மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாடு
- குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டை தொடங்கி வைத்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மாநிலங்களுக்குள்ளான வட்டாரப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அனைத்து சுற்றுச்சூழல் அமைச்சர்களும் முடிந்தவரையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
- பசுமை வளர்ச்சி, பசுமை வேலை வாய்ப்புகளை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பிரச்சாரத்தை நாம் வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
- அது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும். சுற்றுச் சூழல் அமைச்சகங்களின் செயல்பாடு கட்டுப்படுத்தப்பட்ட வரையறைக்குள் இருக்கக் கூடாது.
- இந்த அமைச்சகத்தின் பங்கு என்பது கட்டுப்பாட்டாளர் என்பதை விட சுற்றுச்சூழலை ஊக்கு விக்குவிப்பவராகவே இருக்க வேண்டும். பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை, எத்தனால் கலந்த பயோஎரிபொருள் கொள்கைகளை மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்வது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அடிப்படையானதாக அமையும்.
- தண்ணீர் அதிகம் உள்ள மாநிலங் களும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. எனவே, நீர் மேலாண்மையில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகளில் காட்டுத் தீ மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
- நம்நாட்டில் அதன் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் பாதுகாப்பு நடை முறைகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வனக் காவலர்களுக்கு இதுகுறித்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
எங்கு இருந்தும் எந்த நேரத்திலும் இணையவழியில் பட்டா மாற்றம்
- வருவாய் துறை சார்பில் 'எங்கிருந்தும் எந்த நேரத்திலும்' என்ற இணையவழி சேவை வழியாக பொது மக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி; நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- தமிழகத்தில் நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் வழியாக விண்ணப்பிக்கின்றனர்.
- நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், துறை செயலர் குமார் ஜெயந்த், நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குனர் வினய் கலந்து கொண்டனர்.
ஹாக்கி இந்தியாவின் தலைவராக போட்டியின்றி திலீப் திர்கி தேர்வு
- ஹாக்கி இந்தியா அமைப்புக்கான தேர்தல் வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எந்தவொரு பதவிக்கும் போட்டியாளர்கள் இல்லாததால் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
- இதன்படி பதவிகளுக்கு விண்ணப்பித்த தற்போதைய வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்த மத்திய பிரதேச ஹாக்கி அமைப்பின் தலைவர் ராகேஷ் கத்யால், ஜார்க்கண்ட் மாநில ஹாக்கி சங்க தலைவர் போலா நாத் சிங் ஆகியோர் நேற்று தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனர்.
- இதைத் தொடர்ந்து திலீப் திர்கி, போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போலா நாத் சிங், பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
- துணைத் தலைவர்களாக அசிமா அலி, எஸ்விஎஸ் சுப்ரமண்ய குப்தா, பொருளாளராக தமிழ்நாடு ஹாக்கி பிரிவின் சேகர் ஜே.மனோகரன், இணை செயலாளர்களாக ஆர்த்தி சிங்,சுனில் மாலிக் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, திலிப் திர்கி தலைமையிலான நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
'பவர்கிரிட்' நிறுவனத்திற்கு புதிய இயக்குனர்
- 'பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' என்ற பொது துறை நிறுவனத்தின் புதிய நிதி இயக்குனராக ஜி.ரவிசங்கர் பதவி ஏற்றுஉள்ளார்.
- பவர்கிரிட் கார்ப்பரேஷனின் நிதி இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ரவிசங்கர், சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையில் கணிதம் பயின்றவர்.
- இதற்கு முன், இந்நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருந்தார். தற்போது, புதிய இயக்குனராக பதவி ஏற்றுள்ள இவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவு, சார்பு நிலையங்கள், மண்டல தலைமையகம் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துஉள்ளார்.
- இந்நிறுவனத்தில் 32 ஆண்டு கால நீண்ட அனுபவம் உள்ள ரவிசங்கர், தேசிய மேலாண்மை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். மேலும், உலகளாவிய மேலாண்மை போட்டிக்காக, இந்தியா சார்பாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.
ஐ.என்.எஸ்., தலைவராக ராஜ பிரசாத் ரெட்டி தேர்வு
- இந்திய பத்திரிகைகள் சங்க தலைவராக 'சாக்ஷி' நாளிதழின் கே.ராஜ பிரசாத் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐ.என்.எஸ்., எனப்படும் இந்திய பத்திரிகைகள் சங்க ஆண்டு கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
- இதில், 2022 - 2023ம் ஆண்டுகான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக சாக்ஷி நாளிதழின் கே.ராஜ பிரசாத் ரெட்டி, துணைத் தலைவராக ஆஜ் சமாஜின் ராகேஷ் சர்மா, உதவி தலைவராக மாத்ருபூமியின் எம்.வி. ஷ்ரேயம்ஸ் குமார், கவுரவ பொருளாளராக அமர் உஜாலாவின் தன்மய் மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- நிர்வாக குழு உறுப்பினர்களாக 'தினமலர்' நாளிதழின் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, 'ஹெல்த் அண்டு ஆன்டிசெப்டிக்' பத்திரிகையின் எல்.ஆதிமூலம், தினத்தந்தியின் எஸ்.பாலசுப்ரமணியம் ஆதித்தன், தினகரனின் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தி இந்தியன் எக்ஸ்பிரசின் விவேக் கோயங்கா, சாகல் நாளிதழின் பிரதாப் ஜி பவார் உட்பட 41 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.