2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை - 9-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்த இந்தியா
- 15-வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
- கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறும். இந்திய அணி 'பி' பிரிவில் விளையாடியது. முதல் சுற்றில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றான கிராஸ்-ஓவரில் ஸ்பெயினுக்கு எதிராக விளையாடியது.
- அதில் 0-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
- இதில் கனடா மற்றும் ஜப்பானை வீழ்த்தி 9-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்துள்ளது இந்தியா. ஜப்பான் அணிக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதில் வந்தனா கட்டாரியா அதிகபட்சமாக மூன்று கோல்களை பதிவு செய்துள்ளார்.
- கடந்த முறை 8-வது இடத்தில் இந்தியா தொடரை நிறைவு செய்திருந்தது. இதுவரை இந்திய அணி இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பால்வெளி கிரகத்தில் தண்ணீருக்கான அறிகுறி - ஜேம்ஸ் வெப் அடுத்த கண்டுபிடிப்பு
- பூமியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் முதலாவது வண்ணப்படம் நேற்று முன்தினம் வெளியானது.
- இதன் மூலம், 1300 ஒளி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிய முடிந்தது. இந்த புகைப்படம் உலகளவில் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- இந்நிலையில், பால்வெளி மண்டலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை, 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.
- அங்குள்ள சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் இந்த கிரகங்களில், வாஸ்ப்-96 பி என்ற கிரகமும் ஒன்று. இதில், தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது என நாசா தெரிவித்தது.
- வியாழனை விட பாதிக்கும் குறைவாகவும், விட்டத்தில் 1.2 மடங்கு பெரியதாகவும் உள்ள வாஸ்ப்-96 பி கிரகம், சூரியனைச் சுற்றி வரும் மற்ற கோள்களை விட மிகவும் பிரகாசத்துடன் ஒளிர்கிறது. இது, 538 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலையுடன் உள்ளது என்று நாசா கூறியுள்ளது.
- இதற்கு முன்பு, நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி, கடந்த 20 ஆண்டுகளாக பால்வெளி மண்டலத்தில் காணப்படும் பல சிறு கிரகங்களை ஆராய்ந்து, 2013ம் ஆண்டில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தது.
- ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் குறுகிய கால கண்டுபிடிப்புகள், பூமிக்கு அப்பால் மனிதன் வாழக் கூடிய கிரகங்களை கண்டறியும் விஞ்ஞானிகளின் தேடலில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.
2 மாநிலங்கள், 3 ஆன்மிக தலங்களை இணைக்கும் புதிய ரயில் பாதை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ரூ.2798.16 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள தரங்கா இந்த புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 116.65 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படவுள்ள இந்த புதிய ரயில் பாதை பணிகள் 2026 - 27-க்குள் நிறைவேற்றி முடிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணியின் போது, சுமார் 40 லட்சம் மனித வேலை நாள் அளவிற்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் முக்கியமானதாக திகழும் அம்பாஜி-க்கு, குஜராத்திலிருந்தும் நாட்டின் பிறபகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
- இந்த புதிய ரயில் பாதை மூலம் பக்தர்கள் எளிதாக பயணம் செய்யும் வசதியை ஏற்படுவதுடன், தரங்கா மலை மீது உள்ள அஜித்நாத் ஜெயின் (24 ஜைன தீர்த்தங்கரர்களில் ஒருவர்) கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இணைப்பு வசதி கிடைக்கும்.
- புதிய ரயில் பாதை, குஜராத்தின் பனஸ்கந்தா மற்றும் மெஹ்சானா மாவட்டங்கள் மற்றும் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டம் வழியாக அமைக்கப்பட உள்ளது.
- இந்த புதிய ரயில்பாதை முதலீடுகளை ஈர்ப்பதுடன், அந்த பிராந்தியத்தின் ஒட்டு மொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநில கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க நீதியரசர் முருகேசன் முழு முடிவு
- தமிழகத்திற்கென பிரத்யேகமாக கல்வி கொள்கை வடிவமைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தற்போது 2 கூட்டங்களாக அந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
- இந்நிலையில், மாநிலம் முழுவதும் கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக பொதுமக்கள் அனைவரிடம் கருத்துக்களை பெற இக்குழு முடிவு செய்திருக்கிறது.
- அதன்படி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, அதன் மூலமாக கல்வி கொள்கை வரையறை குழுவானது ஆலோசனை நடத்தவிருக்கிறது.
- ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது.
- மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும், இதற்கான முகவரி விரைவில் வெளியிடப்படும் என்றும் கல்வி கொள்கை முழு தகவல் அளித்துள்ளது. மாநில கல்வி கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் ஜூலை 27ல் நடைபெற உள்ளது.