காமன்வெல்த் தொடக்க விழா - பிவி.சிந்து, மன்ப்ரீத் தலைமையில் அணிவகுத்த இந்திய அணி
- இங்கிலாந்தில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க விழா அணிவகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கணைகள் தங்கள் நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
- அதன்படி, தொடக்க விழா அணிவகுப்பிற்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றனர். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
- ஆகஸ்ட் 8 -ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
- நீச்சல், தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் உள்பட 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
- காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 111 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய மொழிகளின் தொழில்நுட்ப மேம்பாடு - சென்னை ஐஐடியில் ஆய்வு மையம் தொடக்கம்
- இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நுட்ப வளங்களை கட்டமைக்கும் நோக்கத்தில் சென்னை ஐஐடி சார்பில் 'ஏஐ4 பாரத்'என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இதன்மூலம் கடந்த 2 ஆண்டாக இந்திய மொழி தொழில்நுட்பத்துக்காக இயந்திர மொழி பெயர்ப்பு (Machine Translation), தானியங்கிப் பேச்சு அறிதல் (Speech Recognition) உட்பட பல்வேறு பங்களிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- அதன் தொடர்ச்சியாக இந்திய மொழி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் சென்னை ஐஐடியில் 'பாரத் நிலேகனி மையம்' தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிலேகனி தொண்டு நிறுவனம் ரூ.36 கோடி நிதியுதவிவழங்கியுள்ளது.
- இதன் தொடக்க விழா கிண்டி ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மையத்தை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, நந்தன் நிலேகனி ஆகியோர் திறந்து வைத்தனர்.
குஜராத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் 3 புதிய திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- குஜராத்தின் சபர்கந்தா மாவட்டம், கதோடா சவுக்கி என்ற இடத்தில் சபர் பால் பண்ணை உள்ளது. இங்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான 3 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- இதில் நாளொன்றுக்கு 120 டன் உற்பத்தி திறன் கொண்ட பால் பவுடர் ஆலை மற்றும் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பதப்படுத்திய பாலை பாக்கெட்டில் அடைக்கும் ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ரூ.600 கோடி செலவிலான பால் பொருட்கள் உற்பத்தி ஆலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடங்கியதாக பிரதமர் அறிவித்தார்
- பிரதமர் திரு.நரேந்திர மோடி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார்.
- தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் திரு.அனுராக் சிங் தாக்கூர், திரு.எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தலைவர் திரு.ஆர்காடி ஓர்கோவிச் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதலாவது ஜோதி ஓட்டத்தை புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய விளையாட்டரங்கில் பிரதமர் ஜூன் 19, 2022 அன்று தொடங்கி வைத்தார்.
- கடந்த 40 நாட்களாக சுமார் 20,000 கி.மீ. தொலைவிற்கு சிறப்புமிக்க 75 இடங்களை கடந்து போட்டி நடைபெறும் மகாபலிபுரத்தை செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தடைந்தது.
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மகாபலிபுரத்தில் 2022, ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
- 1927 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இப்போட்டி முதன் முறையாக இந்தியாவிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவில் முதன் முறையாகவும் நடைபெறுகிறது. இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் இந்தியா 6 அணிகளைச் சேர்ந்த 30 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுபிரிவினருக்கான முதல் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அதைப்போன்று பெண்களுக்கான முதல் போட்டியில் அமெரிக்கா விளையாட உள்ளது.
- இப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு காய்களை டாஸ் போட்டு தேர்ந்தெடுப்பார்கள். இதையடுத்து பிரதமர் அந்த காய்களை தேர்ந்தெடுத்தார்.
- அப்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் கருப்பு நிற காய்களை பிரதமர் தேர்ந்தெடுத்தார். அதன்படி இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் அமெரிக்கா வீரர்கள் கருப்பு நிற காய்களுடன் விளையாட உள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் கையெழுத்து
- நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், அவர் நீதித்துறை நியமனத்துக்கான உத்தரவில் முதல் கையெழுத்தை போட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் ஷெகாரியை நியமிப்பதற்கான ஆணையில் அவர் கையெழுத்திட்டார்.
- இது தொடர்பாக, ஒன்றிய நீதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 224வது பிரிவின் மூலமாக வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் ஷெகாரியை ஜனாதிபதி திரவுபதி நியமித்துள்ளார்.
- இவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து 2 ஆண்டுகள் பணியில் இருப்பார்,' என்று கூறப்பட்டுள்ளது.
முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் 'விக்ராந்த்' இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
- கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (சிஎஸ்எல்) நிறுவனத்திடம் இருந்து மதிப்புமிக்க உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் விக்ராந்தை டெலிவரி செய்து இந்திய கடற்படை இன்று கடல்சார் வரலாற்றை உருவாக்கியுள்ளது.
- இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தால் (DND) வடிவமைக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் (MoS) கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் தளமான CSL ஆல் கட்டப்பட்டது.
- 'விக்ராந்த்' 262-மீட்டர் நீளமுள்ள கேரியர் அதன் முன்னோடி கப்பல்களை விட மிகப் பெரியது, 45,000 டன்களுக்கு முழு இடப்பெயர்ச்சியைக் கொண்டுள்ளது.
- மொத்தம் 88 மெகாவாட் ஆற்றல் கொண்ட நான்கு எரிவாயு விசையாழிகளால் இந்த கப்பல் இயக்கப்படுகிறது மற்றும் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும். சுமார் 20,000 கோடி ரூபாய் செலவில் இக்கப்பல் கட்டப்பட்டது.
- விக்ராந்தின் டெலிவரி மூலம், விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கும் திறன் கொண்ட நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் இந்தியா இணைந்துள்ளது.
உலக வங்கி தலைமைப் பொருளாதார வல்லுநராக 2-வது இந்தியர் இன்டர்மிட் கில் நியமனம்
- உலக வங்கியின் தலைமைப்ப பொருளாதார வல்லுநராக இந்தியாவைச் சேர்ந்த இன்டர்மிட் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை அலங்கரிக்கும் 2-வது இந்தியர்.
- இதற்கு முன் கவுசிக் பாசு, 2012-2016ம் ஆண்டுவரை தலைமைப் பொருளாதார வல்லுநராக இருந்தார். அதன்பின் தற்போது கில் நியமிக்கப்படுகிறார்.
- இது தவிர சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியரான ரகுராம் ராஜன், உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் ஆகியோரும் நியமிக்ககப்பட்டனர்.
- உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநராக நியமிக்கப்பட்டுள்ள இன்டர்மிட் கில்லுக்கு 20 ஆண்டுகாலம் 1993 முதல் 2016 வரை உலக வங்கியில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது.
- உலக வங்கியின் தலைமைப் பொருளாதார அலுவலகத்தில் மேம்பாட்டுக் கொள்கை வடிவமைப்பு இயக்குநராக, ஐரோப்பிய, மத்திய ஆசியாவுக்கு தலைமைப் பொருளாதார வல்லுநராக கில் பணியாற்றியுள்ளார்.