அத்தியாவசிய மருந்து பட்டியலில் புற்றுநோய் மருந்துகள் சேர்ப்பு
- 2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில், மொத்தம், 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிதாக, 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் 'ஐவர்மெக்டின், முபுரோசின்' போன்ற நோய்த் தொற்றை தடுக்கும் மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- அதே நேரத்தில் 'ரேனிடிடைன், சுக்ரால்பேட், எரித்ரோமைசின்' உட்பட, 26 மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மிகவும் விலை குறைந்த மாற்று மருந்துகள் கிடைப்பதால், இவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 'ரேன்டாக், ஜென்டாக்' போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகள், பக்கவிளைவாக புற்றுநோயை உருவாக்குவதாக பல நாடுகளில் பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து பட்டியலில் இருந்து இவை நீக்கப்பட்டுள்ளன.
- கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில், எதிர்க்கட்சி வேட்பாளர் ராய்லா ஒடிங்காவை விட மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வில்லியம் ரூடோ வெற்றி பெற்றார்.
- இதை எதிர்த்து கென்ய உச்ச நீதிமன்றத்தில் ராய்லா தாக்கல் செய்த வழக்கு, கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கென்யாவின் 5வது அதிபராக ரூடோ பதவியேற்றார்.
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
- அதன்படி, நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நீதிபதி சுந்தர்மோகனுடன் இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை விசாரித்தார்.
- முந்தைய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, இடமாற்றம் செய்யப்பட்டபோதும் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி துரைசாமி, தற்போது 2வது முறையாக பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ளார். அவர், செப்டம்பர் 21ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள நஞ்சராயன் குளம் தமிழகத்தின் 17 ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- ஊத்துக்குளியை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 181 பறவை இனங்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறது.
- மஞ்சள் மூக்கு நாரை, பழுப்பு நாரை, செந்நில நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சிறிய கொக்கு, உன்னி கொக்கு, மடையான் உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும், தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, மண்கொத்தி, சதுப்பு மண்கொத்தி என வெளிநாட்டு பறவைகளும் ஆண்டுதோறும் இங்கு படையெடுக்கின்றன.
- கடந்த 2020 ஆம் ஆண்டு நஞ்சராயன் குளம் பகுதியை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசின் சுற்றுச்சூழல்துறை வெளியிட்டுள்ளது.
- சுதந்திரத்துக்குப் பிறகு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. சீனாவிடம் இருந்து அந்நாடு அதிக கடன்களைப் பெற்றுள்ள நிலையில், தற்போது இலங்கைக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரும் உதவிகளை வழங்கி வருகின்றன.
- சா்வதேச நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான முதல்கட்ட ஒப்பந்தத்தில் இலங்கை அரசு அண்மையில் கையொப்பமிட்டது. இந்நிலையில், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்களை வாங்குவதற்காக இலங்கைக்கு சுமாா் ரூ.300 கோடி கடன் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
- இலங்கையில் அடுத்த சாகுபடி பருவம் தொடங்கவுள்ள நிலையில், இந்த நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க பிரதிநிதியான சமந்தா பவா், இலங்கையின் வேளாண் பிரதிநிதிகளை சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அதையடுத்து இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடும் சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.
- அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயர்களை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது.
- அதன்படி ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐசிசியின் மாதாந்திர சிறந்த வீரர் வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றுள்ளார்.
- அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
- ஆஸ்திரேலிய கடற்படையால் நடத்தப்படும் பன்னாட்டு கடற்படை பயிற்சி காக்கடுவில் பங்கேற்க ஐஎன்எஸ் சத்புராவும் பி-8 I கடல் ரோந்து விமானம் தாங்கி போர்க்கப்பலும் ஆஸ்திரேலியாவின் டார்வினுக்கு 2022 செப்டம்பர் 12 அன்று சென்று சேர்ந்தன.
- இரண்டுவார கால பயிற்சியில் 14 கடற்படைகளின் துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த கப்பல்களும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களும் பங்கேற்க உள்ளன. துறைமுகம் சார்ந்த பயிற்சியின்போது கப்பலின் சிப்பந்திகள் செயல்பாடு குறித்த கலந்துரையாடல்களிலும் விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள்.
- ஜப்பான்-இந்தியா கடல்சார் பயிற்சி- ஜிமெக்ஸ் 2022-வின் 6-வது பயிற்சி செப்டம்பர் 11-ந் தேதி வங்கக்கடலில் மேற்கொள்ளப்பட்டது.
- இந்திய கடற்படை நடத்தும் இந்த பயிற்சியில் ஜப்பானின் எஸ்கார்ட் ப்ளோடில்லா ஃபோர்-ன் கமாண்டர் ரியர் அட்மிரல் ஹிராட்டா டோஷியுக்கி தலைமையில் ஜப்பான் பாதுகாப்பு கப்பல்களும், இந்திய கடற்படையின் கிழக்குப்பிராந்திய கொடி அதிகாரி கமாண்டிங் ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையில் இந்திய கடற்படை கப்பல்களும் இந்த பயிற்சியில் ஈடுபட்டன.
- ஜப்பானின் கப்பல்களை வங்கக்கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் வரவேற்றன. இந்தியாவின் தரப்பில் சகயாத்ரி, ரன்விஜய், ஜோதி ஆகிய உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கப்பல்கள் இடம் பெற்றுள்ளன.
- கடலோர ரோந்துக் கப்பல் சுகன்யா, நீர்மூழ்கி கப்பல்கள், எம்ஐஜி 29கே போர் விமானம், மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டன.
- ஜிமெக்ஸ்22 கடலிலும், விசாகப்பட்டினம் துறைமுகத்திலும் இரண்டு கட்டங்களாக நடைபெறும். 2012-ம் ஆண்டு ஜப்பானில் தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் பயிற்சியின் இந்த அத்தியாயம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.