சிறந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் விருது 2022
- இந்தியாவில் புவிசார் குறியீடுக்கான பதிவகம், சென்னையில்தான் உள்ளது. நாட்டில் இதுவரை புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருது வழங்க, இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் சார்பில் 'ஆன்லைன்' மூலமாக வாக்கெடுப்பு நடந்தது.
- இதில், தமிழகத்தின் தஞ்சாவூர் தட்டு அதிக ஓட்டுகள் பெற்று, கைவினைப் பொருட்கள் பிரிவில் விருதுக்கு தேர்வு பெற்றது.
- தெலங்கானாவின் பிரபலமான அசைவ உணவுப் பொருளான ஹைதராபாத் ஹலீம் உணவுப் பொருள் பிரிவிலும், வேளாண் பொருட்களில், ஒடிஷாவின் கந்தமால் மாவட்டத்தில் பழங்குடியினரால் பயிரிடப்படும் கந்தமால் மஞ்சள், உற்பத்திப் பொருட்கள் பிரிவில், கர்நாடகா மாநிலத்தின் மைசூரு சந்தன சோப்பு, இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்கள் பிரிவில், வாரணாசி பகுதியில் கிடைக்கும் ஒரு வித சிவப்புக்கல்லும் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளன.
கோதுமை, கடுகு உட்பட 6 விளைபொருளுக்கு ஆதரவு விலை அதிகரிப்பு - அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு
- மத்திய அரசு தற்போது ராபி மற்றும் காரிப் பருவத்தில் விளைவிக்கப்படும் 23 விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) நிர்ணயிக்கிறது.
- இந்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடியது. இதில் கோதுமை உட்பட 6 விளைபொருள்களுக்கான எம்எஸ்பி உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- கடந்த 2021-2022-ம் ஆண்டில் கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015-ஆக இருந்தது. இது ரூ.2,125 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமையின் உற்பத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஏற்படும் செலவு ரூ.1,065 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
- கடுகின் எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டு ரூ.5,450 ஆக உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பார்லியின் எம்எஸ்பி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,635-லிருந்து, ரூ.1735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- பருப்பு வகைகளின் எம்எஸ்பி ரூ.5,230-லிருந்து ரூ.5,335 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மைசூர் பருப்பின் எம்எஸ்பி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500-லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்டர்போல் 90-வது கூட்டம் டெல்லியில் தொடக்கம்
- சர்வதேச காவல் துறையான 'இன்டர்போல்' அமைப்பின் 90-வது பொதுச் சபைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டம் 25 ஆண்டு கால இடைவெளிக்குப்பின் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது.
- இக்கூட்டத்தில் 195 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், காவல் துறை மற்றும் புலனாய்வுத் துறை தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
- இந்நிகழ்ச்சியில் நினைவு தபால் தலை, சிறப்பு ரூ.100 நாணயம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இக்கூட்டத்தில் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை (எப்ஐஏ) தலைமை இயக்குநர் மொஷின் பட் பங்கேற்றார்.
2022-23-ம் நிதி ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்காக ரூ.3,796 கோடிக்கு துணை மதிப்பீடுகள்
- தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 18-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
- இந்நிலையில், கூடுதல் செலவினங்களுக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்தார்
- போக்குவரத்து துறையில் சொத்துகளை உருவாக்க, மாநில போக்குவரத்து கழகங்களுக்கு பங்கு மூலதன உதவியாக ரூ.500 கோடி அனுமதிக்கப்பட உள்ளது.
- நகர்ப்புற பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த, தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துக்கு முதல்தவணையாக ரூ.550 கோடி மானியம் அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- சென்னை பெருநகர், புறநகரில்வெள்ளத் தடுப்பு பணிக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்துக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் ரூ.373.50 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத் தணிப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக ரூ.134.22 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
- கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 7 பாசனக் கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.104.13 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
- இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ.29.76 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. துணை மதிப்பீடுகளில் நீர்வளத் துறையின் கீழ் மொத்தமாகரூ.336.38 கோடி சேர்க்கப்பட்டுள் ளது.
- சென்னை வெளிவட்டச் சாலை (பகுதி-1) திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இறுதி இழப்பீடுவழங்க கூடுதலாக ரூ.227.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. துணை மதிப்பீடுகளில் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை கீழ் மொத்தமாக ரூ.369.74 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.
- இந்த 2022-23-ம் கல்வி ஆண்டில் 28 சிறப்பு பள்ளிகளை நிறுவ ரூ.169.42 கோடிக்கு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வி துறையின் கீழ் ரூ.100.82 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.
- கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான, ஆதாய விலை நிலுவை தொகையை வழங்குவதற்காக கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகைமுன்பணமாக ரூ.252.29 கோடியைஅரசு அனுமதித்துள்ளது. இத்தொகை வேளாண்துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட உட்கட்டமைப்பு, வசதிகள் நிதியில் இருந்து ரூ.168 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை வீட்டுவசதி துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
- அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முன்னோடி திட்டமான முதல்வரின் காலை உணவுதிட்டத்துக்கு ரூ.33.56 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தொகை சமூக நலத் துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
- உபகரணங்கள் கொள்முதல் செய்ய 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு ரூ.97.05 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை
- ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- அதில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது தோழி சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போது சுகாதாரத் துறை செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கு விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
- சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை 561 பக்கங்களுடன் இரு திருக்குறளை மேற்கோள் காட்டி நிறைவு பெறுகிறது.
- முதலில், 95-வது அதிகாரமான மருந்திலிருந்து 948-வது குறளை எடுத்துரைத்துள்ளார். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் கலைஞர் உரை - நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன?
- இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
- இரண்டாவதாக, முடிவாக சுட்டியுள்ள 50-வது அதிகாரமான இடனறிதலில் இடம் பெற்றுள்ள 500-வது குறள்! காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு மு. வரதராசனார் உரை - வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய யானையையும் கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்
பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி
- பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, பொருளாளர் அருண் துமல் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.
- முன்னாள் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி மட்டும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். செயலாளர் பதவிக்கு ஜெய் ஷா மீண்டும் களம் கண்டார்.
- இப்படி மற்ற பதவிகளுக்கும் ஒருவருக்கு மேல் யாரும் போட்டியிடவில்லை. இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த 91வது வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் ரோஜர் பின்னி தலைவராகவும், ஜெய் ஷா மீண்டும் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
- ஏற்கனவே பொருளாளராக இருந்த அருண் துமல் இப்போது பிரிஜேஷ் படேலுக்கு பதில் ஐபிஎல் போட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துமலுக்கு பதிலாக அவிஷேக் டால்மியா பொருளாளராகி உள்ளார்.
2022ன் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு கரீம் பென்சிமாவுக்கு தங்கப்பந்து விருது
- ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனையாக தேர்வு செய்யப்படுபவர்கள் பாலோன் தி'ஓர் (தங்கப்பந்து) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விருதுக்காக தலா 30 வீரர், வீராங்கனைகள் பரிந்துரை செய்யப்படுவார்கள்.
- அவர்களை வீரர்கள், பயிற்சியாளர்கள், சங்க நிர்வாகிகள், விளையாட்டு செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினர் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
- கரீம் பென்சிமா (34 வயது, பிரான்ஸ்) தேர்வு செய்யப்பட்டு, பாரிசில் நடைபெற்ற விழாவில் தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது.
- 2021-22 சீசனில் 46 போட்டியில் 44 கோல் அடித்த பென்சிமா, ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
- கடந்த ஆண்டு தங்கப்பந்து விருது வென்றவரும், இதுவரை 7 முறை விருது பெற்றவருமான பிஎஸ்ஜி அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டீனா) கடந்த 16 ஆண்டுகளில் முதல்முறையாக பரிந்துரை பட்டியலில் கூட இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏற்கனவே 5 முறை தங்கப்பந்து விருது பெற்றுள்ள ரொனால்டோவுக்கு இம்முறை 20வது இடமே கிடைத்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை
- துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது.
- இந்த ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கையை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்தது.
- காவல்துறை நிச்சயமாக வரம்பை மீறியுள்ளது. அதன் நடைமுறையில் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமல் செய்யத் தகாதவற்றைச் செய்திருக்கிறது என்று மட்டுமே ஆணையம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
- குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்குக் குந்தகமின்றி, 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது.
- விசாரணை ஆணையம் இறந்தவர்களின் உறவினர்கள்/சட்டபூர்வ வாரிசுகளுக்கு 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க, காயமடைந்தவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரைத்தது.
- உயிரிழந்த ஜஸ்டின் செல்வமிதீஷின் உயிரிழப்பை, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாகப் பாவித்து அவர் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தகுந்த நிவாரணத்தை வழங்க வேண்டும். அவரது தாயாருக்கு பணி வழங்கவும் பலத்த காயம் அடைந்த காவலர் மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்கவும் ஆணையம் பரிந்துரைத்தது.