பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிராஸ் தேர்வு
- ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கான தலைவரையும் புதிய பிரதமரையும் தேர்வு செய்ய உள்கட்சி தேர்தல்கள் நடைபெற்று வந்தன.
- இந்த தேர்தல்களில் 8 பேர் போட்டியிட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் டிரஸ்-சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
- புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர்.
- இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி லிஸ் டிரஸ் 81 ஆயிரத்து 326 வாக்குகளும் அவரை எதிர்த்து களம் கண்ட ரிஷி சுனக் 60 ஆயிரத்து 399 வாக்குகளும் பெற்றனர்.
- இதையடுத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லிஸ் டிரஸ் பிரிட்டன் நாட்டின் 56ஆவது பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். மார்க்ரெட் தச்சர் மற்றும் தெரேசா மேவுக்கு அடுத்து அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கும் 3ஆவது பெண் இவரே.
சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்
- கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக முனீஸ்வா்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டாா். அவா் செப்டம்பா் 12-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா்.
- இதையடுத்து உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவா் செப்டம்பா் 13-ஆம் தேதி பொறுப்பேற்பாா்.
புதுமைப் பெண் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
- தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த, 'தாலிக்கு தங்கம்' திட்டம் ரத்து செய்யப்பட்டு, 'புதுமைப் பெண்' திட்டம் அறிவிக்கப்பட்டது.
- இதில், அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவியர், உயர் கல்வியில் சேரும் போது, அவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. திட்டத்தின் துவக்க விழா, சென்னை பாரதி மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
- விழாவில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள் திட்டத்தை, அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைத்தார்.
- புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, மாணவியருக்கு வங்கிகளின் சார்பில், 'டெபிட் கார்டு'களை வழங்கினார். விழாவில், 90 ஆயிரம் பேருக்கு இந்த மாதத்துக்கான, 1,000 ரூபாய் 'ஆன்லைன்' வழியில் வழங்கப்பட்டது. அப்போது, மாணவியரது மொபைல் போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வந்தது.
ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
- ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ல் முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் குவாரி ஒதுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இதுதொடர்பாக பாஜக அளித்த புகாரை விசாரித்த தலைமை தேர்தல் ஆணையம், கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பெஸ்ஸுக்கு தனது பரிந்துரையை அனுப்பி வைத்தது.
- ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 81 எம்எல்ஏக்களில் அரசுக்கு ஆதரவாக 48 பேர் வாக்களித்தனர்.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 29, காங்கிரஸ் 15 மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளித்தனர். பாஜக 25 மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக ஆசிரியர் உட்பட 46 பேருக்கு நல்லாசிரியர் விருது: ஜனாதிபதி முர்மு வழங்கினார்
- ஆசிரியராக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
- இந்த நாளில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
- ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் அரசு பள்ளியின் ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் முதலியார் பேட்டையில் உள்ள அர்ச்சுனா சௌப்ராய நாயக்கர் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் அரவிந்தராஜா உட்பட 46 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டினார்.
ராஜபாதை இனி 'கடமை பாதை' - ஒன்றிய அரசு அறிவிப்பு
- டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ராஜபாதை விளங்குகிறது. இந்த பாதை ஜனாதிபதி மாளிகை முதல் நேதாஜி சிலை வரை அமைந்துள்ளது.
- சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், ஒன்றிய அரசு செயலகம், பிரதமர், துணை ஜனாதிபதி உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- அதன்படி, ராஜபாதையின் பெயர் கடமை பாதை (கர்த்தவ்யா பாத்) என மாற்றப்படுவதாக ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. குடியரசு தினத்தின் போது, ராஜபாதையில் தான் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 14,500 பள்ளிகளுக்கு பிரதமர் மோடி புதிய அறிவிப்பு
- பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், 'இந்தியா வளர்ச்சிக்கான பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும். இவை தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் மாதிரிப் பள்ளிகளாக செயல்படும்.
- மேலும், ''PM-SHRI பள்ளிகள் கல்வியை வழங்குவதற்கான நவீன, மாற்றம் மற்றும் முழுமையான முறையைக் கொண்டிருக்கும். கண்டுபிடிப்பு சார்ந்த, கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- சமீபத்திய தொழில்நுட்பம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பல உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்.
- தேசிய கல்விக் கொள்கை சமீப ஆண்டுகளில் கல்வித் துறையை மாற்றியுள்ளது. PM-SHRI பள்ளிகள் தேசிய கல்வி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மேலும் பயனளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
- நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் வெளிநாட்டு கடன் நிர்வாகப் பிரிவு இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2021-22 குறித்த 28-வது நிலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- 2021 மார்ச் இறுதியில், 573.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 மார்ச் இறுதியில் 8.2 சதவீதம் அதிகரித்து 620.7 பில்லியன் அமெரிக்கன் டாலர் ஆகியுள்ளது.
- உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தில் வெளிநாட்டுக்கடன் அளவு ஓராண்டுக்கு முன் 21.2 சதவீதம் என்பதிலிருந்து கணிசமாக குறைந்து 2022 மார்ச் இறுதியில், 19.9 சதவீதம் ஆகியுள்ளது.
- அன்னிய செலாவணி கையிருப்பு, விகிதத்தில் ஓராண்டுக்கு முன் 100.6 சதவீதம் என்பதை விட, 2022 மார்ச் இறுதியில் 97.8 சதவீதம் என வெளிநாட்டுக்கடன் லேசாக குறைந்துள்ளது.
- நீண்டகால கடன் அளவு 499. 1 பில்லியன் அமெரிக்கன் டாலர் என்றும், குறுகிய காலக்கடன் அளவு 121.7 பில்லியன் அமெரிக்கன் டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
- வெளிநாட்டு மொத்தக்கடனில் 90 சதவீதம் வணிகக்கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகள் குறைந்தகால வர்த்தகக்கடன், பலவகை கடன்கள் ஆகியவையாகும்.
- இந்தியாவிற்குள் வரும் போக்குவரத்து அல்லாத மோட்டார் வாகனங்களுக்கான இந்திய விதிமுறைகள் 2022-ஐ மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் 02.09.2022 அன்று அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.
- வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட தனிநபர் வாகனங்கள் இந்தியாவிற்குள் நுழையும் போது இந்த விதிமுறைகள் பொருந்தும்.
- இந்திய விதிமுறைகளின்படி, நாட்டில் தங்கியிருக்கும் போது கீழ்கண்ட ஆவணங்களை வானங்களை இயக்கும் போது வைத்திருக்க வேண்டும்.
- செல்லுபடியாகக் கூடிய பதிவுச் சான்றிதழ்
- செல்லுபடியாகக் கூடிய ஓட்டுநர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுநர் உரிமம்
- செல்லுபடியாகக் கூடிய காப்பீட்டு வாகனம்
- செல்லுபடியாகக் கூடிய மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்
- மேற்கண்ட ஆவணங்கள் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் இருந்தால் அதன் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக்கத்துடன் கூடிய ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
- இந்தியா தவிர மற்ற நாடுகளில் மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவை இந்தியாவிற்குள் உள்ளூர் பயணிகளையோ சரக்குகளையோ ஏற்றிச் செல்ல அனுமதியில்லை.