ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் 2 நாள் சிறப்பு கூட்டம் 2022
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் 2 நாள் சிறப்பு கூட்டம் முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டது. முதல் நாள் கூட்டம் மும்பையில் நடந்த நிலையில், 2ம் நாள் கூட்டம் டெல்லியில் நடந்தது.
- இதில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளில் உருவான மெய்நிகர் நெட்வொர்க்குகள், என்கிரிப்டட் செய்தி சேவைகள், பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உலகம் செயல்படும் விதத்தை மாற்றி, பொருளாதார, சமூக நலன்களுடன் மிகவும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்கி உள்ளன.
- அதே சமயம், அந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கென மறுபக்கம் ஒன்றும் உள்ளது. அது அரசுகள் மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு புதிய சவால்களை உருவாக்கி உள்ளன.
- சமீப ஆண்டுகளில் தீவிரவாத அமைப்புகள், தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் இத்தகைய தொழில்நுட்பங்கள் மூலம் தங்களின் திறன்களை மேம்படுத்தி உள்ளனர்.
- சமூக ஊடக தளங்கள் தீவிரவாத குழுக்களின் புதிய சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன. சுதந்திரம், சகிப்புத்தன்மை போன்றவைகளுக்கு எதிராக நாச சக்திகள் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன.
- எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவும், போதை பொருட்கள், ஆயுதங்களை கடத்தவும் ஆளில்லா டிரோன்களை பயன்படுத்துகின்றனர். எனவே, புதிய தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் இணைந்து, புதுடில்லி பிரகடனம் என்ற பெயரில் இதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றின.
- இதில் கூறப்பட்டுள்ளதாவது பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பது பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் எதிர்கொள்வோம்.
- பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க மாட்டோம். இணையதளம் மற்றும் சமூக வலைதளம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதிகள் வாயிலாக பயங்கரவாதம் பரப்பப்படுவதை இந்தக் கூட்டம் கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 22.04.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் எண்.110 ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
- ஒவ்வொரு ஆண்டும் இதுவரையில் வருடத்திற்கு 4 முறை கிராமசபைகள் முறையே சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), தொழிலாளர் தினம் (மே 1), குடியரசு தினம் (ஐனவரி 26) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) நடத்தப்பட்டு வந்தன.
- தற்போது முதல்வர் ஆணைப்படி வருடத்திற்கு 6 முறை நடத்தப்படும். அதாவது கூடுதலாக உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) மற்றும் உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) ஆகிய தினங்களில் நடைபெறும்.
- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், சிறந்த ஊழியர்களை அங்கீகரித்தல் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது
- கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்திடும் வகையில் 'நம்ம கிராம சபை' என்கிற கணிணி/தொலைபேசி மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி கிராம சபை நிகழ்வுகளை கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பல்வேறு மதத்தினருக்கு என தனித்தனியாக சட்டங்கள் உள்ளதால், இதற்கு மாற்றாக அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், இதற்கு சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
- அந்த வகையில், இச்சட்டத்தை அமல்படுத்துவதற்காக, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம் ஆகிய மா நில அரசுகள் இதுகுறித்து குழு அமைத்துள்ளது. அங்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வரைக்குழு அமைத்து இதை அமல்படுத்துவதற்கும் அரசுகள் திட்டமிட்டுள்ளன.
- இந்த நிலையில், ''குஜராத் மா நிலத்திலும் 'பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக ,மாநில முதல்வர் பூபேந்திர நாத், ஒரு குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக'' அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்வி கூறியுள்ளார்.
- இந்திய தேர்தல் ஆணையம் புதுதில்லியில் ‘தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது.
- 2021 டிசம்பரில் நடைபெற்ற ‘ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டின்’ தொடர்ச்சியாக நிறுவப்பட்ட நேர்மையான தேர்தலுக்கான கூட்டமைப்பை தேர்தல் ஆணையம் வழிநடத்துகிறது.
- அக்டோபர் 31 & நவம்பர் 1, 2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தொடங்கி வைக்கிறார்.
- நிறைவு அமர்வுக்கு தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்குகிறார். 'தேர்தல் நேர்மை ' குறித்த கூட்டமைப்பிற்கான தலைமைப் பொறுப்பு வகிக்கும் தேர்தல் ஆணையம், ஒரு கூட்டு அணுகுமுறையை மேற்கொள்ள கிரீஸ், மொரீஷியஸ் மற்றும் ஐஎப்இஎஸ் ஆகியவற்றை இணைத் தலைவர்களாக இருக்க அழைத்தது.
- உலகெங்கிலும் தேர்தல்களை நடத்துவது தொடர்பான தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளைத் தவிர, யுஎன்டிபி போன்ற அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஆர்மீனியா, மொரிஷியஸ், நேபாளம், கபோ வெர்டே, ஆஸ்திரேலியா, சிலி, ஃபெடரல் ஸ்டேட்ஸ் ஆஃப் மைக்ரோனேசியா, கிரீஸ், பிலிப்பைன்ஸ், சாவோ டோம் & பிரின்சிப், அமெரிக்கா மற்றும் மூன்று சர்வதேச அமைப்புகளான ஐடி இஏஇஎஸ், ஐஎப்இஎஸ், யுஎன்டிபி உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 50 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பல நாடுகள் புதுதில்லியில் உள்ள அவர்களது தூதரகங்களை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளன.
- முதல் இரண்டு அமர்வுகளில், 'தேர்தல் நேர்மையை' உறுதி செய்வதற்காக, இஎம்பி-களின் பங்கு மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து, தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்கப்படும்.
- நான்காவது கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில் 31 அக்டோபர் முதல் 01 நவம்பர் 2022 வரை நடைபெறுகிறது.
- இந்த கருத்தரங்கத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ், கொமரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நட்பு நாடுகளின் கடற்படை, கடல்சார் பாதுகாப்புப்படைகளைச் சேர்ந்த கேப்டன்கள், கமாண்டர்கள் மற்றும் அதற்கு இணையான நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
- கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட கோவா கடல்சார் கருத்தரங்கம், இந்தியாவிற்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் நாடுகளுக்கும் இடையே கூட்டு நடவடிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த தளமாக திகழ்கின்றது.
- இந்த கருத்தரங்கம் கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. மேலும் இந்த கருத்தரங்கத்தின் முந்தைய மூன்று நிகழ்வுகள் இதுவரை நடைபெற்றுள்ளது.
- கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) 2022-யின் கருப்பொருள் “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு சவால்கள்: கடல்சார் முக்கிய செயல்பாடுகளை ஒன்றாக இணைத்து கூட்டு கட்டமைப்பாக மாற்றுதல்” ஆகும்.
- 'பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி' (சாகர்) மற்றும் பாரதப் பிரதமரால் அறிவிக்கப்பட்ட கடல்சார் பாதுகாப்பின் ஐந்து கொள்கைகள், அதாவது நமது பிராந்தியத்தின் செழிப்பு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் கருப்பொருள் விளக்கம் அளிக்கின்றது.
- இந்த ஆண்டின் இரண்டாம் கடற்படைத் தளபதிகள் மாநாடு அக்டோபர் 31-ந் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெறுகின்றது.
- இந்த மாநாட்டில் கடற்படைத் தளபதிகள் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார்ந்த செயல்பாடுகள் மற்றும் இராணுவ ராஜாங்க நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வர்.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள ஆற்றல் மிகுந்த மற்றும் வேகமான வளர்ச்சிகள் காரணமாக, இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகின்றது.
- இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில், கடற்படைத் தளபதி மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து இந்திய கடற்படையால் கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய செயல்பாடுகள், தளவாடங்கள், மனிதவள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வார்கள்.
- மேலும் அவர்கள் எதிர்கால திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிப்பார்கள்.
- குறிப்பாக பிராந்தியத்தின் புவிசார் ராஜாங்க சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க கடற்படையின் தயார்நிலை குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள்.
- இந்தியாவின் கடல்சார் நலன்களுக்கு ஏற்ப பல ஆண்டுகளாக இந்திய கடற்படை அதன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது.
- இந்தியக் கடற்படை ‘பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சாதகமான, முன்னுரிமை பெற்ற கூட்டாளி’ என்ற நிலைப்பாடும் சமீப காலங்களில் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் அவர் கடற்படைத் தளபதிகளுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் உரையாடுவார்.
- பாதுகாப்புத்துறையின் தலைமை அதிகாரிகளும், இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படைத் தலைவர்களும், கடற்படைத் தளபதிகளுடன் கலந்து ஆலோசித்து முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பார்கள்.
- இந்தியாவின் தேசிய நலன்களை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பிற்கான தயார்நிலையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பர்.