கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலகப் பால்வள உச்சி மாநாடு 2022-ஜ பிரதமர் தொடங்கிவைத்தார்
- சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பின் உலக பால்வள உச்சி மாநாட்டை உத்தர பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் பிரதமர் மோடி தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
- முதல்வர் ஆதித்ய நாத், பால் பண்ணை தொழில் முனைவோர், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.
- மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.
- உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கு இங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும் கால் நடைகளே முக்கிய காரணம். அதுகுறித்த ஒழுங்கமைவான தகவல் தொகுப்பை உருவாக்குவ தற்காகவே பசு ஆதார் திட்டம் உருவாக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விலங்குகளின் பயோமெட்ரிக் அடையாளங்களை சேகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
- கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பால் உற்பத்தி 44 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 2014-ல் 14.6 கோடி டன்னாக இருந்த பால் உற்பத்தி தற்போது 21 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
- ‘ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்திற்கு பால்வளம்’ என்ற மையப்பொருளில் தொழில் துறை தலைவர்கள், நிபுணர்கள், விவசாயிகள், கொள்கை வகுப்போர் உட்பட உலகளாவிய மற்றும் இந்திய பால்வளத்துறை சம்பந்தப்பட்டவர்கள் ஒருங்கிணைந்ததாக செப்டம்பர் -12 முதல் 15 வரை சர்வதேச பால்வள கூட்டமைப்பின் நான்கு நாள் உலக பால்வள உச்சிமாநாடு 2022 நடைபெறுகிறது.
- இதில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1500 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையை உச்சிமாநாடு, அரை நூற்றாண்டுக்கு முன்னதாக, 1974-ல் இந்தியாவில் நடைபெற்றது.
- இந்திய பால்வளத் தொழில் துறை தனித்துவமானது. ஏனெனில், இது சிறு மற்றும் நடுத்தர பால்பண்ணை விவசாயிகளுக்கு குறிப்பாக, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் கூட்டுறவை அடிப்படையாக கொண்டது.
- பிரதமரின் தொலை நோக்கு பார்வையால் இயக்கப்பட்டு பால்வளத்துறையை மேம்படுத்துவதற்காக, அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த எட்டு ஆண்டுகளில் பால்உற்பத்தி 44 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
- உலகளாவிய பால் உற்பத்தியில் 23 சதவீதம் என்ற கணக்குடன், இந்திய பால்வளத் தொழில் துறையின் வெற்றிக்கதை ஆண்டுக்கு 210 மில்லியன் டன் உற்பத்தி என்பதாக உள்ளது.
- இந்தியாவில் எட்டு கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கிறது என்பது இந்த உச்சிமாநாட்டில் தெரிவிக்கப்படும். உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இந்திய பால் பண்ணை விவசாயிகள் அறிந்துகொள்ளவும், இந்த உச்சிமாநாடு உதவும்.
தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து
- ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிய, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் தெ.ஆப்ரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து விளையாடிய டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
- இந்நிலையில் கடைசி டெஸ்ட் லண்டனின் கென்னிங்டன் அரங்கில் செப்.8ம் தேதி தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
- இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் காரணமாக 2வது நாள் ஆட்டம் ரத்தானது.அதனையடுத்து 3வது நாளான செப்.10ம் தேதி தான் ஆட்டம் தொடங்கியது.
- முதல் இன்னிங்சில் தெ.ஆப்ரிக்கா 118ரன்னுக்கும், இங்கிலாந்து 158 ரன்னுக்கும் சுருண்டன. தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய தெ.ஆப்ரிக்கா 169ரன்னில் ஆல் அவுட்டானது.
- அதன் பிறகு 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 4வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 97ரன் எடுத்திருந்தது.
- அதனையடுத்து 33ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி நாளான நேற்று 2வது இன்னிங்சை இங்கிலாந்து தொடங்கியது. களத்தில் இருந்த அலெக்ஸ் லீஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- களத்தில் இருந்த ஜாக் 69, ஒல்லி போப் 11 ரன் விளாச கடைசி நாள் ஆட்டம் அரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து 22.3ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 130ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கூடவே இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
கேரள பேரவை சபாநாயகராக ஷம்சீர் தேர்வு
- கேரள சட்டசபை சபாநாயகராக இருந்த ராஜேஷ் உள்ளாட்சித் துறை அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனால் சபாநாயகர் பதவி காலியானது.
- தொடர்ந்து புதிய சபாநாயகராக தலச்சேரி தொகுதி எம்எல்ஏவான ஷம்சீரை நியமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கமிட்டி தீர்மானித்தது. இந்த நிலையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான சிறப்பு சட்டசபை கூட்டம் நடந்தது.
- இடது முன்னணி சார்பில் ஷம்சீரும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் அன்வர் சாதத்தும் போட்டியிட்டனர். இதில் ஷம்சீருக்கு 96 ஓட்டுகளும், அன்வர் சாதத்துக்கு 40 ஓட்டுகளும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகராக ஷம்சீர் தேர்வு செய்யப்பட்டார்.
ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் பி17ஏ ரக போர்க்கப்பல் 'தரகிரி' அறிமுகம்
- எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார்.
- இந்த நிகழ்வில் மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
- இந்த தரகிரி போர்க்கப்பல் உடன் எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு கப்பல்களும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படவுள்ளன.
- எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்களால் கட்டமைக்கப்படும் ஏழு பி17ஏ ரக போர்க்கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன.