பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரை சேர்க்க அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதையடுத்து பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர், ஹட்டி, பிரிஜியா சமூகத்தினருக்கும் கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் ஹட்டி சமூகத்தைச் சேர்ந்த 1.60 லட்சம் மக்கள் பயனடைவர். ஹட்டி இனமக்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் உள்ளனர்.
- அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிக அளவில் உள்ள பிரிஜியா இனத்தவரும் பயனடைவர். தமிழகத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தவர்களும் இதன்மூலம் பயன்பெறுவர்.
திண்டுக்கல்லில் ரூ.17.84 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு
- திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி முகாம்களை ஒருங்கிணைத்து 321 புதிய வீடுகளுடன் கூடிய புதிய முகாமினை அமைக்க ஏதுவாக தோட்டனூத்து கிராமத்தில் 3.05 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான நிதியும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து ரூ.17 கோடியே 84 லட்சத்து 48 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 321 புதிய வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நேற்று திறந்து வைத்தார்.
சிற்பி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி, மாணவர்கள் ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நல்வழிப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ள 'சிற்பி' (SIRPI - Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை (2022) நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு அமைச்சரவை ஒப்புதல்
- இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை (2022) நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி (2022) இந்தியாவில் அக்டோபர் 11ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இளைஞர்கள் பங்கேற்கும் இப்போட்டியின் ஏழாவது பகுதி முதன் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது.
- தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கான உதவித் திட்டத்தின் கீழ் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீடு
- மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 12.41%ஆக (தற்காலிகம்) இருந்தது (2021 ஆகஸ்ட் மாதத்தை விட அதிகம்). இது, 2022 ஜுலை மாதத்தில்13.93%ஆக இருந்தது.
- கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.
முப்படைத் தளபதிகளின் 36-வது மாநாடு - தெற்கு போர்ட் ப்ளேரில் நடைபெற்றது
- முப்படைத் தளபதிகளின் 36-வது மாநாடு, 2022 செப்டம்பர் 12,13 ஆகிய தேதிகளில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் நடைபெற்றது. இந்த இரண்டுநாள் மாநாட்டில், அந்தமான், நிகோபார் கமான்ட் லெப்டினண்ட் தலைமை தளபதி ஜெனரல் அஜய் சிங், தெற்கு தீவின் லெப்டினண்ட் ஜெனரல் ஜேஎஸ். நைன், மேற்கு கடற்படை தீவின் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங், தெற்கு கடற்படை தீவின் வைஸ் அட்மிரல் ஹம்பிஹோலி, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஜே.சலபதி, கிழக்கு கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.டி.எம். சஞ்சய் வத்சயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்தியப் பெருங்கடல் பகுதியில் புவியியல் சார்ந்த சாத்தியக் கூறுகள் மற்றும் உள்கட்டமைப்பு, முப்படைகளின் பிராந்திய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், முப்படைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழிகள் மற்றும் முப்படைகளின் தயார் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
- இந்த மாநாடு, இந்தியாவின் கடல்சார் சேவை, ஒருங்கிணைந்த சேவை, திறன்களின் கூட்டு பலத்தை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டது.
- மேலும், தற்கால பாதுகாப்பு முன்னுதாரணங்களை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியது. மேலும், போர்த் திறனை மேம்படுத்துவதற்கும், செல்பாடுகளை மிகவும் பயனுள்ளதாக, திறமையாக மாற்றுவதற்கான வழிகள் குறித்தும் ஆய்வு செய்தது.