 26.4 புள்ளிகளையும், ஆஸ்திரேலியாவின் ஜோஸ்லின் பார்டம் 16 புள்ளிகளையும் பெற்றனர்.
சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா
  • இந்தியாவில் 2021-22 கரும்பு சீசனில் சாதனை அளவாக 5 ஆயிரம் லட்சம் மெட்ரிக் டன்க்கும் கூடுதலாக கரும்பு உற்பத்தியாகி இருக்கிறது. இதன்மூலம் சர்க்கரை உற்பத்தியில் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல், சர்க்கரை ஏற்றுமதியில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • சர்க்கரை ஆலைகள் மூலம் 359 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 35 லட்சம் மெட்ரிக் டன், எத்தனால் தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. போதிய பருவமழை இருந்ததால் இந்த பருவகாலம், சர்க்கரை உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்தது.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையில் 109 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதியின் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது. 
  • சர்வதேச ஆதரவு விலையும், மத்திய அரசின் கொள்கையும் சர்க்கரை துறைக்கு வளர்ச்சியைத் தந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள், சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம்.
'வள்ளலார் - 200' முப்பெரும் விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை , இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், "வள்ளலார் - 200" இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
  • "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 5.10.1823 அன்று சிதம்பரம் அருகில் மருதூரில் பிறந்தார். 
  • ஆன்மீகவாதியான வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை நிறுவினார். கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்பலியை தடுத்து நிறுத்தினார். 
  • மக்களின் பசியை போக்குவதற்காக வடலூரில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். சமத்துவம், கல்வி, தியானம் போன்றவற்றை மக்களிடம் பரப்பினார். திருவருட்பா, ஜீவகாருண்யம், அருள்நெறி போன்ற பல ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார்.
36வது தேசிய விளையாட்டுப் போட்டி - நான்காம் நாள்
  • தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு ஒரே நாளில் 4 தங்கம், 3 வெள்ளி என 7 பதக்கங்கள் கிடைத்தன.
  • இதில் ஸ்குவாஷ் மகளிா் தனிநபா் இறுதிச்சுற்றில் சுனைனா குருவிலா 9-11, 7-11, 11-3, 11-8, 11-1 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தின் ஊா்வசி ஜோஷியை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கினாா். 
  • ஆடவா் தனிநபா் பிரிவில் 3 பதக்கங்களும் தமிழகத்துக்கு கிடைத்தது. இறுதிச்சுற்றில் மோதிய இருவருமே தமிழக வீரா்களாவா். இதில் அபய் சிங் 11-2, 11-6, 9-11, 11-8 என்ற கணக்கில் வேலவன் செந்தில்குமாரை வீழ்த்தினாா்.
  • வெண்கலப் பதக்க சுற்றில் ஹரிந்தா் பால் சிங் சந்து வென்றாா். ஸ்குவாஷ் ஆடவா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் அபய் சிங், வேலவன் செந்தில் குமாா், ஹரிந்தா் பால் சிங் சந்து, நவனீத் பிரபு ஆகியோா் அடங்கிய தமிழக அணி 2-0 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தி தங்கம் வெல்ல, மகளிா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் சுனைனா குருவிலா, ராதிகா சீலன், ஷமீனா ரியாஸ், பூஜா ஆா்த்தி ரகு ஆகியோரைக் கொண்ட தமிழக அணி 0-2 என தில்லியிடம் வெற்றியை இழந்தது. 
  • டென்னிஸ் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் தமிழகத்தின் மணீஷ் சுரேஷ்குமாா் 2-6, 6-1, 6-3 என்ற செட்களில் மகாராஷ்டிரத்தின் அா்ஜுன் காதேவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். 
  • நீச்சலில் மகளிா் 4*200 மீட்டா் ரிலேவில் மான்யா முக்தா மானேஷ், ஆத்விகா ஜி.நாயா், பிரமிதி ஞானசேகரன், பி.சக்தி ஆகியோா் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.
  • முன்னதாக, செவ்வாய்க்கிழமை விளையாட்டுகளில், மகளிருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் அா்ச்சனா சுசீந்திரன் 23.06 விநாடிகளில் இலக்கை எட்டி தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா். 
  • அஸ்ஸாமின் ஹிமா தாஸ் 23.61 விநாடிகளில் வந்து வெள்ளியும், ஒடிஸாவின் ஸ்ரபானி நந்தா 23.64 விநாடிகளில் கடந்து வெண்கலமும் பெற்றனா். அதேபோல், மகளிருக்கான 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா ராமராஜன் தேசிய சாதனையுடன் 56.57 விநாடிகளில் வந்து தங்கம் வென்றாா். 
  • ஆடவருக்கான 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் சுரேந்தா் ஜெயகுமாா் 14.07 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றாா். 
  • ஆடவருக்கான 400 மீட்டா் தடை தாண்டுதல் ஓட்டத்தில் கே.சதீஷ் 50.70 விநாடிகளில் 3-ஆவதாக வந்தாா். டென்னிஸ் கலப்பு இரட்டையரில் மணீஷ் சுரேஷ் குமாா்/சாய் சமிதா இணை வெண்கலம் பெற, ஆடவருக்கான 50 மீட்டா் ஃப்ரீஸ்டைல் நீச்சலில் பவன் குப்தா வெள்ளி வென்றாா். 
  • தமிழகம் புதன்கிழமை முடிவில் 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-ஆவது இடத்தில் இருக்கிறது. சா்வீசஸ் 89 பதக்கங்களுடன் (40/25/24) முதலிடத்திலும், ஹரியாணா 66 பதக்கங்களுடன் (25/22/19) அடுத்த இடத்திலும், மகாராஷ்டிரம் 88 பதக்கங்களுடன் (24/22/42) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel