டைமண்ட் லீக் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா
- நீரஜ் சோப்ரா, லொசேன் லீக்கை வெல்வதன் மூலம் டைமண்ட் லீக் மீட்டிங் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை சாதனையை உருவாக்கி உள்ளார். இவர் தனது முதல் முயற்சியில், 89.08 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து சாதனை புரிந்தார்.
- இந்த வெற்றி மூலம் நீரஜ் சோப்ரா வருகிற செப்டம்பர் மாதம் 7 மற்றும் 8-ம் தேதிகளில் சூரிச்சில் நடைபெறும் டைமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தகுதியை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை நீரஜ் சோப்ரா படைத்துள்ளது
- நீரஜ்சோப்ரா தர வரிசை பட்டியலில் 15 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்த நிலையில் நேற்று நடந்த போட்டியின் மூலம் அவர் கூடுதலாக 8 புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
- நீரஜ்சோப்ராவுக்கு அடுத்தபடியாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ்ச் 85.88 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் 83.72 மீட்டர் எறிந்து 3வது இடத்தையும் பிடித்தனர்.
உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த லிந்தோய் சனம்பம்
- சரஜீவோவில் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. அரீனா ஹோட்டல் ஹில்ஸில் நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ எடைப் போட்டியில் இந்தியா சார்பில் மணிப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி லிந்தோய் சனம்பம் பிரேசிலின் பியான்கா ரெய்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் ஜூடோ விளையாட்டில் இந்தியாவின் முதல் யு18 உலக சாம்பியனானார்.
வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக நியமிக்கப்பட்ட 6-வது நபர் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பதவியேற்பு
- 2021 ஏப்ரல் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்றார். அவர் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார்.
- இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
- முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரையின்பேரில், யு.யு.லலித்தை, உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தரவிட்டார்.
- வழக்கறிஞராக இருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்ட ஒருவர், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற 2-வது நபர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.
- இதற்கு முன், இதுபோன்ற பெருமையை முதல்முறையாகப் பெற்றவர் நீதிபதி எஸ்.எம்.சிக்ரி. இவர், 1971-ல் உச்ச நீதிமன்றத்தின் 13-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.
உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் சாத்விக் - சிராஜ் ஜோடி வெண்கலம் வென்று சாதனை
- உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதியில் மலேசியாவின் ஆரோன் சியா - சோ வூய் யிக் இணையுடன் மோதிய சாத்விக் - சிராக் ஜோடி முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி வென்று முன்னிலை பெற்றது.
- எனினும், அடுத்த 2 செட்களையும் 21-18, 21-16 என்ற கணக்கில் கைப்பற்றிய மலேசிய இணை பைனலுக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 17 நிமிடங்களுக்கு நீடித்தது.
- இப்போட்டியில் தோற்றாலும், அரையிறுதி வரை முன்னேறியதால் இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலமாக, உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமை சாத்விக் - சிராக் இணைக்கு கிடைத்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 608 பக்க அறிக்கை மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பு
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
- இந்த ஆணையம் மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், முதல் மூன்று மாதத்தில் ஆணையத்தால் அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை.
- இவ்வாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தொடர்ந்து 14 முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது வரை இந்த ஆணையம் 158 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
- இந்நிலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 10:40 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ள சுமார் 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்பித்தார்.
அம்ருத் 2.0 திட்டம் - தமிழகத்தில் 187 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.113.74 கோடி ஒதுக்கீடு
- மத்திய அரசு புனரமைப்புக்கான அடல் இயக்கம் மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு 2.0 (அம்ருத் 2.0) திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன்படி இந்த திட்டம் 2025 - 26 வரை செயல்படுத்தபடவுள்ளது.
- இந்தத் திட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சேவைகள் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.2 லட்சத்து 77,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 4,378 நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்க அம்ருத் 2.0-ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 அம்ருத் நகரங்களில் வீடுகளில் 100 சதவீத கழிவு மேலாண்மையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்நிலையில், அம்ருத் 2.0 திட்டத்தில் 14 மாநிலங்களில் மொத்தம் 690 நீர்நிலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதில் அசாம் மாநிலத்தில் 30, சத்தீஸ்கர் மாநிலத்தில் 60, டெல்லியில் 38, குஜராத்தில் 123, லாடாக்கில் 1, மத்தியப் பிரதேசத்தில் 89, மகாராஷ்டிராவில் 77, மணிப்பூரில் 17, ஒடிசாவில் 16, புதுச்சேரியில் 3, ராஜஸ்தானில் 23, சிக்கிமில் 1, தமிழ்நாட்டில் 187, மேற்கு வங்கத்தில் 23 நீர் நிலைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 187 நீர் நிலைகளை புனரமைப்பு செய்ய ரூ.113.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.