பி.எம்., கேர்ஸ் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்
- பி.எம்., கேர்ஸ் அறங்காவலராக டாடா நிறுவனங்களின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முடிவு செவ்வாய்க்கிழமை பி.எம். கேர்ஸ் பிரதமர் மோடி எடுத்துள்ளார்.
- மேலும், PM CARESக்கான ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கு மூன்று பெயர்களை பரிந்துரைத்தது. அவர்கள் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி மற்றும் டீச் ஃபார் இந்தியாவின் இணை நிறுவனரும் இண்டிகார்ப்ஸ் மற்றும் பிரமல் அறக்கட்டளையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆனந்த் ஷா ஆகியோர் ஆவார்கள்.
- தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் 'கடற்பசு பாதுகாப்பகம்' அமைக்கப்படும் என்று தமிழக அரசால் 2021 செப்டம்பர் 3ம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
- இதை செயல்படுத்தும் வகையில், 448 சதுர கி.மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
- பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரையில் (பாக்விரிகுடா) காணப்படுகின்றன.
- பாக்வளைகுடாவில், தமிழகம் அறிவிக்கை செய்துள்ள இந்த கடற்பசு பாதுகாப்பகம், இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகம் எனும் பெருமைக்குரியதாகும்.
- ஆசிய வளர்ச்சி வங்கி ஏடிஓ எனப்படும் ஆசிய வளர்ச்சி கண்ணோட்டம் என்ற அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. இதில் ஆசியாவில் வளரும் நாடுகளில் உள்ள பொருளாதார மற்றும் வளர்ச்சி வாய்ப்பில் உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்வர்.
- இந்தியா, சீனா உட்பட ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் விலைவாசி மாறுபாடு மற்றும் ஜிடிபி., வளர்ச்சி விகித கணிப்புகள் ஆகியவற்றை இந்த அறிக்கை மூலம் அறியலாம்.
- இன்று வெளியாகியுள்ள அதன் துணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் 2022 - 23 முதல் காலாண்டில் 13.5 சதவீதம் வளர்ந்துள்ளது. சேவைகள் துறையின் வலுவான வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது.
- இருப்பினும் ஜிடிபி வளர்ச்சியை ஏடிஓ கணிப்பில் குறைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி 7 சதவீதமாகவும், 2023 - 24 நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
- விலைவாசி பிரச்னை உள்நாட்டு நுகர்வை மோசமாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மந்தமான உலகளாவிய தேவை, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை நிகர ஏற்றுமதியை குறைக்கக் கூடும்.
- அதே போல் சீனாவின் வளர்ச்சி 5 சதவீதமாக முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. அது தற்போது 3.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- ஜீரோ கோவிட் என்ற திட்டத்தால் ஊரடங்கு போடுவது, ரியல் எஸ்டேட் துறையில் பிரச்னைகள், வெளிநாடுகளில் சீன உற்பத்திக்கான தேவை பலவீனமடைந்திருப்பது ஆகியவை சீன பொருளாதார நடவடிக்கைகளை பாதித்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையானது சரக்குப் போக்குவரத்து துறைக்கான கட்டமைப்பை வகுத்துள்ளது. இந்தக் கொள்கை, பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தை செயல்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது.
- இந்த கொள்கையின் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் மனித வளங்களை ஒழுங்குபடுத்தும் செயல்முறைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் செயல்திறனைக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- விரைவுபடுத்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த, செலவு-திறனுள்ள, நெகிழ்ச்சியான, நிலையான மற்றும் நம்பகமான சரக்குப் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
- 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய அளவுகோல்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் இந்தியாவில் சரக்குப் போக்குவரத்தில் கட்டணத்தை குறைப்பது, செயல்திறன் குறியீட்டு தரவரிசையை மேம்படுத்தி, 2030க்குள் முதல் 25 நாடுகளில் ஒன்றாக கொண்டு வருவது, திறமையான சரக்குப் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்புக்கான தரவு சார்ந்த பொறிமுறையை உருவாக்குவது ஆகியவை இதன் நோக்கமாகும்.
- தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கை, இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள், தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பல சுற்று ஆலோசனைகள் நடத்தப்பட்டு, உலகளாவிய சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்ளும் ஒரு ஆலோசனை செயல்முறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த கொள்கை செயல்பாட்டுக்கு வரும்போது, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோருக்கு பயன் அளிக்கும்.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியாவில் செமி கண்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி சூழலை மேம்படுத்துவதற்கான பின்வரும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான திட்டத்தின்கீழ், அனைத்து தொழில்நுட்ப முனையங்களுக்கும், திட்ட செலவில் சமவீத அளவில் 50% நிதியுதவி
- டிஸ்ப்ளே உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான திட்டத்தின்கீழ், திட்ட செலவில் சமவீத அளவில் 50% நிதியுதவி
- இந்தியாவில் கூட்டு செமி கண்டக்டர்கள்/ சிலிக்கான ஃபோட்டானிக்ஸ்/ சென்சார் உற்பத்தி மையங்கள் மற்றும் செமி கண்டக்டர் ஏடிஎம்பி/ ஓஎஸ்ஏடி வசதிகள் கூடுதலாக அமைக்கும் திட்டத்தின்கீழ், மூலதன செலவில், சமவீத அடிப்படையில் 50% நிதியுதவி
- மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்கீழ், செமி கண்டக்டர்களை அமைப்பதற்கான அனைத்து தொழில்நுட்ப முனைகளுக்கும், திட்ட செலவில், 50% ஒரேமாதிரியான நிதியுதவி அளிக்கப்படும்
- அதிக திறன் வாய்ந்த சூரிய மின் தகடுகளின் ஜிகா வாட் அளவிலான உற்பத்தி திறனை அடைவதற்கான தேசிய அதிக திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் திட்டத்தில் ரூ 19,500 கோடி செலவிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் முன்னெடுப்புகளை வலுப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கும்.
- சூரிய மின் தகடுகள் உற்பத்தியாளர்கள் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்நாட்டு சந்தையிலிருந்து அதிக திறன் வாய்ந்த சூரிய மின் தகடுகள் விற்பனைக்காக சூரிய மின்தகடுகள் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்ட பிறகு, 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் அளிக்கப்படும்.
- இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 94 ஆயிரம் கோடி அளவிற்கு நேரடி முதலீடு கிடைக்கும். 1,95,000 பேருக்கு நேரடியாகவும், 7,80,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.